வெள்ளி, 29 ஜூலை, 2011

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர்: இலங்கைக் கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்

இனிமேல் தமிழகக் காவல்துறையே உரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தமிழக அரசு அறிவித்து  நடவடிக்கை எடுத்தால்தான் ஒரு திருப்பு முனை ஏற்படும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர்: இலங்கைக் கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்

First Published : 29 Jul 2011 02:28:03 AM IST


ராமேசுவரம்/வேதாரண்யம், ஜூலை 28: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் நாகை மீனவர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இரு வேறு சம்பவங்களில் புதன்கிழமை இரவும், வியாழக்கிழமையும் இந்த அத்துமீறலால் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் ராமேசுவரத்தைச் சேரந்த முனியசாமி என்ற படகு டிரைவருக்குக் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. மேலும், 4 படகில் இருந்த இறால் மீன்களையும் கடற்படையினர் பறித்துக் கொண்டனர். இனிமேல் அப்பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராமேசுவரம் மீனவர்கள் கூறியதாவது:ராமேசுவரத்தில் இருந்து ஜூலை 27-ம் தேதி சுமார் 400 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். ராமேசுவரம் படகுகள் அனைத்தும் இந்திய-இலங்கைக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 3 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி திரும்பிச் செல்லும்படி விரட்டினர்.அதையடுத்து, வலைகளை படகில் வைத்துக்கொண்டு கரை நோக்கி திரும்பத் துவங்கினோம். அப்போது, ராமமூர்த்தி என்பவரது படகு உள்பட 4 படகுகளில் இருந்த இறால் மீன்களையும் பறித்துக் கொண்டு படகில் இருந்த மீனவர்களையும் அவர்கள் தாக்கினர். அதையடுத்து, அப்பகுதியில் மீன் பிடிக்க முடியாமல் கரைக்குத் திரும்பினோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.நாகை மீனவர்களின் வலைகள் துண்டிப்பு: முன்னதாக, நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தத் தமிழக மீனவர்களின் வலைகளைத் துண்டித்து 3 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை இரவு விரட்டியடித்தனர்.நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்த ரெ. முருகச்செல்வன், சு. காஞ்சியப்பன், மு. துரை (35) மூவரும் கோடியக்கரையிலிருந்து தென்கிழக்குத் திசையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம்.அப்போது அங்கு படகில் வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களுடைய வலைகளைத் துண்டித்து விட்டு விரட்டியடித்தார்களாம். துண்டிக்கப்பட்ட 4 வலைகளின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.கரைக்குத் திரும்பிய மீனவர்களிடம் வேதாரண்யம் வட்டாட்சியர் அ. அசோகன், சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ் மற்றும் கடலோரக் காவல் நிலைய போலீஸார், தனிப் பிரிவு, உளவுப் பிரிவு, மீன்வளத் துறை அலுவலர்கள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்."தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியம் தொடர்கதையாகிவிட்டது. இதனால், மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். இப்பிரச்னை குறித்து இலங்கை அரசிடம் மத்திய அரசு பலமுறைப் பேச்சு நடத்தியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை' என்று மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக