திங்கள், 25 ஜூலை, 2011

இடச் சிக்கல் - மத்திய அரசிடம் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முறையீடு- மாநில அரசின் முடிவுக்குக் காத்திருப்பு


மத்திய அரசு தன்னுடைய அலுவலகம் என்ற கடமை உணர்ச்சியுடன் சிக்கலை விரைவில் தீர்க்க வேண்டும். தமிழக அரசு தமிழ்மொழி தொடர்பான அமைப்பிற்கு உதவ  வேண்டியது கடப்பாடு என்ற நிலையில் உதவ வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

இடப் பிரச்னை: மத்திய அரசிடம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முறையீடு- மாநில அரசின் முடிவுக்கு காத்திருப்பு

First Published : 25 Jul 2011 02:31:01 AM IST


சென்னை, ஜூலை 24: இடப் பிரச்னையில் எந்தவொரு முடிவும் ஏற்படாத காரணத்தால், மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையிடம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் முறையீடு செய்துள்ளது. அதேசமயம், தமிழக அரசு மாற்று இடம் வழங்கும் என்றும் தமிழாய்வு நிறுவனம் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.  தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததைத் தொடர்ந்து, அதற்கென தனியாக ஆய்வு நிறுவனத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் விளைவாக, சென்னையில் செம்மொழிவுத் தமிழாய்வு மத்திய நிறுவன அலுவலகம் கடந்த 2008-ம் ஆண்டு மே 19-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆய்வு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  முனைவர் பட்டத்துக்கு மாதத்துக்கு ரூ.12 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், முனைவர் பட்ட மேற்படிப்புக்கும் தனியாக உதவித் தொகை அளிக்கப்படுகிறது. தமிழ் மொழியில் பல்வேறு ஆய்வுகளையும், பணிகளையும் மேற்கொள்ளும் தமிழறிஞர்களுக்கு பல்வேறு விருதுகளும் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.  தொல்காப்பியர் விருது, தமிழ் மொழியில் ஆய்வு மேற்கொள்ளும் வெளிநாட்டவர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியருக்கு குறள்பீடம் விருது, இளைய தலைமுறையினரை ஊக்குவிக்க தனியாக விருதும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  இடப் பிரச்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகமும், நூலகமும், சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. இடப்பிரச்னை காரணமாக, அந்த நூலகத்தை சென்னை கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண்டபத்துக்கு மாற்றியது அப்போதைய திமுக அரசு.  நூலகம் முழுமையான வடிவம் பெற்று பணிகள் தொடங்கிய நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, புதிய தலைமைச் செயலகத்தில் இருந்து பழைய தலைமைச் செயலகத்துக்கு சட்டப் பேரவை இடமாற்றம் செய்யப்பட்டது. செம்மொழி தமிழாய்வு நிறுவன நூலகத்தில் பயன்படுத்தப்பட்ட நூல்கள் அனைத்தும் புதிய தலைமைச் செயலகத்தில் உள்ள மூன்று அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், நூலகம் செயல்படாமல் முடங்கியுள்ளது.  செயல்பட வைக்கத் தீவிரம்: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நூலகமும், அலுவலகமும் சீராக செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  சென்னையில் பிரதான இடத்தில் வாடகைக் கட்டடத்தைக் கோரியது அந்த நிறுவனம். அமைந்தகரையில் பல ஆயிரம் ரூபாய் மாத வாடகையில் கட்டடம் ஒன்று பேசப்பட்டு வருகிறது. அதேசமயம், இந்த அளவுக்கு வாடகை கொடுப்பதை விட, சென்னை புறநகர்ப் பகுதியில் தமிழாய்வு நிறுவனத்துக்கென ஒதுக்கப்பட்ட நிலத்தில் தாற்காலிக கட்டடம் கட்டலாம் என்ற யோசனையும் கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து, மத்திய அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் கலந்து பேச தமிழாய்வு நிறுவன அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  மத்திய அரசிடம் முறையீடு: இடப் பிரச்னை தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் வருகிறது. இங்கு நிலவும் இடப்பிரச்னை குறித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.  அதேசமயம், தமிழக அரசின் முடிவுக்காகவும் தொடர்ந்து காத்திருக்கிறது. மாநில அரசின் சார்பில் ஏதாவது விசாலமான இடம் ஒதுக்கப்படும் என தமிழாய்வு நிறுவனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சென்னை புறநகர்ப் பகுதியில் ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டடம் கட்டும் பணியையும் முழுவீச்சில் முடிக்கும் பணியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தினர் இறங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக