ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே!!!

கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே!!!

கார்த்திக்
நட்பு பதிவு செய்த நாள் : 20/08/2012

‘கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே’
இன்றைக்கும் ஓடாவி என்ற கப்பல் கட்டும் வயதான மூப்பன்கள் தமிழகத்தில் உள்ளனர். மிகச் சிறப்பான கப்பல்களை, படகுகளைக் கட்டிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். தூத்துக்குடியில் இன்றைக்கும் 35 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. நான் அவற்றிலும் பயணித்து இருக்கின்றேன். பண்டைக் காலத்திலேயே, 2500 டன் எடை கொண்ட கப்பல்கள் தமிழகத்தில் இருந்து உள்ளன. ஆங்கிலேயர்கள் வந்து ஒரு சட்டத்தைப் போட்டதால் தான், இந்தக் கப்பல் கட்டும் தொழில் ஒடுங்கிப் போயிற்று. இந்தச் செய்தியை, ‘ஓடாவி’ எனும், படகு கட்டும் குடும்பத்தாரிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.

ஆங்கிலேயர்களுடைய நீராவிக்கப்பல்களின் வளர்ச்சிக்கு, இந்த பாய்மரக் கப்பல்கள் தடையாக இருந்தன. அவர்களிடம் 400 டன் எடை கொண்ட கப்பல்கள் தாம் இருந்தன. எனவே, ‘இந்தியர்கள் கப்பல் கட்டக் கூடாது ; இந்தியர்கள் மாலுமிகளாக இருக்கக்கூடாது’ என, 1789 ஆம் ஆண்டு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். உண்மையில், 1802 ஆம் ஆண்டு வரையிலும், இந்தியாவில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. 1802 ஆம் ஆண்டில் தான் ஆங்கிலப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. ஆனால், 1780 இலேயே, ‘மரைனர்ஸ் ஆக்ட்’ என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தியக் கப்பல் கட்டும் தொழிலை முடக்கினார்கள்.
தமிழர்கள் ஆமைகளைப் பின்தொடர்ந்து சென்றார்கள் என்கிறபோது, ‘முகவை, மிதப்பு, தெப்பம்’ என படகுகளில் பயணித்து, அதற்குப்பிறகு, பாய்மரக்கப்பல்களைக் கட்டினார்கள். இன்றைக்கும், நாகப்பட்டினத்திலும், கடலூரிலும், ‘மஞ்சு’ என்ற பெயரில் ஐந்து பாய்மரக் கப்பல்கள் உள்ளன. மஞ்சு,வத்தை, கோட்டியா என்பனவெல்லாம் பலவகையான கப்பல்கள். ‘கொட்டியா’ என்றால், கடலில் புலி போல வேகமாகச் செல்லுகின்ற கப்பல். கொட்டியா என்றால், இலங்கையில் புலி என்று பொருள். அது சோழர்களைக் குறிப்பது. ‘மஞ்சு’ என்றால், மேகம் போல விரைந்து செல்லுகின்ற கப்பல் என்று பொருள். இப்படி, ஒவ்வொரு வகையான கப்பலுக்கும் ஒவ்வொரு பெயர். அதாவது, அந்தக் கப்பல் எந்த வழியில் செல்கின்றதோ, அதை வைத்துப் பெயர் சூட்டுவார்கள்.
தூத்துக்குடியில் இருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள், இலட்சத்தீவுகள், மாலத்தீவுகளுக்குப்போகின்றன. 20 கப்பல்கள் அந்தமான் போகின்றன. அங்கிருந்து பர்மாவுக்கும் போய் பொருள்களை இறக்கி விட்டு, அங்கிருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு வருகின்றார்கள். ஆகவே, நம்முடைய கடலோடிகளின் கப்பல் ஓட்டும் திறமை இன்றைக்கும் மங்கி விட வில்லை. அதை நாம் தான் முயன்று, அடுத்த தலைமுறைக்கு, இந்தத் தொழில் நுட்பங்களைக் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய தொன்மை என்ன? எத்தனையோ பேர் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள் என்றால், நாம் ஒரு வேலை செய்கின்ற சமூகமாகத்தான் இருக்கின்றோமே தவிர, ஆளுமைமிக்க சமுதாயமாக உருவெடுக்க வில்லை. இயற்கையின் பயன்பாடுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள் தாம். தேங்காய், மாங்காய், பலா, தேக்கு, புளியமரம் ஆகியவற்றின் பயன்பாடுகள் மற்றும், இயற்கை, மரம், செடி, கொடிகள், கடல், வேளாண்மைஅனைத்திலும் உலகுக்குத் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. சுறா வேட்டை ஆடினார்கள், சங்கு, முத்து, கடல் பாசி குளித்தல் இவையெல்லாம், உலகுக்குத் தெரிய வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டத்துக்கு, ‘முகவை’ என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு, ‘மிதப்பு’ என்று தான் பொருள். அந்த மாவட்டத்தில் மட்டும், 5000 கப்பல்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதிக்கும் நிறைய கப்பல்கள் இருந்தன. தமிழர்கள் தொடக்கத்தில்,முகவை, மிதப்பு, தெப்பம் என்ற சிறிய கப்பல்களைக் கட்டிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதைத்தான் பின்னர் பாய்மரக் கப்பல்களாக மாற்றினார்கள். உலகத்திலேயே முதன் முறையாக பாய்மரத்துணிகளை நெய்தவர்கள் தமிழர்களே. ‘வாதிரியார்’ என்ற ஒரு சமூகத்தினர், தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து வேப்பலோடை வரையிலு ம் , இன்றைக்கும் இருக்கின்றார்கள். அவர்கள் தாம், பாய்மரத் துணிகளை நெய்தவர்கள். புளியங்கொட்டையை மாவாக அரைத்து, அதில் பருத்தித் துணியைத் தோய்த்து, பாய்மரத் துணியாக மாற்றினார்கள். அந்தத் துணிகள் எளிதில் கிழிந்து போகாது; எத்தகைய சூறைக் காற்றையும் எதிர் கொண்டு நிற்கும். அப்படி, 20,000 கப்பல்களுக்கு அவர்கள் பாய்மரங்கள் செய்து இருக்கின்றார்கள். இன்றைக்கு அது வெறும், 35 கப்பல்களாகச் சுருங்கி விட்டது. அந்த சமூகமே நசிந்து, பனை ஏறுதல் உள்ளிட்ட வேறு தொழில்களுக்குப் போய் விட்டார்கள். நிறையப்பேர் வெளியேறிப் போய் விட்டார்கள். தமிழகத்தில் பட்டு சாலியர், செளராஷ்டிரர் போன்ற வெளி மாநில நெசவு சமூகங்கள் உள்ளன. ஆனால், வாதிரியார்கள், தமிழகத்துக்கே சொந்தமான, பருத்தி நெசவாளர்கள். அவர்கள் முன்பு, ‘மாதறியார்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது, பெரிய தறிகளை வைத்து இருந்தார்கள். அதில் இவர்கள் நெய்த பாய்மரத் துணியைத்தான், கிரேக்கர்கள் உடையாக அணிந்து கொண்டார்கள். காரணம், அது குளிருக்கு இதமாக இருந்தது. அந்த உடைக்குப் பெயர் ‘பல்லன்’.
அதேபோல, பலவகையான மரங்களைப் பயன்படுத்தி, பெரிய பெரிய கப்பல்களைக் கட்டினார்கள். 2500 டன் எடை கொண்ட கப்பல்கள் கூட இருந்தன. ஆங்கிலேயர்களுடைய 450 டன் எடை கொண்ட கப்பல்களை, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்ய வேண்டும். ஆனால், நம்முடைய கப்பல்களை, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்தாலே போதும். ஐரோப்பியர்கள் காற்றின் திசையைக் கணித்து, கப்பலைச் செலுத்தினார்கள். ஆனால், தமிழர்கள் கடல் நீரோட்டத்திலும், எதிர்காற்றிலும் கூடக் கப்பலைச் செலுத்தும் திறமையானவர்களாக இருந்தார்கள். பலத்த காற்று வீசும் போதும் கூட, அதற்கு அஞ்சாமல், விரைவாகப் போய்ச் சேருவதற்கு, அந்த நாள்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதாவது, 200 கிலோமீட்டர் வேகத்தில் அடித்த
காற்றிலும் கூட, பாய்மரங்களை அதற்கு ஏற்றவாறு கட்டி படகைச்செலுத்தினார்கள்.
ஒரு ஆஸ்திரேலியா ஆய்வாளர் இந்தியாவுக்கு ஆய்வுகள் செய்ய வருவதாக இருந்தால், இங்கே அவர்களுக்கான வழிகாட்டிகள் (Guide) இல்லை. நம்முடைய பங்கு அளிப்புகள், நமக்கு மட்டுமே தெரிந்து இருந்தால் போதாது. உலகத்துக்கும் தெரிய வேண்டும். தென்னை நாரில் இருந்து கயிறு திரித்தோம். அந்த நாள்களில் கப்பல்களில் கயிறுதான் முக்கியப் பங்கு வகித்தது. அதைக் கொண்டுதான், பெரிய பெரிய பாய் மரங்களைக் கட்டினார்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ‘ஆழ்கடல் பண்பாட்டு ஆய்வுகள்’ (Underwater Cultural Heritage Research ) என்று ஒரு துறையே உள்ளது. ‘கடல் தொல்லியல் ஆய்வு’ (Marine Archaeology) என்றும் சொல்வார்கள். அவர்கள், சங்கு பற்றி ஆய்வு செய்தார்கள், கல் நங்கூரத்தைப் பற்றி ஆய்வு செய்தார்கள். ஆனால், பாய்மரங்களைப் பற்றி ஆய்வு செய்ய வில்லை. பூம்புகாரைப் பற்றி ஆய்வு செய்தார்கள். அதுவும் வெளி வரவில்லை. குமரிக் கண்டத்தைப் பற்றி எந்த விதமான கடல் ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை.
கடல் ஆய்வாளர் திரு.பாலு அவர்கள் தாயகத்தில் திரு. அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக