திங்கள், 25 ஜூலை, 2011

சலுகைகளைப் புறந்தள்ளி உரிமைக்குர​லை ஓங்கிஒலித்​த தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்​த நன்றி!

சலுகைகளைப் புறந்தள்ளி உரிமைக்குர​லை ஓங்கிஒலித்​த தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்​த நன்றி!

நடந்துமுடிந்த உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அதன்போது அவர் தெரிவித்ததாவது: சிங்கள மக்கள் அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளனர். அதனைப்போன்றே தமிழ் மக்கள் தங்களது ஆதரவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியுள்ளனர். எனவே அரசாங்கம் எமது மக்களின் தீர்ப்பை ஏற்று காலதாமதம் செய்யாமல் இனப்பிரச்சினைக்கு உரிய முறையில் விரைந்து தீர்வு காண முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:
அடம்பன் கொடி திரண்டால் மிடுக்கு என்ற பழமொழிக்கு ஏற்ப வாக்கை மட்டுமே ஆயுதமாகக்கொண்டு ஆயுதம் ஏந்தியும், நாய், கோழி என்பனவற்றை வெட்டிப்போட்டும், மலக்கழிவுகளைவீசியும் அச்சுறுத்தி, உதவிகள் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை வழங்குவதுபோல் நடித்து, ஏதோ அபிவிருத்திப்பணிகளைத் தாங்கள் வேகமாக முன்னெடுத்துவருவதாகக் காட்ட முற்பட்டு எமது உரிமைகளை மறைக்க முற்பட்டபோதும் எமது மக்கள் எமக்குரித்துடைய உரிமைகளை எமக்கு வழங்கினால் எமது தேவையை உணர்ந்து அபிவிருத்தியை நாமே முன்னெடுப்போம் என்று தங்களது குரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நன்றாகக் கேட்கும் வகையில் ஓங்கி ஒலித்துள்ளார்கள். அவர்களுக்கு வன்னி மக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வடக்கு-கிழக்கு மக்கள் தாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுவருவதை உலகிற்கு எடுத்தியம்பியுள்ள அதே நேரத்தில், இறுதியுத்தத்தில் தாங்கள் சந்தித்த கொடுமைகளையும் கொடூரங்களையும் நன்கு மனத்தில் இருத்தி தங்களது சோகங்களையும், வேதனைகளையும் இறக்கிவைக்கும் ஒரு இடமாகவே இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளமை இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு நீங்;கள் அளித்துள்ள வாக்களிப்பிலிருந்து நிரூபணமாகின்றது.
அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் அன்பளிப்புகளுக்கு நன்றிக்கடன் என்றபெயரில் உரிமையை விட்டுக்கொடுக்காமல் உங்களது துணிச்சலை அமைதியான முறையில் உலகிற்கு உணர்த்திய உங்களது நெஞ்சுரத்தை மனமார வாழ்த்துகின்றேன்.
எமது காணிகள் பறிபோகாமல் தடுப்பதற்கும், எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை விரைவாக மேற்கொள்வதற்கும் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் உங்களது வாக்கு எங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். சர்வதேச சமூகம் இனியும் எமது பிரச்சினையில் பார்வையாளராக இருக்க முடியாது என்பதையும் எமது இறைமையை நாம் யாருக்கும் தாரைவார்த்துவிடவில்லை என்பதையும் மீண்டும் ஒருமுறை உங்களது வாக்குப் பலத்தால் நிரூபித்துவிட்டீர்கள்.
இனியாவது அரசாங்கம் தடுத்துவைத்திருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க முன்வரவேண்டும் என்று இத்தருணத்தில் கோருகின்றேன்.
எத்தடைகள் வரினும் எமது உரிமைக்குரல் சர்வதேசத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதை மட்டும் உறுதியுடன் சொல்லிக்கொண்டு அரசாங்கத்தின் அனைத்துக் கொடூரங்களுக்கும் சாட்சிகளாக இருக்கும் நீங்கள் எமக்கிட்டுள்ள ஆணையை சிரமேற்கொண்டு எமது பணியைச் செவ்வனே செய்வோம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் திடசங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இத்தருணத்தில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பை நாம் மறக்க முடியாது. அவர்களின் பணி அளப்பரியதுளூ வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. உள்ளுராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தலை மிகவும் முக்கியமான தேர்தலாக அரசாங்கம் மாற்றியதிலிருந்து அச்சு ஊடகம், இலத்தரணியில் ஊடகம் மற்றும் இணைய ஊடகத்துறையினர் தமது பங்களிப்பினை மிகவும் காத்திரமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Short URL: http://meenakam.com/?p=30922

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக