செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

தமிழ் இனப் படுகொலைப்பணியை எளிமையாக்கப் பயிற்சி தொடரும்

புது தில்லி: இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுவது தொடரும் என்று நடுவண் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் இராசு கூறியுள்ளார்.

கடந்த சூலைத் திங்கள், தாம்பரத்தில், இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. இலங்கைப் படையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று முதல்வர் செயலலிதா தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கிற்கு மடல் எழுதினார்.

சென்னை, தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற இலங்கை வானூர்திப்படையினர் 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா வானூர்திப்படை நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைப் படையினருக்குக் குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து முதல்வர், தலைமையமைச்சருக்கு மீண்டும் மடல் எழுதினார்.

அவர் தனது மடலில், “தொடர் எதிர்ப்புக்குப் பின்னும் இலங்கையைச் சேர்ந்த படை அலுவலர்கள் திசநாயகா மொகட்டலாலகே வெங்கிரா, ஏவ வாசம் கண்டாடகே ஆகியோர் நீலகிரி வெலிங்டன் படைப் பயிற்சிக் கல்லூரியில், 11 திங்கள் பயிற்சி எடுக்கவிடப்பட்டனர். அவர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், அவர்கள் இருவரும், கடந்த மே 19ஆம் நாள் முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அதாவது மே மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி குறித்த உண்மைகள், என் தலைமையிலான அரசுக்குத் தெரிவிக்கப்படாமலேயே மறைக்கப்பட்டுள்ளன. இச்செயல், நடுவண் அரசு அற்பத்தனமாகச் செயல்பட்டு வருவதையே காட்டுகிறது என்று கூறியிருந்தார்.

இது குறித்து, நடுவண் வெளியுறவுத்துறைச் செயலாளர் இரஞ்சன் மாத்தாயிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், “இது கவலைக்குரியது! இது பாதுகாப்புத்துறை தொடர்பானது என்பதால் அவர்களுடன் உரையாடி வருகிறோம் என்று கூறினார்.

தமிழ்நாட்டு முதல்வரின் மடல் குறித்து நடுவண் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் இராசுவிடம் கேட்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில்,

“இலங்கை, இந்தியாவுக்கு நட்பு நாடு. அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும். இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கும். இது பற்றிப் பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அவர், வானூர்திப்படைக் கட்டுப்பாட்டில் உள்ள விசாகப்பட்டினம் வானூர்தி நிலையத்தில் பன்னாட்டு வானூர்திகள் இயக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக