தமிழர்களிடையே மொழி உணர்வு மங்கி வருகிறது: தமிழறிஞர் பொற்கோ வேதனை
சிதம்பரம், ஆக. 25: பாராட்டும் பண்பும், மொழி உணர்வும் தமிழர்களிடையே மங்கி
வருகிறது என முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் பொற்கோ தெரிவித்தார்.
சிதம்பரத்தை அடுத்த தீப்பாய்ந்த நாச்சியார் கோயில் வளாகத்தில் திருவள்ளுவர்
விருது பெற்ற தமிழறிஞர் பேராசிரியர்
ரா.சாரங்கபாணி நினைவு இலக்கியப் பேருரை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மொழியியல் துறை பேராசிரியர் சை.வை.சண்முகம் தலைமை வகித்தார்.
விழாவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ இலக்கியப் பேரூரையை
தொடங்கி வைத்துப் பேசியது: தமிழர்கள், சான்றோர்களின் அருமை அறிந்து பாராட்டும் பண்பை
வளர்த்துக் கொள்ள வேண்டும். புறம்பேசி அழிந்து போகக்கூடாது.
எந்தச் சமுதாயம் சான்றோர்களை மதித்து ஒரு அங்கீகாரம் அளிக்கிறதோ,
அச்சமுதாயத்தைதான் மற்றவர்கள் மதிப்பார்கள். தமிழக மன்னர்களில் ராஜராஜ சோழன் பல
நாடுகளையும் வென்றதோடு மட்டுமல்லாமல், பல நாட்டினரையும் மதித்தான்.
உலகிலேயே பரந்த மனத்துடன் நீதி தவறாமல் ராஜராஜசோழன் அரசாண்டான்.
திருவல்லிக்கேணி என்ற அழகிய சொல்லை டிரிப்ளிகேன் என்றும், மாமல்லபுரம் என்பதை
மகாபலிபுரம் என்று சொல்வது எவ்வளவு பெரிய மொழிச்சிதைவாகும்.
எனவே தமிழர்கள் தமிழ் உணர்வோடு வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை
உணர்வும், நம் சிறப்பை போற்றும் பண்பும் வளர வேண்டும் என்றார் பொற்கோ.
புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலைப் பேராசிரியர் அ.அறிவுநம்பி
சிறப்புரையாற்றினார். டாக்டர் சா.அந்துவான் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்
துரை.ராமலிங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொறியாளர் செ.மனோகரன் நன்றி
கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக