செவ்வாய், 26 ஜூலை, 2011

Give power to thamizhs - Chandrika: தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள்: இராசபட்சவுக்குச் சந்திரிகா அறிவுரை

தன் ஆட்சியையும் தன்தந்தையின் ஆட்சியையும் சேர்த்தே குறை கூறியுள்ளதால்  இவ்வுரையை அரசியல் காரணங்களுக்கான ஏமாறறு உரை என்று எடுத்துக் கொள்ள  இயலாது. உண்மையிலேயே சிங்களக் கொடுமைகளையும் தமிழர்களுக்கு ஏற்படும் அழிவுகளையும் பார்த்து மனம் வருந்தி உணர்ந்து தெரிவிக்கும் கருத்துகளாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் இவர் போன்ற எண்ணம் உள்ளவர்கள் துணிந்து தங்கள் சிங்கள வெறிக்கு எதிரான கருத்துகளைக் கூறும் வாய்ப்பு ஏற்படுகிறது. தனித்தனி உரிமை உடைய கூட்டரசு நாடுகள் என வலியுறுத்தி வெற்றி காண்பது நன்று. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
 தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள்: 
ராஜபட்சவுக்கு சந்திரிகா அறிவுரை
 

First Published : 26 Jul 2011 01:56:53 AM IST

Last Updated : 26 Jul 2011 03:29:59 AM IST

கொழும்பு, ஜூலை 25: தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள், இலங்கையின் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கும் வகையில் கூட்டாட்சி முறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அறிவுரை கூறினார்.  கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டில் இப்போது காணப்படும் சிங்களப் பேரினவாத ஆதிக்கப் போக்கு குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். இது இப்படியே நீடித்தால் நாட்டில் மீண்டும் கலவரங்கள் வெடிக்கும் என்று எச்சரித்தார்.  "சர்வாதிகாரியைப் போல நடந்து கொள்ளாதீர்கள். இலங்கையின் அனைத்துத் தமிழர்களையுமே விடுதலைப் புலிகள் என்று பாவித்து பகைமை பாராட்டாதீர்கள்.  தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதால் நம்முடைய வலிமை குன்றிவிடாது; மாறாக அவர்களுடைய உழைப்பு, திறமை, அறிவு காரணமாக இலங்கைக்கு எல்லா துறைகளிலும் அபாரமான முன்னேற்றம் ஏற்படும்.  இலங்கை என்றாலே சிங்களத்துக்கும் பெளத்தத்துக்கும்தான் முன்னுரிமை என்ற கொள்கை மூலம் நாட்டை குழப்பத்துக்கு இட்டுச் செல்லப் பார்க்கிறது அரசு.  இலங்கையில் உள்ள அனைத்துச் சிறுபான்மை இனங்களின் தலைவர்களுடன் பேசி அவர்களுக்குத் தேவைப்படும் சலுகைகளையும் உரிமைகளையும் அரசு வழங்க முன்வர வேண்டும்.  என்னுடைய தகப்பனார் பண்டார நாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படி பூதாகரமாக வளர்ந்து நாட்டையே 30 ஆண்டுகள் நெருக்கடியில் தள்ளியது.  சிங்களத்துக்கு இணையான அந்தஸ்து தமிழுக்கும் வேண்டும் என்று தமிழர் இயக்கங்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டன; இதனால் தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது. அந்த கோரிக்கையும் ஏற்கப்படாததால் கூட்டாட்சி வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதையும் நிராகரித்த காரணத்தால் தனி தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை பிறந்தது.  அரசு நிர்வாகத்தில் தமிழர்களுக்கு எந்தவித பங்கும் இல்லை, கல்வி - வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஏதும் கிடையாது, எங்கும் எதிலும் சிங்களம் மட்டுமே என்ற கொள்கை காரணமாகவே மிகப் பயங்கரமான மோதல்கள் வெடித்தன.  என்னுடைய தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்ததாலேயே தமிழர்களிடையே 5 போராளிக் குழுக்கள் தோன்றின. அவர்களில் முன்னணியில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட அனைத்துமே தமிழ் ஈழம் என்ற தனி நாட்டுக்காகப் போராடின.  இந்த நிலையில்தான் இப்போதைய அரசு முழுக்க முழுக்க ஒரு சர்வாதிகார அரசு போல நடந்துகொள்வதைப் பார்த்து வியப்படைகிறேன். ஜனநாயகத்தை வலுப்படுத்தாமல், மனித உரிமைகளை மதிக்காமல் நேர் எதிரான பாதையில் இன்றைய அரசு நடைபோடுகிறது; இதனால் நாட்டில் கலகம்தான் வளரும்.  அனைத்துச் சிறுபான்மை இனங்களுக்கும் சம வாய்ப்பையும் உரிமையையும் வழங்க கூட்டாட்சி முறையைக் கொண்டுவாருங்கள். தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்' என்று இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இப்போதும் நீடிக்கும் சந்திரிகா அறிவுரை கூறினார்.  அவர் 1994 முதல் 2005 வரை இலங்கை அதிபராகப் பதவி வகித்தார். அவருக்குப் பிறகு அவருடைய கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபட்ச ஆட்சிக்கு வந்தார்.

1 கருத்து: