திங்கள், 27 ஆகஸ்ட், 2012

நலப் பேற்றிற்குச் சில குறிப்புகள்








சொல்கிறார்கள்


சுகப் பிரசவத்திற்கு சில "டிப்ஸ்!'

கடலூரைச் சேர்ந்த மூலிகை வைத்தியர் அன்னமேரி: கர்ப்பமான நாள் முதல்,பிரசவமாகும் நாள் வரைக்கும், முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து, "சூப்' வைத்து சாப்பிட்டால், சுகப் பிரசவ மாகும். வாயு அதிகம் உள்ள வாழைக்காய், உருளைக் கிழங்கு, இறால் மீன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது.
கருத்தரித்த மூன்றாவது மாதம் முதல்,பிரசவமாகும் வரை, வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி இரண்டு ஸ்பூன் உடைத்து போட்டு கஞ்சியாக காய்ச்சி, பால் சேர்த்து, மூன்று நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால், சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும்.
ஐந்தாவது மாதம் முதல், எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதி நீரில் கலந்து, காலை அல்லது மதிய வேளையில் சாப்பிடலாம். ஏழாவது மாதத்திற்குப் பின், வடகத்தை பொரித்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து அரை டம்ளரானதும், குடிக்கலாம். இதை வாரத்தில் இரண்டு நாள் செய்தால், சுகப் பிரசவமாகும்.
கர்ப்ப காலங்களில் சிலருக்கு, கை - கால் வீக்கம் வரும். இதற்கு நெல்லிக்காய், முருங்கைக் காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தைசட்டியில் போட்டு வறுத்து, வெடித்ததும், தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். 10 குப்பைமேனி இலையை மென்று, சாப்பிடலாம்; இதெல்லாம் வீக்கத்தை வடித்துவிடும்.
பிரவச நாள் நெருங்கியதும், சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்போது, ஐந்து வெற்றிலை, ஒரு ஸ்பூன் ஓமம், மூன்று பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து, அது வெடித்ததும், நசுக்கிய பூண்டு, பிய்த்துப் போட்ட வெற்றிலையுடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, முக்கால் டம்ளரானதும், எலுமிச்சை அளவு வெண்ணெய் அல்லது பனை வெல்லத்தை சேர்த்துக் குடித்தால், சாதாரண வலியாக இருந்தால் நின்றுவிடும்.
வலி தொடர்ந்தால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் இருந்தே உணவில் சில வரைமுறைகளைக் கடைபிடித்தால், தாய் - சேய் நலம் சீராக இருப்பதுடன், அது சுகப் பிரசவத்திற்கும் வழி வகுக்கும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக