திங்கள், 21 டிசம்பர், 2009

தலையங்கம்: யாருக்காக, அரசு யாருக்காக?



பணிக்கொடை வழங்கல் (திருத்தப்பட்ட) சட்டம்-2009' மசோதா மக்களவையில் இரு நாள்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. 1997 ஏப்ரல் 3, என்று முன் தேதியிட்டு அமலாகும் இச்சட்டத்தின் மூலம் இந்தியாவில் சுமார் 60 லட்சம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களும் பயனடைவர் என்பதுதான் இந்த சட்டத் திருத்தத்தின் மிக முக்கியமான பாராட்டுக்குரிய அம்சம். 2004-ம் ஆண்டு, ஆமதாபாத் தனியார் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், "ஆசிரியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் (பி.எப்.) இருந்தாலும்கூட, பணிக்கொடைச் சட்டம் 1972-ல் உள்ள "தொழிலாளர்' என்ற சொல்லின் வரையறைக்குள் ஆசிரியர்களைச் சேர்க்க இயலாது' என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் முதலாக இருந்துவந்த சிக்கல் தற்போது நீங்கியுள்ளது. தற்போதைய சட்டத்தின் மூலம் தனியார் கல்விக்கூடங்களின் நிரந்தர ஆசிரியர்கள் மட்டுமே பயன்பெறுவர். தாற்காலிக ஆசிரியர்கள் என்ற போர்வையில் பல ஆண்டுகளாகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் இதன் பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். தமிழகத்தின் தனியார் பள்ளிகள், கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சிலர் மட்டுமே நிரந்தர ஆசிரியர்களாக இருக்கிறார்கள். தாற்காலிக ஆசிரியர்கள் அல்லது பயிற்சி ஆசிரியர்கள் என பலர் வேலை செய்கிறார்கள். இவர்கள் எந்தவித உரிமையும் சலுகையும் கோரக் கூடாது என்ற "நல்லெண்ணத்துடன்', பள்ளி/கல்லூரி இறுதித் தேர்வு முடிந்தவுடன் பணிவிலகச் செய்து, மீண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் புதிதாகப் பணியில் சேர்ந்ததாகக் காட்டும் வழக்கம் பல தனியார் கல்வி நிறுவனங்களில் வழக்கத்தில் உள்ளது. இவர்கள் இரண்டு மாத ஊதியத்தை இழப்பது மட்டுமன்றி, தொடர்ச்சியான பணிக்காலம் இல்லாத நிலைமையும் உருவாக்கப்படுகிறது. இதெல்லாம் கல்வித் துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடப்பதாக நினைத்தால் அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய நடைமுறைகளுக்குக் காரணம், இவர்கள் குறிப்பிட்ட காலம் தொடர்ச்சியாகப் பணியாற்றியதாகப் பதிவேட்டில் இடம்பெற்றுவிட்டால், இவர்களை நிரந்தர ஊழியர்களாக்கி அதிக ஊதியம் அளிக்க வேண்டுமே என்ற "பெருந்தன்மை'தான். இதனால் இந்த ஆசிரியர்கள் அடைந்த, அடையும் துயரங்கள் மிகப்பல.கடந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் நியமன நேர்காணலின்போது, பணிக்காலத்தின் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மதிப்பெண் உண்டு என்பதால் பணியாற்றிய கல்வி நிறுவனங்களிடம் சான்றுக்கடிதம் கிடைக்கத் தவமாய்த் தவம் கிடந்த ஆசிரியர்களின் நிலை அவலத்திலும் அவலம். இதே நிலைமைதான் பணிக்கொடை விஷயத்திலும் நிகழக்கூடும். இடையில் இரு மாதங்கள் பணிமுறிவு ஏற்பட்டுள்ளதைக் காட்டி பணிக்கொடை வழங்காதிருக்க அத்தனை முயற்சிகளையும் தனியார் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ளும். பணிக்கொடை என்பது, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளிக்கு அவர் பணியிலிருந்து விலகினாலோ, ஓய்வு பெற்றாலோ அல்லது மரணமடைய நேரிட்டாலோ வழங்கப்படும் பணிக்காலப் பலன்களில் ஒன்று. இத்தொகை பணிக்காலத்தின் அளவைப் பொறுத்து அதிகரித்துக் கொண்டே செல்லும். சில நிகழ்வுகளில் பணிமுறிவு ஏற்பட்டாலும், அதை தொடர்ச்சியான பணிக்காலமாகக் கணக்கிடலாம் என்று இச்சட்டம் அனுமதிக்கிறது. கதவடைப்பு , வேலைநிறுத்தம், உற்பத்தி நிறுத்தம், தொழிலாளிக்குச் சம்பந்தமில்லாத காரணங்களால் ஏற்பட்ட வேலையில்லாக் காலம் என சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், தொழிலாளி என்பதில் ஆசிரியர்களும் அடங்குவர் என்று மட்டும்தான் இந்தச் சட்டத் திருத்தத்தில் உள்ளதே தவிர, தொழிற்கூடம் என்பதில் கல்வி நிறுவனமும் அடங்கும் என்று திருத்தமாகச் சொல்லப்படவில்லை.ஆசிரியருக்குப் பணிக்கொடை வழங்கத் தயார் ஆனால், தொழிற்சாலைக்கான பணிமுறிவு விதிவிலக்குகள் கல்விக்கூடத்துக்குப் பொருந்தாது என்று கல்வி நிறுவனங்கள் வாதிட வாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் 10 ஆசிரியர்களுக்குக் குறைவாக உள்ள கல்விக்கூடங்களை இச்சட்டம் கட்டுப்படுத்துமா என்பதிலும் தெளிவில்லை. மக்களவையில் இந்த மசோதா முறையாக விவாதிக்கப்பட்டிருந்தால், இத்தகைய சிக்கல்களை யாரேனும் முன்வைக்க, இதற்கான தீர்வுகளும் ஏற்பட்டிருக்கும். ஆனால், விவாதம் ஏதும் இல்லாமல் நிறைவேறிய தீர்மானம் ஆயிற்றே!தமிழ்நாடு கல்வித்துறை சரியான முறையில் இந்தப் பிரச்னையை அணுகுமேயானால், ஒரு அரசாணை பிறப்பித்தாலே போதும், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியும். ஒரு கல்விக் குழுமத்தின் எந்தவொரு கிளை என்ற போதிலும், ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர், கல்வியாண்டின் இறுதியில் விலகி மீண்டும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் அதே நிறுவனத்தில் ஆசிரியராகச் சேர்ந்திருப்பார் என்றால்,அவரது பணிக்காலம் தொடர்ச்சியான ஒன்றாகவே கணக்கிடப்பட வேண்டும்' என்று ஓர் அரசாணை போதும்; அனைத்து தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கும் பணிக்கொடை பலன் கிடைக்கும்.சட்டமும் அரசாணையும் வந்தாலும் அதைக் கடுமையாக அமல்படுத்தினால்தான் அதன் நோக்கம் நிறைவேறும். தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணய விஷயத்திலேயே இன்னும் முடிவு எதுவும் எடுக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை இந்த விஷயத்திலாவது சுறுசுறுப்பாகச் செயல்பட்டால், ஆசிரியர்கள் வாழ்த்துவார்கள். அரசு, ஆசிரியர்களின் நலனைக் கருதிச் செயல்படப் போகிறதா? இல்லை தனியார் பள்ளிகளை நடத்தும், பாதுகாக்கும் அரசியல்வாதிகளின் சார்பாக நடந்துகொள்ளப் போகிறதா?
கருத்துக்கள்


இம்முறைகேடுகள் பள்ளிக் கல்வியில் மட்டும் என்றில்லாமல் கல்லூரிக் கல்வி, தொழிற் கல்வி என எல்லாக் கல்வி சார் துறைகளிலும் நடப்பதுதான். எனவே இடைக்கால - தற்காலிக - நியமனங்கள் முற்றிலும் தகுதியானவர்களைக் கொண்டு விதிகளுக்கு இணங்கவே மேற் கொள்ளப்படவேண்டும். இவை உண்மையிலேயே நிலையான நியமங்கள் வரையிலான இடைக்கால நியமனங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை அரசு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறான நடைமுறையைப் பின்பற்றினால் இயல்பாகவே பணிக்கொடை முதலான சலுகைகள் ஆசிரியப் பணியாளர்களுக்குக் கிடைக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 3:35:00 AM

தினமணி சரியான வினாக்களை எழுப்பியிருந்தாலும் கோடை விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பி விட்டுப் பின்ன மீண்டும் கல்வியாண்டுத் தொடக்கத்தில் பணி வழங்கும் அவல நிலை தனியார் நிறுவனங்களில் மட்டும்தான் இருப்பதாகக் கருதுகிறது. அரசின் துறைகளிலும் அதே நிலைதான். ஒப்பந்த ஆசிரியர்களை அவ்வாறு விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பாவிட்டால் கருவூலத்தில் பணம் பெற இயலாது என்ற நிலைமையும் கூட. ஆனால் இந்த நிலைமை தொடர்வதற்குக் காரணம் பெரும்பாலும் இத்தகைய நியமனங்கள் விதிகளுக்கு இணங்க அமையாமைதான். எனவே. குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டவர்கள், பொறுமையாக இருந்து, பின்னர் நிலையாக அமர்த்தப்படும் வாய்ப்பிற்காக இதனைச் சகித்துக் கொள்கிறார்கள்.இம்முறைகேடுகள் பள்ளிக் கல்வியில் மட்டும் என்றில்லாமல் கல்லூரிக் கல்வி, தொழிற் கல்வி என எல்லாக் கல்வி சார் துறைகளிலும் நடப்பதுதான். எனவே இடைக்கால - தற்காலிக - நியமனங்கள் முற்றிலும் தகுதியானவர்களைக் கொண்டு விதிகளுக்கு இணங்கவே மேற் கொள்ளப்படவேண்டும். இவை உண்மையிலேயே நிலையான நியமங்கள் வரையிலான இடைக்கால நியமனங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை அரசு கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ்

By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 3:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக