வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மின்தடை, நாய்த் தொல்லைகள் இல்லாத "கனவு நகரம்': மாணவர்களின் விருப்பம்
சென்னை: ""மின் தடை, நாய்களின் தொல்லை இல்லாத நகரம் வேண்டும்; அதுதான் எங்கள் கனவு,'' என, "கனவு நகரம்' குறித்த கலந்துரையாடலில், மாணவர்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், "இந்தோ - ஜெர்மன் அர்பன் மேளா' நடந்து வருகிறது. நேற்று, சென்னை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற, "கனவு நகரம்' குறித்த, கலந்தாய்வு நடந்தது. கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள், 60 பேர் பங்கேற்றனர். இவர்களின், ஜெர்மன் நாட்டின், நகர வடிவமைப்பாளர்கள், ஜெனியா, ஷபீனா ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, "எப்படிப்பட்ட நகரத்தை நீங்கள் விரும்புகிறீர்கள்' எனக் கேட்டனர். சென்னையில் தினமும் மின் தடை இருக்கிறது. எப்போது மின்சாரம் துண்டிக்கப்படும் என்றே தெரியவில்லை. நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எல்லா சாலைகளுமே நெருக்கடி நிறைந்து காணப்படுகிறது. பஸ்களில் செல்லவே பயமாக இருக்கிறது. தெருக்களில், ஆங்காங்கே குப்பை தேங்கிக் கிடக்கிறது. இதனால், சுகாதாரப் பிரச்னைகள் பெரிதாக ஏற்படுகின்றன. நாங்கள் விரும்பும் கனவு நகரத்தில், மின்தடை ஏற்படாத, நாய்கள் தொல்லை இல்லாத, போக்குவரத்து நெரிசல் இல்லாத, குப்பையால் துர்நாற்றம் இல்லாத நகரம் தான் எங்களுக்கு வேண்டும் என, மாணவர்கள் கூறினர்.

சென்னையில் தற்போது நிலவி வரும் பிரச்னைகளை மனதில் வைத்து, மாணவர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். "நகரத்தின் வளர்ச்சிக்கேற்ப கட்டமைப்புக்களை மேம்படுத்தினால், இதுபோன்ற சிக்கல்கள் தீரும்,' என, நிபுணர்கள் மாணவர்களிடம் நம்பிக்கையூட்டினர். பின், ஜெர்மானிய நகரில் உள்ள முக்கியக் கட்டடங்கள் அச்சிடப்பட்ட, அட்டைகள் மாணவர்களிடம் தரப்பட்டன. மாணவர்கள் அட்டையை வெட்டி, ஒட்டி, அழகிய கட்டடங்களின் மாதிரிகளை உருவாக்கினர்.

குப்பை பிரச்னைக்கு தீர்வு? "இந்தோ - ஜெர்மன் அர்பன் மேளா'வின் மற்றொரு நிகழ்வாக, 10 வயதுக்கு உட்பட்ட சிறு வயது மாணவர்களிடம், திடக்கழிவு மேலாண்மை குறிந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. "டெய்லி தம்ப்' அமைப்பின் நிர்வாகி நவநீத் ராகவன், மாணவர்களிடம் பேசியதாவது: நகரில் சேகரமாகும் குப்பையில், 60 சதவீதம் மக்கும் தன்மையுள்ளவை. 20 சதவீதம் மறு சுழற்ச்சி செய்யும் பிளாஸ்டிக்குகளும், 10 சதவீதம் மருத்துக் கழிவுகளும், 10 சதவீதம் பயன்படுத்த முடியாத, நச்சுக்களும் நிறைந்தவை. இவற்றை தரம் பிரித்தால், குப்பைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். மக்கும் தன்மையுள்ள, 60 சதவீதக் குப்பையை, உரமாக்க முடியும், பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்ய முடியும். தற்போது, எல்லா குப்பையையும் ஒன்றாகச் சேர்த்து, குப்பைத் தொட்டியில் போடும் நிலைதான் உள்ளது. இதுவே, சுகாதாரப் பிரச்னைக்குக் காரணமாகிவிடுகிறது. நாமும் பொறுப்போடு நடந்தால், நம் நகரை தூய்மை நகராக்க முடியும். இவ்வாறு நவநீத் ராகவன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக