செவ்வாய், 26 ஜூலை, 2011

அலைக்கற்றை ஊழல்: மன்மோகன், ப. சிதம்பரத்துக்கும் பொறுப்பு

2 ஜி: மன்மோகன், ப. சிதம்பரத்துக்கும் பொறுப்பு

First Published : 26 Jul 2011 01:58:34 AM IST

Last Updated : 26 Jul 2011 03:28:42 AM IST

புது தில்லி, ஜூலை 25: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றதாக சிறப்பு நீதிமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் சுசீல் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.  பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ஆ.ராசா சார்பில் வழக்கறிஞர் சுசீல் குமார் ஆஜராகி வாதிட்டார்.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக அப்போது அவர் கூறினார். அவர் மேலும் கூறியது:  மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகள் எதிலும் தவறு இல்லை. முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளையே அவரும் பின்பற்றினார்.  2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நடைமுறை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதே இருந்து வந்தது. அதே நடைமுறையைத்தான் ஆ.ராசா பின்பற்றி வந்துள்ளார். இதில் அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை; கொள்கையையும் மாற்றவில்லை.  சட்ட விதிகளுக்கு உள்பட்டே டி.பி. ரியாலிட்டி, யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பிரதமர் நன்றாக அறிவார். இதனை அவர் மறுக்க மாட்டார். தவறு இருந்திருக்கும் பட்சத்தில் பிரதமர் இந்த ஒதுக்கீட்டை அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாம்.  மத்திய அமைச்சரவை வழங்கிய அறிவுரையின் பேரில் நடந்த இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ஒப்புதல் அளித்திருந்தார்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த அருண் செüரி 26 உரிமங்களும், பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் 25 உரிமங்களும் வழங்கியிருக்கின்றனர்.  ஆ.ராசா தொலை தொடர்பு துறையின் அமைச்சராக பணியாற்றியபோது 122 உரிமங்கள் அளித்திருக்கிறார். எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தில் ஆ.ராசாவிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன்? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது?  ஆ.ராசா குற்றமற்றவர். முந்தைய அரசுகளின் கொள்கையைப் பின்பற்றியது தவறு என்றால் 1993 முதல் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த அனைவரும் ஆ.ராசாவுடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.  அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திறமையாகப் பணி புரிந்தார். அந்தக் கால கட்டத்தில்தான் மொபைல் அழைப்புக் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. நாட்டில் ரிக்ஷா ஓட்டுபவர் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களும் பயன் அடைந்துள்ளனர் என்று வாதிட்டார் சுசீல் குமார்.  இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படலாம் என "தினமணி' கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக