சனி, 1 செப்டம்பர், 2012

"நாங்கள் போட்ட சாலை!'

சொல்கிறார்கள்





"நாங்கள் போட்ட சாலை!'

மலையைக் குடைந்து, தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்டுள்ள, சேலம் மாவட்டம், பாலமலை கிராம வாசிகளில் ஒருவரான ராமசாமி: பல தலைமுறைகளாக நாங்கள், பாலமலையில் வாழ்கிறோம். எங்கள் கிராமத்தில் மொத்தம், 1,350 குடும்பங்கள் உள்ளன. மலையில் பள்ளிக் கூடம், மின்சாரம், குடிநீர் என, பல வசதிகள் இருந்தாலும், நகரத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட, மலைக்குக் கீழே உள்ள ஊர்களுக்குத் தான் செல்ல வேண்டும். நாங்கள் விவசாயம் செய்து, விளைந்ததை வெளியில் போய் விற்கவும், கீழேயிருந்து சாமான்களை வாங்கி மலைக்குக் கொண்டு வரவும், சாலை வசதி இல்லாமல், கஷ்டப்பட்டோம். எவ்வளவு சுமையாக இருந்தாலும், தலையில் சுமந்து கொண்டே, கூரான பாறைகளில் ஏறி இறங்க வேண்டும். போகவும், வரவும் மொத்தம், 14 கி.மீ., தூரம் நடக்க வேண்டும். பல முறை கூரான கற்களும், முட்களும் எங்கள் கால்களைக் குத்திக் கிழித்துள்ளன; சில சமயம், பாம்புகளும் கடித்துள்ளன. பாலமலையில், எட்டாம் வகுப்பு வரை படிக்க, பள்ளிக் கூடம் உள்ளது. அதற்கு மேல் படிக்க, மலையிறங்கி கீழே செல்ல வேண்டும் என்பதால், பலர் படிப்பை நிறுத்தி விட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி வந்தால், தொட்டில் கட்டி, கரடு முரடான பாதையில் தூக்கிக் கொண்டு ஓடுவோம். சரியான நேரத்தில், சிகிச்சை அளிக்காததால், நிறைய பெண்கள் வழியிலேயே இறந்துள்ளனர். எங்களுக்கு சாலை வசதி செய்து தரச் சொல்லி அதிகாரிகள், அரசியல்வாதிகள் என, பலரிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை. இந்தச் சமயத்தில் தான், "தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கிராமத்திற்குத் தேவையானதை நீங்களே செய்து கொள்ளலாம்' என, அதிகாரிகள் கூறினர். அப்போது தான், ஊர் மக்கள் ஒன்று கூடி, சாலை வசதியை நாமே ஏற்படுத்தலாம் என, முடிவெடுத்தோம். சாலை போடுவதில் தான் அனைவரின் கவனமும் இருக்க வேண்டும்; அதுவரை யாரும் வேறு வேலைக்குப் போகக் கூடாது என, முழு மனதுடன் முடிவெடுத்து செயல்பட்டோம். இரண்டு ஆண்டில், 7 கி.மீ., சாலையை போட்டு விட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக