First Published : 26 Jul 2011 01:36:18 AM IST
Last Updated :
வரலாறு காணாதவகையில் திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதிகார பலம், பண பலம் எல்லாவற்றையும் அத்துமீறிப் பயன்படுத்தியும்கூட 20 அமைச்சர்கள் படுதோல்வி அடைந்தனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் உள்ள 100 தொகுதிகளில் ஒன்றில்கூட திமுக வெற்றிபெறவில்லை. வேறு 12 மாவட்டங்களில் திமுக கூட்டணி தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட 45 தொகுதிகளில் திமுக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. ஆளுங்கட்சி என்கிற தகுதியையும் இழந்து எதிர்க்கட்சி தகுதியைக்கூட பெற முடியாமல் 3-வது இடத்துக்கு திமுக தள்ளப்பட்டுவிட்டது. இந்தச் சரிவுக்குக் காரணம் என்ன என்பதை நன்கு ஆராய்ந்து, இதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக கூட்டப்பட்ட திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திமுக உறுப்பினர்களுக்குக்கூட திருப்தி தராது. தங்களது தோல்வியிலிருந்து புதிய பாடங்களைக் கற்று திருத்திக் கொள்ள முனையாமல் அரைத்த மாவையே மீண்டும் அரைக்கும் வேலையை பொதுக்குழு செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னை சம்பந்தமாக திமுக பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் உள்பட பல தீர்மானங்கள் கண்கெட்ட பிறகு கதிரவன் வணக்கம் செய்வதற்கு ஒப்பானவையாகும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய 10 நாடுகளின் நீதியரசர்களைக் கொண்ட டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் ராஜபட்ச போர்க் குற்றவாளி எனத் திட்டவட்டமான தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளன. ஆனால், திமுகவின் தீர்மானத்தில் ராஜபட்சவை மறைத்து தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்களுக்கு காரணமானவர்களைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மனித உரிமையைப் போற்றுகிற இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலே கண்ட தீர்மானத்தில் ராஜபட்ச மீது குற்றம் சாட்டுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகளுக்கு துணைநின்ற இந்தியாவை மனித உரிமையைப் போற்றுகிற நாடாகத் தீர்மானம் புகழ்கிறது. 2009-ம் ஆண்டு மே மாதம் 17, 18, 19-ம் தேதிகளில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்துக்கொத்தாகத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்குத் திரையிட்டு மறைத்தவர் கருணாநிதி. உண்ணாவிரத நாடகம் நடத்திப் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக பம்மாத்து செய்து தமிழக மக்களை ஏமாற்ற இவர் செய்த முயற்சிகளை தமிழக மக்கள் மறவாமல் சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் பாடம் கற்பித்தனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட பிறகு 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அந்த மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடியபோது, அப்போராட்டத்தைத் திசைதிருப்புவதற்காக தனது மகள் கனிமொழி உள்பட காங்கிரஸ், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி ரத்தக்கறை படிந்த ராஜபட்சவின் கரங்களைக் குலுக்கச் செய்தவர் இதே கருணாநிதிதான். சிங்கள அரசு எங்கெங்கு அழைத்துச்சென்று காட்டியதோ அந்த முகாம்களில் மட்டுமே இந்தக் குழுவினர் பார்வையிட்டனர். முகாமில் உள்ளவர்களின் பட்டியலைக் கேட்டுப்பெற்று அதில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்திக்கவோ, பேசவோ இவர்கள் ஒரு முயற்சியும் செய்யவில்லை. இக்குழுவினர் திரும்பியவுடன் கருணாநிதி பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்: 15-10-09-லிருந்து 15 நாள்களில் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள். ஆதரவற்ற குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோர் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள். முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் 3 மாதங்களுக்குள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். இவ்வாறு கருணாநிதி அறிவித்து 21 மாதங்கள் முழுமையாகக் கடந்துவிட்டன. ஆனாலும் இவர் கூறியபடி எதுவுமே நடக்கவில்லை. ராஜபட்சவை போர்க்குற்றவாளி என டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் அறிவித்தபோதும் ஐ.நா. விசாரணைக் குழு அறிவித்தபோதும் அதை வரவேற்கும் வகையில் கருணாநிதி எதுவும் சொல்லவில்லை. உலகின் பல்வேறு நாடுகள் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தபோதிலும் இவர் பதவியிலிருந்தவரை வாயையே திறக்கவில்லை. தில்லியில் காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நடந்தபோது தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் சிறப்பு அழைப்பாளராக ராஜபட்சவை அழைத்து ரத்தினக் கம்பளம் விரித்து இந்திய அரசு வரவேற்றபோது அதைக் கண்டித்து கருணாநிதி எதுவும் கூறவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்ச கும்பலைப் போர்க்குற்றவாளியாக நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக உலகத் தமிழர் மாநாடு நடத்துவதற்குப் பதில் இந்தப் பிரச்னையைத் திசை திருப்பவும் நீர்த்துப் போக வைக்கவும் கோவையில் உலகச் செம்மொழி மாநாட்டை நடத்தியவர் கருணாநிதியே. ராஜபட்சவுக்கு கோபம் வரும் வகையில் யாரும் எதுவும் பேசிவிட வேண்டாம் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறவும் கருணாநிதி தயங்கவில்லை. முறையாகத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் தவறிவிட்டதன் விளைவாகவே ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகப் பிரபாகரன் மீது பழி சுமத்தவும் அவர் தயங்கவில்லை. வங்கதேச விடுதலைப் போரின்போது 1971-ம் ஆண்டில் முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்களிடம் ரூ. 10 கோடி நிதி திரட்டி பிரதமர் இந்திராவிடம் அளித்தார். கார்கில் போர் மூண்டபோது தமிழக மக்களிடம் ரூ.45 கோடி நிதி திரட்டி பிரதமர் வாஜ்பாயிடம் அளித்து இந்தியாவிலேயே அதிகம் நிதி தந்த முதலமைச்சர் என்ற பாராட்டுதலையும் பெற்றுக்கொண்டார். ஆனால், இப்போது முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக வாடி வதங்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ இவர் செய்தது யானைப் பசிக்கு சோளப் பொரியை அளித்தது போலாகும். இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 201-ம் பிரிவு ஒரு கொலையை மறைக்க உதவியவருக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கலாம் எனக் கூறுகிறது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபட்சவின் கொலை பாதகச் செயலை மூடி மறைக்க முயன்ற கருணாநிதிக்கு எத்தனை ஆண்டு தண்டனை தருவது? ஈழத் தமிழர் பிரச்னையில் மட்டுமல்ல, வேறு சில பிரச்னைகளிலும் திமுக பொதுக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் வெறுமை நிறைந்தவை. போகாத ஊருக்குப் புரியாத வழியைக் காட்டுபவையாகும். கச்சத் தீவை மீட்க மத்திய அரசு முயற்சிகளைச் செய்ய வேண்டும். தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை உயர் நீதிமன்றம் வழியாகப் பயன்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிர் உரிமை பெறும் வகையில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஏற்பட அரசியல் அமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய ஆட்சியில் திமுகவும் இன்றுவரையில் ஓர் அங்கம். திமுக அமைச்சர்கள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தும் வகையில் ஏதாவது பேசினார்களா? இவர்கள் பேச்சு புறக்கணிக்கப்பட்டிருந்தால் அதையே காரணமாகக் காட்டி மத்திய ஆட்சியிலிருந்து வெளியேறி இந்தக் கோரிக்கைகளுக்கு வலுவூட்டுவதை விட்டுவிட்டு திமுக பொதுக்குழுவிலும் பொதுக்கூட்டங்களிலும் முழங்குவது என்பது தமிழக மக்களை ஏமாற்றுவதே ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஈழப்பிரச்னையில் இருந்து மேற்கண்ட பிரச்னைகள் வரை திமுக நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் கண்கெட்ட பிறகு கதிரவன் வணக்கம் செய்யும் தீர்மானங்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக