புதன், 29 ஆகஸ்ட், 2012

மத்திய அமைச்சர் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை வீரர்களுக்கு தொடர் பயிற்சி

மத்திய அமைச்சர் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: இலங்கை வீரர்களுக்கு தொடர் பயிற்சி


Last Updated : 29 Aug 2012 01:26:32 AM IST

 சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்திக்கொண்டு அவர்களை மத்திய அரசு உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தில்லியில் திங்கள்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.  தமிழக அரசு மற்றும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கை கடற்படை வீரர்களுக்கு உதகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இலங்கை நமது நட்பு நாடு, எனவே இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடரும்' என்று அவர் பதில் கூறியிருந்தார்.  இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில், மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், நீலகிரியில் பயிற்சி பெற்று வரும் இலங்கை ராணுவ வீரர்களைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்று என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 28) மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.  அதன் விவரம்: நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கடந்த 25-ம் தேதி தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். வீரர்கள் இருவரையும் திருப்பி அனுப்ப வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.  இந்தக் கோரிக்கையை ஏற்பதற்குப் பதிலாக, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளதாக அறிகிறேன். இந்தக் கருத்து எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.  அதாவது, இலங்கை நட்பு நாடாகத் தொடரும் வரையிலும் அந்த நாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது.  எனது அரசின் நோக்கங்களையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மத்திய அரசு முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையையே இது காட்டுகிறது.  எனவே, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற கண்டனத்துக்குரிய செயல்களை மத்திய அரசு மேற்கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வரும் வீரர்களை உடனடியாகத் திருப்பி அனுப்ப வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.  கருணாநிதி:மத்திய அமைச்சரின் பதில் தமிழகத்தையும், தமிழர்களின் உணர்வையும் காயப்படுத்துவதுபோல் உள்ளது.இந்தியாவைவிட ஆறு மடங்கு அதிகமான பல்வேறு உதவிகளை இலங்கைக்கு சீனா செய்துள்ள நிலையில், இந்தியா எதை நம்பி இன்னமும் இலங்கையை நட்பு நாடு என்று சொல்கிறது. இதை ஒருதலைபட்சமான நட்பு என்றுதான் சொல்லமுடியுமே தவிர, இருநாடுகளுக்கிடையே சுமுகமான நட்பு என்று எப்படிச் சொல்ல முடியும்?  விஜயகாந்த்:தமிழகத்தையும், தமிழர்களையும் பணயம் வைத்து இலங்கையுடன் ஒருதலைபட்ச நட்புகொள்ள மத்திய அரசு துடிப்பது ஏன் என்பது புரியவில்லை. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதான் நட்பின் லட்சணமா?  தா.பாண்டியன்:இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு கொச்சைப்படுத்தி வருகிறது. பயிற்சி பெறும் இலங்கை வீரர்களை வெளியேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 1-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.  ராமதாஸ்:இலங்கை வீரர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிப்போம் என மத்திய இணையமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதையே அமைச்சரின் பேச்சு காட்டுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக