புதன், 23 டிசம்பர், 2009

இந்தியா தலையிடுவதால்தான் நெருக்கடி: மாவோயிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு



இந்திய அரசைக் கண்டித்துப் பேசிய நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா.
புதுதில்லி,டிச.22: நேபாள நாட்டின் அரசியல் உள் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடுவதால்தான் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார் நேபாள மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசண்டா.​ பிரதமர் மாதவ் குமார் நேபாள் தலைமையிலான 22 கட்சி கூட்டணி அரசுக்கு எதிராக நேபாளத்தில் 3 நாள்களுக்குப் பொது வேலை நிறுத்தம் நடத்த வேண்டும் என்று அறிவித்து,​​ நாட்டையே முடக்கிய பிரசண்டா தலைநகர் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட் தொண்டர்களிடையே செவ்வாய்க்கிழமை பேசினார்.​ அப்போது இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.​ ​ ​ இப்போதுள்ள அரசுக்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் இடம் பெறும் தேசிய அரசை வரும் ஜனவரி 24-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும்;​ நேபாள ராணுவத்தில் எங்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆயுதப்பயிற்சி பெற்ற தொண்டர்கள் அனைவரையும் சிப்பாய்களாகச் சேர்க்க வேண்டும்.​ தேசிய அரசின் உள்நாட்டு,​​ வெளிநாட்டுக் கொள்கைகள் நேபாளத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும்.​ மன்னராட்சியை எதிர்த்துப் போரிட்ட மாவோயிஸ்ட் தொண்டர்களை நேபாள ராணுவத்தில் அப்படியே சேர்க்க தயக்கம் காட்டக் கூடாது.​ இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நேபாள அரசு நிர்வாகம் நடைபெறக்கூடாது.​ நேபாளத்தில் எந்த இனத்துக்கும் பிரதேசத்துக்கும் தனி ஆட்சி உரிமை தரப்படக் கூடாது.​ இந்த நிபந்தனைகளை மாதவ்குமார் நேபாள் அரசு ஏற்றுக்கொள்ளாவிடில் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் எச்சரித்தார் பிரசண்டா.​ இந்திய அரசுக்கு மாதவ் குமார் நேபாள் தலைமையிலான இந்த அரசு கைப்பாவையாகச் செயல்படுகிறது;​ எதைச் சொல்வதானாலும் செய்வதானாலும் புதுதில்லியை ஆலோசனை கலந்தே செயல்படுகிறது.​ இனி நம்முடைய கோரிக்கைகளுக்காக புதுதில்லியுடனேயே நேரடியாகப் பேசிவிடலாம் என்றிருக்கிறேன் என்று குத்தலாகவும் அவர் குறிப்பிட்டார்.​ நேபாள ராணுவத்தில் மாவோயிஸ்ட் தொண்டர்களை அப்படியே சேர்ப்பதால் ஆபத்து,​​ அப்படிச் செய்யக்கூடாது என்று இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறியிருக்கிறார்.​ அப்படிக் கூற அவர் யார்?​ நேபாளத்தின் உள் விவகாரத்தில் தலையிடவும் கருத்து கூறவும் அவருக்கு அதிகாரம் யார் தந்தது என்று பிரசண்டா கேட்டபோது தொண்டர்கள் கைதட்டி அதை வரவேற்றனர்.​ நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிரான கிளர்ச்சியை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ​(மாவோயிஸ்ட்)​ தொடங்கியதிலிருந்தே சீன அரசும் பாகிஸ்தான் அரசும் அந்தக் கட்சிக்கு தேவைப்படும் எல்லா உதவிகளையும் அளித்து வருகின்றன.​ இந்த உதவிகளும் தார்மிக ஆதரவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னமும் தொடர்கின்றன.​ நேபாளம் மட்டுமே உலகின் ஒரே ஹிந்து ராஜ்யமாகத் திகழ்ந்ததாலும் ஹிந்துக்களுக்கு நேபாளம் புனித யாத்திரைத் தலம் என்பதாலும் நேபாளத்துடன் இந்தியாவுக்கு நெருக்கமான சமூக,​​ பொருளாதார,​​ கலாசார உறவுகள் நிலவுகின்றன.மேற்கு வங்க மாநிலத்தில் வந்து குடியேறிய நேபாள கூர்க்கர்கள் தனி மாநிலம் கேட்கும் அளவுக்கு அவர்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பரந்துபட்டு வசிக்கின்றனர்.​ நேபாளத்தில் மாதேசிகள் என்ற இந்திய சமவெளிப்பகுதி மக்களும் வசிக்கின்றனர்.​ ஆடு,​​ மாடுகளை மேய்த்தல்,​​ விவசாயம் போன்ற தொழில்களைச் செய்துவரும் அவர்கள் நேபாளத்தில் அதிலும் குறிப்பாக மாவோயிஸ்டுகளின் தலைமையிலான பிரதேசத்தில் சேர்ந்து வாழ விரும்பவில்லை.​ எனவே அவர்கள் மாவோயிஸ்டுகளைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.​ அவர்களை இந்தியாதான் தூண்டி விடுகிறது என்று மாவோயிஸ்டுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகின்றனர்.​ அவர்களை மனதில் வைத்துத்தான்,​​ நேபாளத்தின் எந்தப் பகுதிக்கும் எந்த இனத்துக்கும் தன்னாட்சி உரிûமையைத் தர முடியாது என்று பிரசண்டா பேசியிருக்கிறார்.
கருத்துக்கள்

இந்தியா வல்லரசாகத் திகழ வேண்டும் என்ற ஆசையில் சிறிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் ஆரியதாசர்களுக்குக் கைக் கூலியாய் வேலை செய்வதையும் விரும்புகிறதே! இந்திய மக்களுக்கு இப்படிப்பட்ட எண்ணம் இல்லாவிட்டாலும் நரிமனம் கொண்டோர்தானே தொடர்ந்து இந்திய அரசில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். உங்கள் நாட்டுச் செயல்பாடுகளில் குறுக்கிடுவோர் மீது படைநடவடிக்கை எடுங்கள். வாலைச் சுருட்டிக் கொண்டு பின்வாங்குவார்கள். மனித நேயம் மலருவதற்கான செயல்பாடுகளில் கருத்து செலுத்துங்கள். இந்திய மக்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள். ஆனால், உங்கள் நாட்டில் தமிழ் மக்கள் யாரும் இருக்கக் கூடாது. இருந்தால் தமிழக அரசியல் வாதிகள் உங்களுக்கு எதிரானவரகளுடன்தான் கை கோப்பார்கள். இவர்களுக்கு அடுத்த இனத்தவர்களுக்கு உதவவும் தமிழினத்தை அழிப்பவர்களுடன் கூடிக் குலாவவும் மட்டுமே தெரியும். நேபாளத்தில் மனித நேயம் மலரட்டும்! மக்களாட்சி நிலைக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/23/2009 2:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக