ஞாயிறு, 24 ஜூலை, 2011

நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட முடிவு... செயற்குழுவில் கருணாநிதி

தி.மு.க.வின் தோல்வி என்பது  தமிழின உணர்வாளர்களின் வெற்றியும நாட்டு மக்களை மறந்து குடும்ப மக்களை முன்னிலைப்படுத்தியதால் மக்களிடையே ஏற்பட்ட வெறுப்பின் வெற்றியும் என்பதை உணர்ந்து திருந்தினால் இனி வெற்றி அடையலாம். மாறாக இவை போல் பேசினால் எப்பயனும் இல்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட முடிவு... செயற்குழுவில் கருணாநிதி

First Published : 24 Jul 2011 03:06:07 AM IST

Last Updated : 24 Jul 2011 03:21:52 AM IST

கோவை அண்ணா வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) துணை பொதுச் செயலாளர்கள
கோவை, ஜூலை 23: பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியால் புண்பட்டிருப்பதாகக் கூறிய திமுக தலைவர் கருணாநிதி இது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட முடிவு என்றார்.  கோவையில் சனிக்கிழமை நடந்த திமுகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:  "நடந்துமுடிந்த பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், நேர்மாறான விளைவுகளின் காரணமாக இப்போது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாகக் கூட இருக்கக்  கூடிய நிலையைப் பெற முடியவில்லை. எதிர்க்கட்சிக் குழுக்களில் ஒன்றாக திமுக இடம்பெற்றிருக்கக் கூடிய நிலையில் செயற்குழு நடந்து கொண்டிருக்கிறது.  இத்தகைய நிலை யாரால் ஏற்பட்டது என்று சிந்திப்பதைக் காட்டிலும், நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட முடிவு என்பதே மறுகேள்விக்கு இடமில்லாத உண்மை. இதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். நான் உணர்ந்த காரணத்தாலேயே இதைச் சொல்கிறேன்.  ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தைத் தொட்டுப் பார்த்து, நெஞ்சைத் தடவிப் பார்த்து, தெரிந்து கொண்டிருக்கின்ற அந்த உண்மையை மீண்டும் மீண்டும் கிளறி யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் திமுக இன்று  புண்பட்டிருக்கிறது. அதோடு நானும் புண்பட்டிருக்கிறேன். இதை ஆற்றிக்கொள்ள, மீண்டும் திமுகவின் ஆற்றல் பெருகும் காலம் நிச்சயம் வரும், வரவேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பூஜ்ய நிலையில் இருந்து ஆரம்பிக்கிறோம்.  எதிர்காலத்துக்கு கிடைத்தத் தோல்வி: பதவிகளுக்காகவோ, ஆடம்பரங்களுக்காகவோ ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அல்ல திமுக. ஒரு கட்சியின் வெற்றி, தோல்விகளால் ஒரு கொள்கை நிர்ணயிக்கப்படுகிறது என்று யாரும் சொல்ல முடியாது.  அதிமுகவின் வெற்றி, அக்கட்சியின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று ஒரு முட்டாள்கூட சொல்லமாட்டான். யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, திமுகவுக்கு கிடைத்துள்ள தோல்வி, நமது கொள்கை, லட்சியம், எதிர்காலத்துக்குக் கிடைத்த தோல்வி என்பதை மறந்துவிடக்கூடாது. இதை எண்ணி ஒவ்வொரு தொண்டனும் கண்ணீர்விட்டுக் கொண்டிருக்கின்றனர்.  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, ஒரேயொரு இடத்தில் மட்டுமே திமுகவால் வெற்றிபெற முடிந்தது. துறைமுகம் தொகுதியில் வெற்றிபெற்ற நான், அதையும் ராஜிநாமா செய்தேன். அக்காலகட்டத்தில்கூட பல தொகுதிகளைப் பிடித்து ஆட்சியை அமைத்தோம் என்றால் அந்தக் காலம் வராமல் போகாது. ஆகவே, இதை தோல்வியாக நினைக்க வேண்டாம். திமுக சந்திக்காத தோல்விகள் இல்லை.  வேட்டையாடப்படுபவர்களாக: இக் கூட்டத்துக்கு வந்திருக்கும் பலரும் தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நாம் நிலைகுலைந்து போய்விடவில்லை. இச்சூழலிலும் செயற்குழுவுக்கு வந்திருக்கும் கூட்டம், திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.  திமுக எஃகு கோட்டை, இது ஊதி அலைக்கழிக்கப்படும் துரும்பல்ல. திமுக என்ற தூணை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. பெரியார், அண்ணா காலத்தில் இருந்து பல்வேறு போட்டிகளைச் சந்தித்து தியாக உள்ளத்துக்குச் சொந்தக்காரர்கள் திமுகவினர்தான் என்பதை நிரூபித்திருக்கிறோம்.  இப்போது திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி புதியது அல்ல. வீரபாண்டி ஆறுமுகம் தேடப்படுகிறார் என்பது மாத்திரமல்ல, நானே தேடப்பட்டவன்தான். திமுகவின் முக்கிய நிர்வாகிகளெல்லாம் தேடப்பட்டவர்கள்தான்.  கடந்த முறை, ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த சில நாள்களிலேயே என்னை பாடுபடுத்தி சிறையில் அடைத்தார்.  எமர்ஜென்சியைவிட கொடுமையா தமிழகத்தில் வரப்போகிறது. எமர்ஜென்சியையே எதிர்கொண்ட நிலையில், இன்றைக்கு யாருக்கும் பயப்படத் தேவையில்லை.  "இனி பொறுப்பதில்லை' என்ற பாரதியின் வாசகத்தை மனதிலே பதிய வைத்துக் கொண்டு, பொறுப்பதில்லை என்ற நிலையை அடைய, வெற்றி வாகைசூட என்ன செய்ய வேண்டும் என்ற வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பொதுக்குழு அமையும்' என்றார் கருணாநிதி.

1 கருத்து:

  1. திருந்தினால் தி.மு.க. வெற்றி பெறலாம் என்பதைத்தினமணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும். இருமுறை பதிந்த பின்பும் இக் கருத்தை வெளியிடவில்லை.

    பதிலளிநீக்கு