தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என ப் பெயர் மாற்றம் கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஆக. 28: சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர்
மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி வழக்குரைஞர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் வழக்குரைஞர் கே.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயர் நீதிமன்றத்தில் தமிழையும் வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது
நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா உள்பட பலரும் இந்தக்
கோரிக்கையை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு நிறைவு விழா வரும்
செப்டம்பர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். ஆகவே, இந்த நிகழ்ச்சிக்கு
முன்பாக தமிழையும் உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக அங்கீகரித்து குடியரசுத் தலைவர்
அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அதேபோல் சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று
பெயர் மாற்றம் செய்திட வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிடுமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதல் கையெழுத்து
இயக்கத்தை வழக்குரைஞர்கள் மேற்கொள்வார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்
செப்டம்பர் 3-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார் பாலு.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின்
முன்னாள் தலைவர் பால் கனகராஜ், பொருளாளர் சுதா, வழக்குரைஞர்கள் ரஜினி, மு.
பழனிமுத்து, பாரி, இரா. சிவசங்கர், முத்துராமலிங்கம், விஜயேந்திரன் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக