திங்கள், 25 ஜூலை, 2011

பாகுபாட்டுடன் செயல்படுகிறது ம.பு.க. /சிபிஐ: பொதுக்குழுவில் திமுக குற்றச்சாட்டு

தமிழ் மொழிக்காகவும் தமிழர் நலனுக்காகவும் பாடுபட்ட தி.மு.க.இன்று தமிழ் ஈழ வாக்கெடுப்பு என்றுகூடச் சொல்வதற்கு அஞ்சி உரிமைகளைக் காத்திட அரசியல் தீர்வு என்று மழுப்புகிறதே! அந்தோ! பரிதாபம்! குடும்பப் பாசத்தை மறைப்பதற்காகத் தமிழ்ப்பாச வேடமா? குடும்பப் பாசம் மறைந்தால்தான் தமிழின்ப்பற்று தலைதூக்கும் என்பதை உணர்வது எப்போது?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பாரபட்சமாகச் செயல்படுகிறது சிபிஐ:
பொதுக்குழுவில் திமுக குற்றச்சாட்டு

First Published : 25 Jul 2011 02:14:56 AM IST

Last Updated : 25 Jul 2011 03:27:06 AM IST

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் குழுக்கூட்டத்தில் பேசுகிறார் திமுக தலைவர் மு.கருணாநிதி. (வலது) கூட்டத்தில் பங்கேற்ற மகளிர் அணியினர்.
கோவை, ஜூலை 24: கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பதைத் தடை செய்யும் சிபிஐ-யின் நடவடிக்கை உள்நோக்கத்துடன், பாரபட்சமாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது திமுக.  லோக்பால் மசோதாவை வரவேற்றுள்ள திமுக, அதன் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.  கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சிபிஐ மீது புகார் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  சிங்காநல்லூர் அண்ணா வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுக்குழு கூடியது. பொதுச் செயலர் க.அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலர் ஆர்க்காடு நா.வீராசாமி, தலைமை நிலையச் செயலர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலர்கள் பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கடந்த பேரவைத் தேர்தலில் திமுக அணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற தீர்மானங்கள்:  சிபிஐ-யின் ஒருதலைபட்சமான நடவடிக்கை: மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரி குறிப்பிட்ட ரூ.1.70 லட்சம் கோடி இழப்பு குறித்தும், இதுதொடர்பான பிற விவரங்கள் தொடர்பாகவும் நாடாளுமன்றக் குழுக்கள் விசாரித்துக்கொண்டிருக்கின்றன.  அலைக்கற்றை ஒதுக்கீடு அரசு கொள்கையின் அடிப்படையிலா அல்லது தன்னிச்சையாகச் செய்யப்பட்டதா என்பதற்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கு உள்ளது.  ஆனால், இப் பிரச்னைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சி இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு, அதில் 20 சதவீதப் பங்கு உள்ளவர் என்ற முறையில் கனிமொழியும், நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.அவர்கள் ஜாமீனில் வருவதற்குக்கூட சிபிஐ கடுமையாக ஆட்சேபித்து, இத்தனை நாள்கள் சிறையில் வைத்திருப்பது இயற்கை நியதிக்கும், நியாயத்துக்கும், இவ்வழக்கின் சூழ்நிலைக்கும் புறம்பாக இருக்கிறது.  கனிமொழி ஜாமீனில் வெளிவருவதைத் தடை செய்யும் சிபிஐ-யின் நடவடிக்கை உள்நோக்கத்தோடு கூடிய ஒரு பாரபட்சமான நடவடிக்கையாகும்.  2 ஜி அலைக்கற்றை வழக்கு: 2-ஜி அலைக்கற்றை முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்காலகட்டத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்களும், மற்றவர்களும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்துள்ளனர்.  2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கொள்கை முதலில் யாரால் உருவாக்கப்பட்டது? பின்னர் யாரால் மாற்றம் செய்யப்பட்டது? இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதா? என்பதற்கெல்லாம் பதில் கிடைக்காத நிலை உள்ளது. நாடாளுமன்றக் குழுக்களின் விசாரணையும் இன்னும் முடியவில்லை. இச்சூழலில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, அவரைத் தொடர்ந்து பத்திரிகைகளில் இப் பிரச்னை எழுப்பப்பட்டதன் அடிப்படையில் ஏற்கெனவே அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஆகியோர் பதவி விலகியிருக்கின்றனர். இப் பிரச்னைக்கு விரைவில் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.  லோக்பால் வரம்புக்குள் பிரதமர்: பொதுவாழ்வில் ஈடுபடுவோர் ஊழல் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை 1973-லேயே கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்தது. இச்சூழலில் மத்திய அரசு கொண்டு வரும் லோக்பால் மசோதாவை திமுக வரவேற்பதோடு, அதன் வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.  இலங்கையின் போர்க்குற்றத்துக்கு நடவடிக்கை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் ஐநா-வில் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கொடுஞ்செயலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காத்திட அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி ஓர் அரசியல் தீர்வுக்கு வழிகாண வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக