பாரதியால் போற்றப்பட்டவர் வள்ளுவர்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்
திருநெல்வேலி, ஆக. 25: மகாகவி பாரதியால் போற்றப்பட்டவர் வள்ளுவ பேராசான் எனக்
குறிப்பிட்டார் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியின் தெ.கு. சண்முகசுந்தரம்
கலையரங்கில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கடையம் திருவள்ளுவர் கழகத்தின் 17-ம் ஆண்டு
விழாவில் அவர் பேசியதாவது:
பாரதி அன்பர்களாக இருந்துகொண்டு பாரதியின் பாதங்கள் பட்ட இடத்திற்கும்
மூச்சுக்காற்று உலவிய பகுதிகளுக்கும் வருவது மெக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வதையும்,
காசிக்கும் ராமேசுவரத்துக்கும் ஹிந்துக்கள் செல்வதையும், ஜெருசலேமிற்கு
கிறிஸ்தவர்கள் செல்வதையும் போல பெருமை தரும் விஷயம்.
""யாமறிந்த புலவர்களில் கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்'' என்று
பாரதி குறிப்பிடுவார். கம்பனையும் இளங்கோவனையும் குறிப்பிட்டது போல வள்ளுவன் என்றும்
பாரதி குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. எந்த அளவுக்கு
பாரதி வள்ளுவரை மதித்தான் என்பதை "வள்ளுவர்' என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிந்து
கொள்ளலாம்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் திருவள்ளுவர் கழகங்கள் தோன்ற வேண்டும்,
இளங்கோவுக்கும் கம்பனுக்கும் பாரதிக்கும் விழாக்கள் எடுக்கப்பட வேண்டும்;
அங்கெல்லாம் தமிழ் ஒலிக்க வேண்டும் என்ற ஏக்கம்தான் இதுபோன்ற விழாக்களில் என்னைப்
பங்கேற்கச் செய்கிறது.
இப்படிப்பட்ட விழாக்களில் நான் கலந்துகொள்வதைப் பார்த்து எல்லா ஊர்களிலும்
இலக்கிய விழாக்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதால்தான் நான் மறுக்காமல் திருவள்ளுவர்
கழகம், கம்பன் கழகம் போன்ற அமைப்புகளின் அழைப்பை தட்டாமல் ஏற்றுக்கொள்கிறேன். அதன்
மூலமாவது இலக்கிய ஆர்வம் வளராதா, இளைஞர்களுக்கு மொழி உணர்வு ஏற்படாதா என்கிற
எதிர்பார்ப்புதான் அதற்கு காரணம்.
ஊருக்கு ஊர் திருவள்ளுவருக்கு விழா எடுப்பது என்பது தமிழுக்குப் பெருமை
சேர்ப்பதாக இருக்கும். திருவள்ளுவர் கழகக் கூட்டங்களைப் பள்ளிகளில் நடத்தினால் அங்கு
பயிலும் குழந்தைகளுக்குத் தமிழ் உணர்வு ஏற்படும். ஏதாவது இரண்டு குறள்களையாவது
அவர்கள் கற்க வாய்ப்பு உருவாகும். எனது வேண்டுகோளாக இதை வைக்கிறேன்.
தமிழின் அடையாளம்: செவ்விலக்கியங்களை சராசரி மனிதர்களால் ரசித்து விட முடியாது.
அகநானூறும் புறநானூறும் அற்புதமான இலக்கியங்கள்தாம். ஆனால் அதை புரிந்து ரசிப்பதற்கு
தமிழில் புலமையும் தேவைப்படுகிறது. படித்தவனோ, பாமரனோ, அறிவுஜீவிகளோ, சாமானியர்களோ
எல்லோரும் ரசிக்கக் கூடியது திருக்குறள்தான். தமிழின் அடையாளமாக வள்ளுவர்,
இளங்கோவடிகள், கம்பன், பாரதி ஆகிய நால்வரும் அமைந்துள்ளனர். இதில் ஆதாரசுருதியாக
இருப்பது வள்ளுவம்.
பாரதிக்கு புதுவையும், கடையமும்தான் சிறப்பு சேர்த்தவை. கடையத்தில் பாரதி
பாடிய இடங்களை தகவல் பலகைகளாக வைக்க வேண்டும். திருவள்ளுவர் கழகம் அதற்கு
முன்னோடியாகச் செயல்பட வேண்டும். அதற்கு "தினமணி' ஒத்துழைக்கும்.
புதுவையில் பாரதி குயில் பாட்டு பாடிய தோப்பு இன்று அழிக்கப்பட்டு அடுக்குமாடி
குடியிருப்புகளாக ஆகப் போகிறது. பாரதியின் நினைவு இல்லம் புதுப்பிக்கப்படாமல்
இருக்கிறது. இதைக் கேள்வி கேட்க யாருமில்லை. பாரதி வாழ்ந்த கடையத்தில் பாரதிக்கு
சிலை இல்லை. திருவள்ளுவர் கழகம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டால் தினமணி நிச்சயமாக
ஒத்துழைக்கும். இதற்கு பாரதி அன்பர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்
என்றார் அவர்.
விழாவுக்கு கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ. சேதுராமலிங்கம் தலைமை
வகித்தார். செயலர் மு.செ. அறிவரசன் அறிமுக உரையாற்றினார். பள்ளியின் செயலர் க.சோ.
சேதுராமன் வாழ்த்துரை வழங்கினார்.
விழா நிகழ்ச்சிகள் பாராட்டரங்கம், உரையரங்கம், ஆடல் அரங்கம் என்று 3
பகுதிகளாக நடத்தப்பட்டது.
பாராட்டரங்கம்: இந்நிகழ்வில், கடையம் ஒன்றிய அளவில் உள்ள பள்ளிகளில்
2011-2012-ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்
தேர்வுகளில் முதலிடம் பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்
பரிசு வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்வின் 2-ம் பகுதியாக உரையரங்கம் இடம்பெற்றது. இதில், ஆலங்குளம் ஸ்ரீ
ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் சிவ. மணிமாறன் "நுணங்கிய
கேள்வியர் அல்லார்' என்ற தலைப்பிலும், 11-ம் வகுப்பு மாணவி சிவ. இலக்குமி மணிபாலா "செருநரைக்
காணின் சுமக்க' என்ற தலைப்பிலும் பேசினர்.
ஆடல் அரங்கம்: தொடர்ந்து ஆடல் அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யுவகலா
பாரதி, கலைஇளமணி விருதுகளைப் பெற்ற திருநெல்வேலியைச் சேர்ந்த க. மோனிஷாராஜின் "பாரதிக்குப்
பரதாஞ்சலி' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும், சி. காந்திமதி, இரா. கீர்த்தனா, அ.கா.
அறிவரசி குழுவினரின் நாட்டியமும் இடம்பெற்றது.
விழாவில், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. மு. முத்துசங்கரலிங்கம்,
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி சிறப்பு அலுவலர் மு. சுந்தரம்,
ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் கே.எம். சங்கரநாராயணன், கடையம்
திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் மு.அ. சித்திக், இணைச் செயலர்கள் செ. சோமசுந்தரம்,
ந. சுப்பிரமணியன், இர. இலாபம் சிவசாமி, ம. ஆறுமுகம், மு. வேலு, பொருளாளர் நி.
இந்திரசித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் முகைதீன் அப்துல்காதர் தினமணி ஆசிரியர் கே.
வைத்தியநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பாகப் பேசிய மாணவர் சிவ. மணிமாறன், மாணவி சிவ. இலக்குமி
மணிபாலா மற்றும் மேடையில் திருக்குறள் கூறிய கடையத்தைச் சேர்ந்த சிறுமி அபி
ஆகியோருக்கு தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.
முன்னதாக, கடையம் திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன்
வரவேற்றார்.
ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக