கோவை, டிச. 24: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி கோவையில் உள்ள கடைகள், ஹோட்டல்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
கடைகள், நிறுவனங்கள், ஹோட்டல்களில் பெயர்ப் பலகைகள் அமைப்பதற்கென்றே தனி நடைமுறைகளை தொழிலாளர் துறை வகுத்துள்ளது. இதன்படி எந்தவொரு வணிக நிறுவனத்தின் பெயர் பலகையிலும் நிறுவனத்தின் பெயர் முதலில் தமிழிலும், அடுத்ததாக ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. பெரும்பகுதி கடைகளின் பெயர்ப் பலகைகளில் ஆங்கிலத்தில்தான் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்பதைத் தீவிரமாக அமல்படுத்த தொழிலாளர் துறை நடவடிக்கையைத் துவக்கியுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் துறை துணை ஆணையர் ப.மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்தி: 1947-ம் ஆண்டின் கடைகள் நிறுவனச் சட்டம், 1958-ம் ஆண்டின் ஹோட்டல் நிறுவனச் சட்டத்தின்கீழ் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோவையில் வரும் ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தங்களது பெயர்ப் பலகையில் பெயர்களை தமிழில் பெரிதாக எழுத வேண்டும். பிற மொழி எழுத்துக்களை 2-வதாகவும், ஆங்கிலத்தில் 3-வதாகவும் பெயர்கள் எழுத வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வகையில் பெயர்ப் பலகைகளை வைக்கத் தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் 5 பங்கும் ஆங்கிலத்தில் அடுத்து 3 பங்கும் பிற மொழியில்- தேவையெனில் 2 பங்கும் இருக்க வேண்டும் என்பது விதி.ஆனால்,இங்கு தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. செய்தியில் தவறு எனில் திருத்திவெளியிட வேண்டும். ஆணையர் அறிக்கை யெனில் ஆணையை நன்கு படித்து அதற்கேற்ப மறு அறிக்கை அளிக்க வேண்டும். நடைமுறையில் தமிழில் பெயருக்கு முதலில் சிறியதாக எழுதி விட்டுப் பின் பெரிய எழுத்துகளில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழி மாநாட்டிற்கு வரும் அயல்நாட்டினர் கோயம்புத்தூருக்கு மட்டும் செல்வதாகக் கருதாமல் தமிழ்நாடு முழுமையும் தொழிலாளர் துறையும் தொழிற்சாலைத் துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும் மாவட்ட நிருவாகங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனப் பூர்வமான முயற்சி எனில், தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
12/25/2009 4:15:00 PM