எங்கெங்கும் படப்பொறி.... -முருகராசு
ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டே போனால் ஆயிரத்து இருபது வரை
எண்ணலாம், எதை என்று கேட்கிறீர்களா... எல்லாம் கேமிராதான். அந்த காலத்தில்
பத்து பேர் சேர்ந்து தூக்கிக் கொண்டு போய் படமெடுத்த பெல்லோஸ் கேமிரா முதல்
ஐந்து செ.மீட்டர் உயரமேயுள்ள சிறிய கேமிரா வரை ஒரே இடத்தில் கண்காட்சியாக
வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார்பேட்டை , கஸ்தூரிரங்கன் சாலை ,
எண் 41ல் உள்ள ஆர்ட் ஹவுசில் நடந்து வரும் இந்த பழங்கால கேமிரா
கண்காட்சியை நடத்தி வருபவர் ஏ.பி.ஸ்ரீதர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை
அடுத்துள்ள பள்ளத்தூரைச் சேர்ந்த ஸ்ரீதர், ஓவியத்தின் மீதான ஆர்வம் காரணமாக
சென்னை வந்தார். ஒரு உத்வேகத்துடன் ஒவியம் பயின்ற இவரை நவீன ஒவியம்
சுவீகரித்துக்கொண்டது.
பலரும் அறிந்த நவீன ஒவிய படைப்பாளியான
இவர் தனது ஒவிய கண்காட்சிக்காக வெளிநாடுகளுக்கு போயிருந்தபோது ஒருவர் பழைய
கேமிராக்களை பொக்கிஷம் போல பாதுகாத்து வருவதைப்பார்த்ததும், தானும் அது போல
பழைய கேமிராக்களை சேகரிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டார்.
கடந்த
10 ஆண்டுகளாக இவர் மேற்கொண்ட இந்த ஆர்வம்தான் இப்போது பழமையான கேமிரா
கண்காட்சியாக உருவெடுத்துள்ளது. முதல் முறையாக இவர் நடத்தும் இந்த பழமையான
கேமிரா கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கேமிராக்களை பார்க்கும் போது
புகைப்படத்தின் மீது யாருக்கும் ஒரு மரியாதை ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு
இந்த கலை வளர்க்கப்பட்டுள்ளதை இந்த கண்காட்சியில் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஒரு
காலத்தில் 25 பேர் 250 கிலோ எடையுள்ள கேமிரா சாதனங்களை தூக்கிச் சென்று
படம் எடுத்துள்ளார்கள். பின் அது கொஞ்சம், கொஞ்சமாக நவீனமாகி இன்று கையடக்க
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வந்து நிற்கிறது. இந்த கேமிராக்களின்
வளர்ச்சியை இந்த கண்காட்சியில் படிப்படியாக அறியலாம்.
வெறும்
கேமிராக்கள் மட்டுமின்றி சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கேமிராவுடன்
இருக்கும் படங்களையும் (உபயம் புகைப்படக்கலைஞர் ஞானம்) கண்காட்சியில்
வைத்துள்ளார். வரும் செப்டம்பர் 10ம்தேதி வரை நடைபெறும் இந்த கேமிரா
கண்காட்சி தொடர்பாக விசாரிக்க போன் எண்:9092861461.
(முக்கிய
குறிப்பு: வாசகர்களே கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பழைய கேமிராக்களில்
சிலவற்றை பார்க்க ஸ்ரீதர் படத்தின் கீழ் போட்டோ கேலரி என்று எழுதப்பட்டுள்ள
சிவப்பு பட்டையை கிளிக் செய்யவும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக