திங்கள், 27 ஆகஸ்ட், 2012

2010 தொல்லியில் சட்டத்தை நீக்க வேண்டும்: வைகோ

2010 தொல்லியில் சட்டத்தை  நீக்க வேண்டும்: வைகோ

தினமணி First Published : 26 Aug 2012 01:16:06 PM IST
செங்கல்பட்டு, ஆக - 26: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நடுவண் தொல்லியல்துறையின் தடைச் சட்டம் 2010ஐத் திரும்பப் பெறக் கோரித் திருப்போரூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கலந்து கொண்டு, பொதுவாக மக்களின் வாழ்வுரிமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நடுவண் தொல்லியல்துறையின் தடைச்சட்டம் 2010ஐ உடனடியாக நீக்கக் கோரிக் கண்டனம் தெரிவித்தார்.  திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர், “மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே பாதித்து வரும், தொல்லியல்துறை கொண்டுவந்துள்ள 2010 தொல்லியல் தடைச்சட்டத்தை நீக்கி மக்களின் வாழ்வாதாரத்தை நடுவணரசு காக்க வேண்டும்!  திருப்போரூர், மாமல்லபுரம் முதலான பகுதிகளில், பல ஆண்டுகளாக வாழையடி வாழையாக மக்கள் வாழ்ந்து வரும் இடங்களில் தொல்லியல்துறை புகுந்து, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துக் கொண்டு பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.  தொல்லியல்துறை கொண்டு வந்த சட்டத்தால், அப்பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்கள் மின்சார இணைப்பு பெற முடியாமலும், குடும்பத்தில், திருமணம், குழந்தை எனக் குடும்ப எண்ணிக்கை பெருகி வரும்போது அவர்கள், வீட்டைப் புதுப்பிக்கவோ விரிவாக்கம் செய்யவோ முடியாமலும் தவித்து வருகின்றார்கள்.  அதனால் அவர்கள் இருப்பிடத்தில், நெரிசலில் சிக்கித் தவிக்கின்றார்கள். மேலும், உடனடித் தேவை என்றாலும அவரவர் வீட்டை விற்பனை செய்ய முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  மேலும் தற்போது மாமல்லபுரம் தலசயனப்பெருமாள் கோயிலைக் கையகப்படுத்த முயலும் தொல்லியல்துறை, கருத்துக் கேட்பு எனக் கூறி ஐவர் குழுவாக வருகை தரவுள்ளனர். ஆனால் அந்த ஐவர் குழுவில் கேள்வி கேட்க விருப்பம் தெரிவித்தவர்களுக்கோ விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கோ, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கோ கூடக் கருத்துக் கேட்பு அழைப்பு அனுப்பவில்லை. யாரைத்தான் வைத்துக் கேள்வி கேட்க உள்ளார்கள் என்பதும் தெரியவில்லை.  ஆகையால், மாமல்லபுரம் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும், இறையன்பர்களுக்கும் இடையூறாக விளங்கும் தலசயனப்பெருமாள் கோயில் கையகப்படுத்தும் முயற்சியைத் தொல்லியல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும்! மொத்தத்தில் பல்வேறு வழிகளில் இடையூறாக விளங்கிவரும் நடுவண் தொல்லியல்துறைத் தடைசட்டம் 2010ஐ உடனடியாக நீக்க வேண்டும்! என்று பேசினார்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சக்தீசுவரி, சிவராமன், உலோகு முதலானோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக