வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

கொடுங்கோலன் இட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்!!

கொடுங்கோலன் இட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்!!


உலகில் எத்தனையோ வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளைக் கேட்பார் அற்று விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. கொடுங்கோலனான இட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன், அடி பணியவைத்தவன் ஒருவன் இருந்தான் என்றால் நம்புவீர்களா?  அதுவும், அவன் தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? ஆம் தோழர்களே! அந்த வீரன் வேறு யாருமில்லை; அவன்தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன்.செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கை என்னவெனில். தமிநாட்டு அரசே 2009ஆம் ஆண்டுதான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரைப் பெருமைப்படுத்திச் சிலை ஒன்றை நிறுவியது!

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் ‘செய் இந்து (ஹெய் ஹிந்த்)’ என்னும் முழக்கத்தை, முதன் முதலில் உரைத்தவர் வங்காளச் சிங்கம் சுபாசு சந்திரபோசு எனப் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய நாட்டுப் படையின் போர் முழக்கம் ‘செய் இந்து’ என்பது உண்மையே! ஆனால் அவருக்கு முன்பே ‘செய் இந்து’ முழக்கத்தை முழங்கி இந்திய நாட்டுப் படையை உருவாக்கிய பெருமை செண்பகராமன் எனும் தமிழனுக்குத்தான் உரியதென்றால் வியப்பாக இருக்கிறதில்லையா? யார் அந்த செண்பகராமன் எனப் பார்ப்போம்!
பாரத அன்னையின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என்று இந்திய மக்கள் அத்தனை பேரும் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூடப் போராட்டத்தில் குதித்து விட்டார்கள். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்களுக்குத் தலைவனாய் விளங்கினான் பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன். அவன்தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த பெருமகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள்! சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய கட்டாயம். அதனால் செர்மனிக்குப் பயணமானான். ஆங்கிலேயர்களுக்குத் திகைப்பு! இந்தச் சிறுவனால் இஃது எப்படி இயலும்? வியந்தார்கள்!
செர்மனியிலே உயர்கல்வியெல்லாம் முடித்துக் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிர்ந்தார். செர்மனியப் பேரரசராக அப்போதிருந்த கெய்சர் அரசர், தன் உயிர் நண்பனாகச் செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால் மேலும் விளக்கம் தேவையில்லை இல்லையா? முனைவர்.செண்பகராமன் கலந்து கொள்ளாத அரசு விழாவோ விருந்தோ செர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.
தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே இனிமேல்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்கத் தொடங்கினான். இந்தியப் போராட்டத்தைப் பற்றி செர்மனில் நிகழ்ந்த அடுக்கடுக்கான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு ‘இந்திய ஆதரவுப் பன்னாட்டுக் ஆணையம்’ ஒன்று நிறுவப்பட்டது. மாவீரன் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்த ஆணையத்தின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான கருத்துக்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன் இந்திய நலனுக்கு அந்த ஆணையத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக மாவீரன் செண்பகராமன் நடத்திய ‘புரோ இந்தியா’ ( PRO INDIA ) என்ற ஆங்கில இதழ் இந்தியாவை நிறுவும் புரட்சிக் குரலாகியது.
இட்லர் மன்னிப்புக் கோரல்
ஒருநாள் முனைவர்.செண்பகராமன், இட்லர், அவர்தம் நண்பர்கள் ஆகியோர் ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது திமிர் பிடித்த இட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும் இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினான்.
‘விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது’ என்றான் இட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் முழங்கினார் செண்பகராமன். இந்தியாவின் பழம்பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் அறிவாற்றல் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை இட்லர் முன் எடுத்துரைத்தார். முனைவரின் முழக்கத்தைக் கேட்ட இட்லர் உண்மையிலேயே திகைத்து விட்டான். முனைவர்.செண்பகராமன் முன் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினான். வாயளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது; எழுத்தாலும் எழுதித் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான முனைவர்.செண்பகராமன். அதன்படியே எழுத்தளவிலும் மன்னிப்புக் கோரினான் இட்லர்.
முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் செர்மனுக்குமிடையில் தொடங்கியது. உடனே முனைவர்.செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு படையாக உருவாக்கினார். போரில் தன் சார்பாக இந்தியர்களைப் பயன்படுத்தச் செர்மனி முயன்றது. அக்கட்டத்தில், “ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் உளப்போக்கைப், போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் தீர்மானம் செய்தனர். செர்மனியர் நலனுக்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமில்லை” என்று நேரு தனது தன்வரலாற்றில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.
இவ்விதம் பாரதத்தின் நலன் கருதிச் செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு ‘இந்திய நாட்டுத் தொண்டர் படை (ஐ.என்.வி)’ என்று பெயரிடப்பட்டது.
சில நிபந்தனைகளோடு, செர்மனி கேட்டுக் கொண்டபடிப் போரில் உதவ ஐ. என். வி எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் செர்மனின் அரசர் கெய்சர் ஏற்றுக் கொண்டார். இந்த நேரத்தில்தான், செண்பகராமனின் அறிவாற்றலைப் பாராட்டி ‘விடுதலை பெற்ற பாரதத்தின் முதல் குடியரசுத்தலைவராக வீரர் செண்பகராமர் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் தனது விருப்பத்தை வெளியிட்டார்.
போரின்பொழுது, எம்டன் என்ற புகழ்பெற்ற நீர்மூழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே அன்று பிரித்தானியர் கலங்கினர். அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் சென்னையிலுள்ள புனித சார்ச்சு கோட்டையைத் தாக்கிப் பிரித்தானிய அரசைக் கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? அந்த மாபெரும் நீர்மூழ்கிக் கப்பலின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான முனைவர்.செண்பகராமன்தான். எம்டன் குண்டு வீச்சு பற்றிய வரலாறு கோட்டைச் சுவரில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும் சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் புரிந்த சாதனைகளைக் கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள்! அவர் வழி நடத்திய ஐ. என். வி-யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென்று வரலாறு கூறுகிறது!
இந்தனை வீரச் சாகசங்களைப் புரிந்து ஆங்கிலேயரைத் திகைக்கச் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்பட்டார்! தன் இறுதிக் குறிக்கோளாக மனைவியிடம் செண்பகராமன் கூறியது,
“இந்திய விடுதலையைக் காணாமல் என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின் எனது சாம்பலைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று, நான் பிறந்த தமிழ்நாட்டில், என் அன்னையின் சாம்பல் சங்கமமான கரமனை ஆற்றில் கரைத்துவிடு! மறுபகுதியை நாஞ்சில் நாட்டின் வளமிக்க வயல்களில் தூவிவிடு! அதோடு, என் உயிர் பிரிந்த பின்னும் என் போராட்டத்தைத் தொடர்ந்து நீ நடத்த வேண்டும்!”
நெஞ்சை உருக்குமாறு மேற்கண்ட வேண்டுகோளை விடுத்த செண்பகராமனின் உயிர் 1934ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாள் இவ்வுலகத்தை விட்டு நீங்கியது!

1 கருத்து:

  1. நன்றி நண்பரே! திவாகர் எழுதிய எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914 என்று ஒரு வரலாற்று நவீனத்தை பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14 வெளியிட்டுள்ளது, செண்பகராமன் பிள்ள என்பவர் அந்தக் கப்பலில் பயணிக்கவுமில்லை, அவர் சென்னையில் குண்டு மழை பொழியவும் இல்லை என்று ஆதாரங்களுடன் எழுதுவதாகக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டுள்ளார். வல்லமை.காம் அந்நூலைப் புகழ்ந்து விமர்சனமும் செய்துள்ளது. செண்பகராமன் பிள்ளை என்று ஒருவர் இல்லவே இல்லை என்று கூறாத வகையில் மகிழ்ச்சி. இவ்விஷயத்தில் தங்கள் ஒத்துழைப்பும் வேண்டும்.

    பதிலளிநீக்கு