செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

குறைவான கட்டணத்தில் நிறைவான மருத்துவம்!



குறைவான கட்டணத்தில் நிறைவான மருத்துவம்!

"டிரஸ்ட்' மருத்துவமனை மூலம், குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஜீவானந்தம்: நான், 1980ல் மருத்துவம் முடித்து, ஈரோட்டில் பயிற்சி செய்ய ஆரம்பித்த நாட்களில், வசதியான நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் பணம் இருந்தது; என்னிடம் ஆர்வமும், திட்டமும் இருந்தது. எனவே, ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினோம்.
அப்போது, மெட்ரிக் பள்ளிகள் முளைத்திருந்த நேரம். குறைவான கட்டணத்தில், தரமான கல்வியை வழங்கும் நோக்கில், 20 பேர், ஆளுக்கு, 5,000 ரூபாய் போட்டு, ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியை ஆரம்பித்தோம். இப்போது ஈரோட்டில், வாடகை இடத்தில், மற்ற பள்ளிகளை விட, குறைவான கட்டணத்துடன் அந்தப் பள்ளி வெற்றிகரமாக இயங்குகிறது.
இதே அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான், டிரஸ்ட் மருத்துவமனைத் திட்டம். 25 மருத்துவர்கள், 25 பொதுமக்களுடன், 4.5 கோடி ரூபாய் முதலீட்டில், 2001ம் ஆண்டில் இந்த மருத்துவமனை உருவானது.
இங்கு, அனைத்து விதமான நடைமுறைகளும் வெளிப்படையாக நடைபெறும். மருந்துப் பொருட்களின் விலை, சிகிச்சைக்கான செலவு, ஆக்சிஜன் வைத்தால் எவ்வளவு கட்டணம் என, அனைத்து விவரங்களும் அறிவிப்புப் பலகையில் இருக்கும்; எதுவும் மறைமுகம் இல்லை.
மருந்து, மாத்திரைகளை மக்களே வாங்கி வரலாம். சிகிச்சை முடிந்து திரும்பச் செல்லும் போது, மீதம் உள்ள மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து, பணம் வாங்கிக் கொள்ளலாம்.
கட்டணத்தையும் முடிந்த வரை குறைவாகவே நிர்ணயிக்கிறோம். பொது வார்டில் சேர்ந்து ஒரு நாள் சிகிச்சை பெற, மருத்துவரின் ஆலோசனைகளையும் சேர்த்து, நாங்கள் வாங்குவது, 150 ரூபாய் தான். இது, அரசு மருத்துவமனையில் கம்பவுண்டருக்குக் கொடுக்கும் லஞ்சத்திற்குச் சமம்.
குறைவான லாபம் வைத்து நடத்தப்படும் இந்த மருத்துவமனையில், எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. தரமான, இலவச மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், நம் அரசு, தனியார் மருத்துவத்தை ஊக்குவிக்கும் அளவிற்கு, அரசு மருத்துவமனைகளில் அக்கறை செலுத்துவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக