வெள்ளி, 29 ஜூலை, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும்: மதிமுக

நல்ல கருத்து. ஆனால், அவ்வாறு இந்தியா தடை விதித்தால் இனப்படுகொலையின் முழுப்பின்னணியில் இந்தியா இருந்ததைச் சிங்களம் அம்பலப்படுத்தி விடும். எனவே, அதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்துப்பேச வேண்டும். காங்கிரசு ஆட்சியை அகற்ற வே ண்டும். அப் பொழுதுதான் இனப்படுகொலை  புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும்: மதிமுக

இலங்கைக்கு அளித்து வந்த உதவிகளை நிறுத்தவும் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும். இவ்வாறு 27.07.2011 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக மதிமுக சார்பில்  ஈரோடு கணேசமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, டெல்லியில்  பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தலைமையில் 27.07.2011 அன்று, அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பல்வேறு கட்சியினரும் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினர்.
அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கட்சியின் எம்.பி.,யான ஈரோடு கணேசமூர்த்தி இது பற்றி கூறியதாவது:
உலகம் முழுவதும் மிக முக்கிய பிரச்னையாக இலங்கைத் தமிழர் பிரச்னை உருவெடுத்து வருகிறது. உலகத் தமிழர்களின் உணர்வுகளுடன் கலந்து நிற்கும் அது, துயரப் பிரச்னையாகக் காணப்படுகிறது. ஆரம்பத்தில் உலக நாடுகளின் கண்களை தந்திரமாக இலங்கை அரசாங்கம் மறைத்துவிட்டது.
ஆனால், அந்நாட்டு அரசாங்கம் செய்த போர்க் குற்றங்களை உலகமே தற்போது கண்டு மனம் பதறித் துடிக்கிறது. தமிழ் மக்கள் மீது இராணுவம் நடத்திய கோரத் தாண்டவத்தைப் பார்த்து, உலக நாடுகள் கண் கலங்கி நிற்கின்றன.
இலங்கையின் இந்தக் கொடுமையை, உலக நாடுகள் பலவும் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன; இலங்கைக்கு தங்களால் இயன்ற நெருக்கடியை அளித்தும் வருகின்றன. ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்துவிட்டன.
இலங்கைக்கு அளித்து வந்த உதவிகளை நிறுத்தவும் அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக