புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி கூடாது: இல.கணேசன்

இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி கூடாது: இல.கணேசன்



கோவில்பட்டி, ஆக. 28: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.  பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் மற்றும் வானவில் பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் மகாகவி பாரதியார் நினைவு நாள் விழா எட்டையபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.  இதை முன்னிட்டு எட்டையபுரத்தில் செவ்வாய்க்கிழமை பாஜக மூத்த தலைவரும், பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பின் தலைவருமான இல.கணேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  முன்னதாக, பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியது: இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழர் பாதிப்புக்கு மத்திய அரசும், அதற்கு உடந்தையாக திமுகவும்தான் காரணம். இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும்; அவர்கள் மீண்டும் மகிழ்ச்சியுடன் சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலை.  லட்சக்கணக்கான தமிழர்களை அழித்துவிட்டு நட்பு நாடு எனக் கூறிக்கொண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது கண்டனத்துக்குரியது. இதில், தமிழக முதல்வரின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது.  2 ஜி, நிலக்கரி ஊழல் என மத்திய அரசு ஊழல்களில் மிதந்து மக்களின் நம்பிக்கையைப் பெற தவறிவிட்டது. எல்லா தவறுகளையும் மூடி மறைக்கும் செயல்களில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. அதை வெளிக்கொண்டு வரவே பாரதிய ஜனதா கட்சி போராடி வருகிறது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக