பொதுவாக நன்கு எழுதப்பட்டுள்ளது. எனினும் ௯ ஆம் பத்தி கடந்தகால நிகழ்வுகளையும் வரலாற்றையும் சரிவரப் புரிந்து கொள்ளாமல் ஊகத்தில் எழுதப்பட்டுள்ளது. கறந்தபால் மடி புகாது என்னும் சித்தர் வாக்கிற்கிணங்க இனித் தமிழ் ஈழம் அமைவதை அனைவரும் ஏற்பதே ஒரே தீர்பவு என்பதையும் சிங்களவர்களும் மேலாதிக்கம் செலுத்தும் இந்திய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தலையங்கம்: வாக்குப் புரட்சி!
First Published : 28 Jul 2011 12:27:00 AM IST
Last Updated : 28 Jul 2011 03:46:30 AM IST
மக்களாட்சியில் வாக்குச் சீட்டுகள் மக்களின் மனசாட்சியாக இருக்கின்றன என்பதற்கு இலங்கை உள்ளாட்சித் தேர்தல் மற்றொருமுறை உலகுக்குக் கட்டியம் கூறியுள்ளது.இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், அந்தத் தீவு முழுவதிலும் 65 மாகாணங்களில் போட்டியிட்ட ராஜபட்ச சார்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தம் 45 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், தமிழர்கள் வசிப்பிடமாகிய இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாகாணங்களில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களில் வெற்றிபெற்றிருப்பதும், புலிகள் இயக்கத்துக்குக் கொள்கையளவில் மாறுபட்டிருந்த தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், ராஜபட்ச மீதான கோபத்தை, இலங்கைத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக உலகுக்கு அறிவித்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குங்கள் என்று ராஜபட்சவுக்கு அறிவுரைகூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, என்னுடைய தகப்பனார் பண்டாரநாயக தலைமையிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின் கோரிக்கைகளை முறையாகப் பரிசீலித்து அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால்தான் இந்தப் பிரச்னை இப்படிப் பூதாகரமாக வளர்ந்து இலங்கையை 30 ஆண்டுகளுக்கு நெருக்கடியில் தள்ளியது என்று கூறியிருப்பது, இலங்கைவாழ் தமிழர்களின் பலத்தையும் தமிழர் அரசியலையும் புரிந்துகொள்ளும் சூழலை இத் தேர்தல் வெற்றி உருவாக்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதால், நம் வலிமை குறைந்துவிடாது. மாறாக, அவர்களது உழைப்பு, திறமை, அறிவாற்றலால் இலங்கைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படும் என்று சந்திரிகா இன்று கூறுவதை, தமிழருக்கு ஆதரவுத் தெரிவித்துவரும் சிங்களர்களும் கூறிவருகிறார்கள்.அற்றை நாள் முதலாக இலங்கையின் வளர்ச்சி, தமிழர்கள் சார்ந்ததாகவே இருந்துவந்தது. தமிழரின் இந்த ஆற்றல் மீதும், அறிவுப்புலத்தின் மீதும் சிங்களர்கள் கொண்ட பொறாமையின் விதைகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக சிங்கள பேரினவாதக் கொள்கைக்கு இடமளித்து, இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்தது. இப்போதுதான் அவர்களுக்குப் புரிகிறது, தமிழர்கள் நம்முடன் இருந்திருந்தால் பெரும் வளர்ச்சியைப் பெற்றிருப்போம் என்று! இந்த வெற்றி சொல்லும் அறிவிப்புகள் பல. இலங்கையில் தமிழர்களுக்கு தமிழீழம் அளிக்கப்படாவிட்டாலும், தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாகத்தான் நீடிக்கும். இதை யாராலும் மாற்றிவிட முடியாது என்பது அதில் முதன்மையானது.இலங்கை அரசியலில் தமிழர்களின் பங்கு இல்லாமல், தமிழர்களைத் தவிர்த்துவிட்டு எந்தவோர் ஆட்சியாளரும் எதையும் செய்துவிட முடியாது. எந்தவொரு கட்சியும் இலங்கையில் முழுமையான ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டுமானால் தமிழர் ஆதரவு கட்டாயமாகத் தேவை. அரசியல் சக்தியாக மாறும் முடிவை, தேர்தல் மூலம் ஆளும்கட்சிக்கு நெருக்கடிதரும் அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இறுக்கத்தைத் தளர்த்தி, நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை பல இழப்புகளையும், பின்னடைவையும் தமிழீழப் போராளிகள் தவிர்த்திருக்கக் கூடும் என்கிற சிந்தனைக்கு இடமளித்திருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். இலங்கைத் தமிழர் இன்று அரசியல் களத்தில் கொள்கையளவில் ஒன்றுபட்டு நின்றபோதிலும் அவர்களை வழிநடத்த பலமான இயக்கமோ, தலைமையோ இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறதே என்கிற ஆதங்கம் மேலெழுகிறது. தமிழர் பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்தி, சிங்களத் தமிழர் கலப்பினத்தை உருவாக்கி, தமிழர் குரலை ஒடுக்கிவிட முடியும் என்கிற இலங்கை அரசின் எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் மண் விழுந்திருக்கிறது என்பது திண்ணம். இருபது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு, துன்பப்பட்டு மடிந்து மடிந்து ஒரு தஞ்சமும் இல்லாமல் மடியும் நிலைமைக்குத் தள்ளப்பட்டபோதும், மீண்டும் எழுந்துநிற்கும் தமிழர்கள் மத்தியில் ஊடுருவிகளாகக் குடியேற சிங்களர்கள் இனிமேல் ஒரு முறைக்கு நான்கு முறை யோசிப்பார்கள். இனிமேல் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகளைத் தொடர இலங்கை அரசும் துணிவு கொள்ளுமா என்பதேகூட சந்தேகம்தான். இந்த வெற்றியை இலங்கையின் ஆளும்கட்சியோ அல்லது எதிர்க்கட்சியும்கூட தாங்கிக் கொள்ளாது. இந்த வெற்றியைச் சிதைப்பதற்கு தமிழர் மத்தியில் புதிய புதிய கட்சிகளை உருவாக்கி, வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் வாய்ப்பும் அதிகம். இதற்காக எத்தனை கோடி கொடுத்தும், புதிய தமிழர் அமைப்புகளை உருவாக்க சிங்கள அமைப்புகளும் உதவக்கூடும்.இத்தனை காலம் சிந்திய ரத்தத்தின் நிறம் மாறாத மண்ணுக்காகவும், தாங்கள் இழக்க நேர்ந்த தமிழர் உயிர்களுக்காகவும், இப்போதும்கூட காணாதோர் பட்டியலில் உள்ள 1.40 லட்சம் தமிழர்களைக் கருத்தில் கொண்டும், அந்த மண்ணில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சி மட்டுமே தனித்து நிற்கவும், அந்த அரசியல் பலத்தின் மூலம் இலங்கைவாழ் தமிழர்கள் தங்களது நியாயமான சம உரிமையைப் பெறவும் உறுதிபூண வேண்டும்.இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்த கட்சிகளுக்கு அதைப்பற்றி யோசிக்கவே நேரமில்லாதபடி காராகிரகக் கவலைகள் இருக்கின்றன. அதற்குப் பதிலாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கையின் வடபகுதியில் குடியமரச் செய்து, தமிழர்களின் வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதைப் பற்றி ஏன் யோசிக்கக் கூடாது?இலங்கையில் குடியரசுத் தலைவர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சிமுறை அமலில் இருக்கும்வரை, சிறுபான்மைத் தமிழர்களின் நலன் பேணப்படாது. மீண்டும் நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டால் மட்டுமே, தமிழர்களுக்கு மரியாதையும், ஆட்சியில் உரிய பங்கும், தமிழர்கள் வாழும் பகுதியில் வளர்ச்சியும் உறுதிப்படுத்தப்படும். அதற்கு யார் குரல் கொடுக்கப் போவது என்பதுதான் கேள்வி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக