சனி, 30 ஜூலை, 2011

தாய்மொழிக் கல்வி என்பது சாதனைகளைப் பெற்றுத் தரக்கூடியது.

ஆற்றல், அறிவினை வளர்க்க துணை புத்தகங்கள் மட்டுமே: 
அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

First Published : 30 Jul 2011 01:16:07 AM IST


ஆற்றலையும், அறிவையும் வளர்க்க வளரும் பருவத்தினர் துணையாகக் கொள்வது புத்தகங்களை மட்டுமே என பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பேசினார். ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிந்தனை அரங்கை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து அமைச்சர் பேசியதாவது: கண் இல்லாவிட்டாலும் கற்றவர் கண்ணுடையவராகவே கருதப்படுவர். மனிதன் தன்னைத் தான் தெரிந்துகொள்ளவும், ஆற்றல், அறிவினை வளர்த்துக் கொள்ளவும் புத்தகங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. அனைவருக்கும் கை வராத கலை, புத்தகம் எழுதுவது. அறிவுக்கும், மனதுக்கும் நிகழும் போராட்டத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் துயரமின்றி வாழ முடியும். எழுதுபவனின் நோக்கத்திலேயே அதனைப் புரிந்து கொள்ள வைப்பதுதான் சிறந்த எழுத்தாளனின் சிறப்பு. புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தினை பெற்றோர்களும், பொதுமக்களும் அதிகரித்துக் கொண்டால்தான் அவ்வப்போது நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொண்டு வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்ள முடியும். மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வாசிக்கும் திறனை வளர்க்கும் விதத்தில் நல்ல உயரிய புத்தகங்களை வாங்கித் தருவது அவசியம். இளைய சமுதாயத்துக்கு அறிவுச் செல்வம் என்றால் புத்தகத்தைத் தவிர உலகில் வேறொன்றுமில்லை என்றார் ராமலிங்கம். விஞ்ஞானி ஆர்.எம்.வாசகம்: பழமைக்கும், புதுமைக்கும் பாலமாகவும், அறியாமையை அகற்றும் தூண்டுகோலாகவும் நூலகங்கள் விளங்குவதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், விஞ்ஞானியுமான ஆர்.எம்.வாசகம் பேசினார். தாய்மொழிக் கல்வி என்பது சாதனைகளைப் பெற்றுத் தரக்கூடியது. இலக்கணமும், இலக்கியமும் மனிதனை நல்வழிப்படுத்துகிறது. அடுத்த தலைமுறைகளுக்கான அழியாத சொத்து அறிவு மட்டுமே. இதனைப் பெற சிறந்த புத்தகங்களை இளைஞர்கள் தொடர்ந்து தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்றார் வாசகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக