வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

7,000 வளைகள் கண்டுபிடிப்பு: ஒரே நாளில் 587 எலிகள் "காலி'

7,000 வளைகள் கண்டுபிடிப்பு: ஒரே நாளில் 587 எலிகள் "காலி'

தினமலர்


சென்னை: எலியைக் கட்டுப்படுத்த, மாநகராட்சி வைத்த மருந்து சாப்பிட்டு, 587 எலிகள் ஒரே நாளில் இறந்துள்ளன. இருளர் இனத்தவர் உதவியுடன் எலிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், குழந்தை சடலத்தை எலி கடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவனக்குறைவாக ஈடுபட்டதாக, இரண்டு டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிலைமையை உணர்ந்த அரசு, "மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும் உணவகங்கள் மூடப்படும். எலி ஒழிப்பு நடவடிக்கைகள் மாநகராட்சியுடன் இணைந்து தீவிரப்படுத்தப்படும். இதில் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்படுவர்' என அறிவித்தது. இதையடுத்து, எலி ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. கஸ்தூரிபாய் மருத்துவமனை மட்டுமின்றி, சென்னை முழுவதும் எடுத்த நடவடிக்கைகளில், ஒரே நாளில் 587 எலிகள் இறந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:


எலி ஒழிப்புக்கு சென்னை நகரம் முழுவதும் 240 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் மூன்று பணியாளர்கள் உள்ளனர். 28 அரசு மருத்துவமனைகள், 47 மாநகராட்சி மருந்தகம், நகர நல்வாழ்வு மையங்கள், 77 மார்க்கெட்டுகள், 33 பஸ் நிலையங்கள், 80 சேமிப்பு கிடங்குகள், மக்கள் அதிகம் கூடும், வணிக வளாகம் போன்ற இடங்களில், 7,031 எலி வளைகளில், எலிக்கொல்லி மருந்து வைக்கப்பட்டன.
நேற்று காலை, அந்த இடங்களை ஆய்வு செய்தபோது, 587 எலிகள் இறந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டு, புதைக்கப்பட்டன. மேலும், 15 நாட்கள் தீவிர எலி ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது. எலி ஒழிப்பில், இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா என மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""அரசு இருளர் இனத்தை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, இன்று சுகாதாரத் துறை செயலர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. அவர்களை எந்த வகையில் பணிக்கு பயன்படுத்துவது என்றும்; ஊதிய விவகாரம் குறித்தும் முடிவு செய்யப்படும்,'' என்றார். மதுரை அரசு மருத்துவமனையில், ஊழியர்கள் நடத்திய எலி வேட்டையின் போது, பாம்பு சிக்கியது.

சென்னை அரசு மருத்துவமனையில், இறந்த குழந்தையை எலிகள் கடித்ததைத் தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையிலும் எலிகளை ஒழிக்க, டீன் மோகன் தலைமையில் ஆலோசனை நடந்தது. அதன்படி, நேற்று மருத்துவமனை வளாகத்திற்குள் திரிந்த 12 நாய்களை, ஊழியர்கள் பிடித்தனர். எலிகளையும் பிடிக்க, குழு அமைக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்திலுள்ள சிற்றுண்டி சாலைகள், விடுதிகளில் கழிவுகளே இல்லாதபடி, வளாகத்தை பராமரிக்க வேண்டும். பார்சல் சாப்பாடுகள் வழங்கக் கூடாது; சாப்பாடு அறையில் வந்து சாப்பிடுவோருக்குத் தான், உணவு வினியோகிக்க வேண்டும். விடுதி மாணவியர் அறைக்கு, உணவுப் பொருட்களை கொண்டு சென்று, உண்பதை தவிர்க்க வேண்டும் என, அறிவுறுத்துதல்கள் வழங்கப்பட்டன. அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. நேற்று வளாகத்தில், கழிவு நீரேற்றும் புதர்கள் நிறைந்த பகுதியில், எலி வேட்டை நடந்தது. மதியம் வரை எலிகள் பிடிபடாத நிலையில், பாம்பு ஒன்று பிடிபட்டது. தொடர்ந்து எலிகளைத் தேடும் வேட்டை நடந்தது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக