திங்கள், 27 ஆகஸ்ட், 2012

திருக்குறள் இசை!



திருக்குறள் இசை!




மெல்லிய மழைத் தூறல் தில்லியை நனைத்துக் கொண்டிருந்த ஞாயிறு மாலை நேரம். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், இனிய இசை கதவிடுக்கின் வழியாகத் தமிழ்ச் சொற்களைச் சுமந்து கொண்டு கசிந்தது.  உள்ளே எட்டிப் பார்த்தால், 14 வயது இளைஞர்!  ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு எனும் திருக்குறளை இசையில் தோய்த்துப் பாடிக் கொண்டிருக்கிறார்!  பெயர் அமுதீசர் சச்சிதானந்தம். ஏறத்தாழ ஒருமணி நேர நிகழ்ச்சியால் அங்கிருந்தவர்களைக் குதூகலிக்கச் செய்தார்.    எங்கள் தந்தை, மூதாதையர் எல்லோரும் இலங்கைத் தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டவர்கள். ஆனால் நான் பிறந்தது கனடாவில். இருந்தாலும் மண்ணின் மொழியும் இசையும் என்னுள் கலந்து விட்டிருக்கிறது!' என்று பணிவு, இறையன்பு, இசைநயம் ஆகியவற்றைக் கலந்து பேசத் தொடங்கினார். தொராண்டோவில் வாழும் இவர் தம்பி கபிலன் சச்சிதானந்தம் மிருதங்கக் கலைஞர்.  தன் அம்மா சுந்தரேசுவரி சச்சிதானந்தமே ஆசிரியை என்று சொன்னார். அதன் பிறகு, வாய்ப்பாட்டைப் பூமா கிருட்டிணனிடம் கற்றார். மிருதங்கத்தைத் திருவாரூர் பக்தவத்சலத்தின் சீடர் கௌரிசங்கர் பாலச்சந்திரனிடம் கற்றார்.  அமுதீசர், முறையாகக் கருநாடக இசையைக் கற்றிருந்தாலும் அரங்கேற்றம் எதுவும் நிகழ்த்தவில்லை. கனடாவில் பல இசை அமைப்புகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். எட்டு வயது ஆனபோது கனடா தெய்விக இசை அரங்கம் என்னும் அமைப்பின் சார்பில் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இசைக் நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளார்.  “ஆனால், அதற்கு முன்பே ஒன்றரை வயதில் மிருதங்கம் வாசிக்கத் தொடங்கினேன் என்கிறார் அமுதீசர். வாய்ப்பாட்டு, மிருதங்க இசை இரண்டும் கற்றிருக்கும் அமுதீசர் நிறைய வழங்குவது வாய்ப்பாட்டு இசைதான்.  எட்டு வயதில் இசை வழங்கத் தொடங்கி, இன்று வரையில் 150 மேடைகளில் தேன் குரலால் கருநாடக இசையை வழங்கியிருக்கிறார். பெரும்பாலும், கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தமிழ் அமைப்புகள், திருக்கோயில்கள், பண்பாட்டு அமைப்புகளின் மேடையில்தான்.  ஆனால் மிகவும் பெருமிதமாக இவர் கருதுவது, கிளீவுலேண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத்தான். அமெரிக்காவில் உள்ள கிளீவுலேண்டில் ஆண்டுதோறும் தியாகையர் வழிபாட்டு இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். “அங்கு 2011ஆம் ஆண்டு தியாகையர் வழிபாட்டை ஒட்டி நடைபெற்ற இசைப் போட்டியில் பல்லவி பாடும் போட்டியிலும், மிருதங்க இசைப் போட்டியிலும் பரிசு பெற்றது எனக்கு நெகிழ்ச்சியான ஒன்று என்கிறார் அமுதீசர். அங்கு, இராக மாலிகை போல ‘தாள மாலிகை எனப்படும் இந்தப் போட்டியில் மூன்று வகையான தாளங்களைக் கலந்து இசைத்தார்.  புகழ்பெற்ற கருநாடக இசையறிஞர் திருச்சி சங்கரனும், இக்கின்சு பாகவதரும் அமெரிக்காவில் நிறுவிய ‘பாரதி கலா மன்றத்தில் பாடியதையும் பெருமையுடன் குறிப்பிட்டார் அந்த இளைஞர்.  இந்தியாவில் தில்லி மட்டுமின்றி பெங்களூர், சென்னை, திருச்சி, திருவரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்று கருநாடக இசைப் பயணம் மேற்கொள்ளும் அமுதீசர், திருவரங்கத்தில் நாதசுர இசையறிஞர் சேக்கு மெகபூபு சுபானியிடம் நாதசுர பாணி இசையைக் கற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இந்த இசையை இதுவரை இணையம் வழியே கற்று வருகிறார் அமுதீசர்.  அமுதீசர் பெருமைப்படுவது, ஆபேரிப் பண்ணை (இராகத்தை) கனடா நாட்டு மண்ணில் பரப்பியதை. “2011ஆம் ஆண்டில், மார்க்காம் நகரத்தில், நான் பயிலும் இராண்டல் பொதுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆபேரிப் பண்ணில் இசைக் குறிப்புகளை ஆயத்தம் செய்து வைத்துக் கொண்டு ‘கருவி (Orchestra) இசை வழங்கினேன்.  அதில், சாக்சபோன், கிளாரினெட்டு, திரம்பெட்டு போன்ற ஐந்து வகையான மேலைநாட்டுக் கருவிகளைக் கொண்டு ஆபேரியை இசைத்தோம். அது ஒருவகையான இணைப்பு இசையாகும் என்று கண்கள் பளிச்சிடக் கூறினார். உயோர்க் இரீசனில் நடைபெற்ற இசைப் போட்டியில் பரிசு வென்ற இவருக்கு இசை தம்பி கபிலன்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக