ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

காந்தியடிகளுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியவர்கள் யார்?

காந்தியடிகளுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியவர்கள் யார்?

தெரியுமா உங்களுக்கு?!

Failed To Verify Referrer


இது ஒரு மீள் பதிவு. புதிதாகப் படிப்பவர்களுக்காக…
இன்றைக்கு விடுதலை எனும் சொல்லைக் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருபவர் மகாத்மா எனும் நாட்டுத் தந்தைதாம். அந்த மகாத்மாவை, மகாத்மாவாக ஆக்கியவர்கள் யார் எனும் உண்மையை வரலாற்றாசிரியர்கள் அனைவரும் திறமையாக மறைத்து விட்டார்கள். ஆனால் மகாத்மா காந்தியடிகள் தனது தன்வரலாற்றில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப்பதிவில் பார்ப்போமா?
அப்துல்லா ஆதம் சவேரி, அப்துல் கரீம் ஆதம் சவேரி இருவரும் உடன்பிறந்தவர்கள். குசராத்தில், போர்ப்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று, பெயர் சொல்லும் அளவுக்குக் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ஆம் ஆண்டு ‘தாதா அப்துல்லாக் குழுமம்’ என்ற பெயரில் 50 சரக்குக் கப்பல்களையும், 4 பயணியர் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.
இவர்களின் அலுவலக வேலைகளை முறையாகச் செய்யச் சட்டம் தெரிந்த ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் சவேரி அவர்கள் போர்ப்பந்தரில் தனது வீட்டிற்கு அருகில் இருந்த, சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தியடிகள் அவர்களை அலுவலகப் பணிக்காக அமர்த்த விரும்பித், தன் உடன்பிறந்தவர்களுடன் கலந்துரையாடி 105 பௌண்டு ஊதியத்துக்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.
மதுரை: விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளுக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட இசுலாமிய உடன்பிறப்புக்களின் கப்பலை மீட்டுத் தமிழக அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்.
காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்பிரிக்கப் பயணத்திற்கும் உதவியவர்கள் குசராத்து மாநிலப் போர்ப்பந்தரைச் சேர்ந்த வணிக உடன்பிறப்புக்கள் அப்துல்லா ஆதம் சவேரி, அப்துல் கரீம் ஆதம் சவேரி ஆகியோர். இவர்கள் பேரன் அப்துல்கரீம் அப்துல்லா சவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முதன்மையான பங்கு உண்டு. காந்தியடிகளுக்கு உதவியாக இருந்ததுடன், விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டன. அதில் ஒரு கப்பல் போர்ப்பந்தர்க் கடலில், மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்தக் கப்பலையும், போர்ப்பந்தரிலுள்ள எங்கள் குடும்பச் சொத்துக்களையும் திருட இருவர் முயற்சித்தனர். அவர்கள், காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்று ஆவணங்களைத் திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் குசராத்து அரசிடமும், நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்றக் காங்கிரசுத் தலைவர் சோனியா, குசராத்து முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரைக் கோரினேன். அத்துடன் போர்ப்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலையும் மீட்டுத் தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க நடுவண், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா சவேரி கூறினார்.
அணுஆற்றலால் இயங்கும் அமெரிக்கப் போர்க் கப்பல் நிமிட்சு சென்னைத் துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையொட்டி ஆயிரம் சலசலப்புகள். அமெரிக்காவின் கொடிய போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்சு கப்பல் எனக் கூறிச் சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்ப்பந்தர்த் துறைமுகத்தில் 1906ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க ஓசையின்றிப் போராடி வருகிறது, போர்ப்பந்தரைப் பிறப்பிடமாகக் கொண்ட சவேரி என்கிற குடும்பம்.
வரலாற்றுக் கருவூலங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே எனும் வருத்தம் சவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.
போர்ப்பந்தர்! “பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே!” எனவெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் நாட்டுத்தந்தையான காந்தியடிகள் பிறப்பெடுத்த அமைதியான இடம். குசராத்து மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான் சவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.
இந்தச் சவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்துல்கரீம் என்பவர், மதுரையில் மொத்தத் துணி விற்பனை செய்து வருகிறார். போர்ப்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றிப் பல அரிய தகவல்களை அவர் நம்மிடம் கொட்டினார்.
“என் கொள்ளுத் தாத்தா அப்துல்கரீம் ஆசி ஆதம் சவேரி. அவர் அண்ணன் அப்துல்லா ஆசி ஆதம் சவேரி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்டு கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் இடர்பன் நகரில் கப்பல் நிறுவனம் நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்தக் கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு மட்டும் பயணியர் கப்பல்.
1893ஆம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்துல்கரீம், அவர் அம்மாவைப் பார்ப்பதற்காகப் போர்ப்பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியடிகளைச் சந்தித்தார். காந்தியடிகள் அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளைஞர். அவர் பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால் இடர்பனில் இருந்த அவரது கப்பல் நிறுவனத்தின் சட்டக்குழுவில் காந்தியடிகளைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்தியடிகளுக்கு ஊதியம் அப்போது நூற்று ஐந்து பவுன்.
அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தியடிகள் கப்பலில் புறப்பட்டு இடர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஆசி, காந்தியடிகளைத் துறைமுகத்துக்கு வந்து வரவேற்றிருக்கிறார். காந்தியடிகளின் அரசியல் வாழ்க்கைக்குப் பிள்ளையார்ச் சுழி போடுகிறோம் என்பது என் கொள்ளுத் தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.
எங்கள் நிறுவனத்தின் வழக்கு தொடர்பாக இடர்பனிலிருந்து பிரிட்டோரியா நகருக்குக் காந்தியடிகள் தொடர்வண்டியில் சென்றபோதுதான் மாரிட்சுபார்க் தொடர்வண்டி நிலையத்தில், முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரு வெள்ளையரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில் இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது இந்த நிகழ்ச்சி!
1894ஆம் ஆண்டு மே 22ஆம் நாள், எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ‘நேட்டால் இந்தியன் காங்கிரசு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது இடர்பனில் இருந்த எங்கள் கொள்ளுத் தாத்தாக்களின் வீட்டில்தான் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராகக் காந்தியடிகளும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896ஆம் ஆண்டு அப்துல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தியடிகள் தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.
1897ஆம் ஆண்டு, காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பி, அவர் குடும்பத்தை எசு.எசு.குர்லேண்டு என்ற எங்கள் கப்பலின் மூலம் இடர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியடிகளின் மனைவி கத்தூரிபாய் அம்மையார், இரண்டு மகன்கள், காந்தியடிகளின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.
காந்தியடிகள் இடர்பனுக்குள் நுழைவதை விரும்பாத பிரித்தானிய அரசு, அவரைக் கப்பலிலிருந்து இறங்க ஒப்புதல் அளிக்கவில்லை. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சவேரி உடன்பிறப்புக்களைப் பிரித்தானிய அரசு வற்புறுத்தியது. அதற்காக இழப்பீடு தருவதாகவும் கூறியது. ஆனால் சவேரி உடன்பிறப்புக்கள் அதற்கு இணங்கவில்லை. “எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியடிகளையும், அவர் குடும்பத்தையும் நாட்டுக்குள் விட்டே ஆகவேண்டும்” என்று உறுதியாகக் கூறினார்கள்.
இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு இடர்பன் துறைமுகத்தில் கால்பதிக்கக் காந்தியடிகளுக்கு ஒப்புதல் கிடைத்தது. இந்தத் தாமதத்தால் கப்பல் நிறுவனம் பெரும் இழப்பை அடைந்தது.
நேட்டால் இந்தியன் காங்கிரசின் சார்பில் என் கொள்ளுத் தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’ என்ற இதழை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ‘இயங் இந்தியா’ என்ற செய்தித்தாளை எசு.எசு.கேதிவு என்ற கப்பலில் வைத்து என் முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அஃது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளையர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியடிகளின் தன்வரலாறான ‘சத்திய சோதனை’யில் உள்ளது. (அதையும் நம்மிடம் காட்டுகிறார்).
அப்துல்லாக் கப்பல் நிறுவனத்துக்காக ஒருமுறை, தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தியடிகள் தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளைக்கார நீதிபதியின் கண்ணை உறுத்தியது. அதை அகற்றுமாறு நீதிபதி கூறினார். காந்தியும் கழற்ற முனைந்தார். ஆனால் அருகில் இருந்த அப்துல்லா, “தலைப்பாகையைக் கழற்றி வைப்பது நம் நாட்டு மானத்தைக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்!” என்று கூறிவிட்டார். “வழக்கில் நமக்குத் தோல்வி ஏற்பட்டாலும் கவலையில்லை” என்றார். இப்படிக் காந்தியடிகளின் விடுதலை உணர்வுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சவேரி உடன்பிறப்புக்கள்.
1906ஆம் ஆண்டு, காந்தியடிகள் இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். அவருக்குப் பின்புலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லாக் கப்பல் நிறுவனம்தான் காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரிய வந்தது. எனவே அப்துல்லாக் கப்பல் நிறுவனத்தின் பயணியர் கப்பல்கள் நான்கையும் அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.
அதன்படி எசு.எசு.வர்க்காக் கப்பல் மகாராட்டிர மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எசு.எசு.நாதிரிக் கப்பல் இடர்பன் துறைமுகத்திலும், எசு.எசு.குர்லேண்டுக் கப்பல் கராச்சித் துறைமுகத்திலும், எசு.எசு.கேதிவுக் கப்பல் போர்ப்பந்தர்த் துறைமுகத்திலும் 1906ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர்ப்பந்தர்த் துறைமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எசு.எசு.கேதிவு மூழ்கியது. இன்றும் கூட அதன் புகைப்போக்கி வெளியில் தெரிகிறது.
முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலர் உதவியுடன் இந்தக் கப்பலில் இருந்த முத்துக்கள், வேலைப்பாடு மிக்க பீங்கான் கலங்கள், வெள்ளி மரவை (ஜாடி), உலக வரலாறு பற்றிய நூல் போன்ற சில அரிய பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘இயங் இந்தியா’ இதழை அச்சடித்த அச்சுப்பொறி கூடக் கிடைக்கும்! இந்தக் கேதிவுக் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடமிருந்து என் பாட்டனார்கள் ஒரு இலட்சத்துப் பதினாறாயிரம் பௌன்டுக்கு வாங்கிய கப்பல்! இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் இலண்டன் இலாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளன.
விடுதலைப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூடக் காந்தியடிகளை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்பதில்லை; இனிக் கேட்கப் போவதுமில்லை. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்ப்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள், மதுரையில் மொத்தத் துணி வணிகம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர் 1970இல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைக்காரனாக நான் மாறிவிட்டாலும் போர்ப்பந்தரை மறக்கவில்லை. 1985இல் என் சகோதரியைப் போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது அங்கு நான் போயிருந்தபோதுதான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அடையத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடுத்தேன்.
உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அதனை இலண்டன் இலாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமானது என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காட்டுகிறார்). அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடையது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்!
இந்தக் கப்பல் ஏறத்தாழ ஐம்பதடி ஆழத்தில்தான் இருக்கிறது என்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் திருட வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதிலுள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்! இது தொடர்பாகக் குசராத்து முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காங்கிரசுக்காரர்களுக்கு உதவியாக இருந்த காந்தியடிகள் குடும்பத்துக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினைத்தாரோ என்னவோ? எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.
காங்கிரசுத் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள், நான் காங்கிரசில் சலுகை பெற முயல்வதாகத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். குடியரசுத்தலைவர், தலைமையமைச்சர், சோனியா காந்தி என்று பலருக்கும் மடல் எழுதினேன். (மடல்களின் நகல்களைக் காட்டுகிறார்). மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமெனும் என் போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், மதுரைக் காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம்பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாகக் காந்தியடிகள் தன் கைப்பட எழுதிய உயிலும், சில மடல்களும் இன்றும் என்னிடம் உள்ளன.
இந்தத் தகவல்களையெல்லாம் பி.பி.சி-யில் செவ்வியாகக் கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால் என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போவதாக இல்லை. ஆனால் காந்தியடிகள் தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விவகாரத்தில் இந்த அரசு ஏன் ஆர்வமின்றி இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.
இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்தால், என்னிடமுள்ள காந்தியடிகளின் மடல் முதலான அரிய ஆவணங்களைத் தர ஆயத்தமாக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம்! காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது எனும் பெயர் மட்டும் போதும்!” என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.
இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும் இந்திய உயூனியன் முசுலிம் இலீக்கின் மதுரை மாவட்டப் பொதுச்செயலாளர் எம்.அலி அக்பரிடம் பேசினோம்.
“காந்தியடிகளின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட சவேரி உடன்பிறப்புக்கள் அதற்காகவே தம் சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை முன்னாள் நடுவண் அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.இராசா ஆகியோரிடம் கோரினோம்.
சவேரி உடன்பிறப்புக்களின் இன்றைய தலைமுறையினர் பற்றிக் காங்கிரசுப் பேரியக்கம் கூடக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் மக்களவை உறுப்பினர் காசாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஓர் அரிய கருவூலத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது” என்றார் அக்பர் அலி.
அரசியலாளர்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். அதற்கிடையே காந்தியடிகளை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!
இன்றைய மதிப்பின்படி ஏறத்தாழ 150 கோடித் தொகையைச் சவேரி உடன்பிறப்புக்கள் இந்திய விடுதலைக்காக இழந்திருக்கின்றனர். மூழ்கடிக்கப்பட்ட நான்கு பயணியர் கப்பலில் ஒன்றான எசு.எசு.கேதிவுக் கப்பல் குசராத்து மாநிலம் போர்ப்பந்தர்த் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் கிடக்கிறது.
நாட்டு விடுதலைக்காகத் தங்கள் நிறுவனத்தையும் பணம், பொருள் அனைத்தையும் இழந்த இந்தச் சவேரி உடன்பிறப்புக்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக