First Published : 27 Jul 2011 01:28:10 AM IST
சென்னை, ஜூலை 26: இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் கட்சிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி, தனித் தமிழ் ஈழத்துக்கான தீர்ப்பாகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.இது குறித்து திங்கள்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:வைகோ: இலங்கையில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது.இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று 1976-ல் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை செல்வா தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பிறகு 1977-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 90 சதவீத தமிழர்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதுபோல, இப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழ் ஈழ ஆதரவாளர்களையே தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தனித் தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடி தேர்தல் முடிவாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.மக்களிடம் வாக்குப் பதிவு நடத்தி அதன் அடிப்படையில் எரித்ரியா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் நாடுகளை ஐ.நா. சபையும், உலக நாடுகளும் அமைத்துக் கொடுத்தன. அதுபோல உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில் தனி ஈழத்தை அமைப்பதற்காக ஈழ மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.டாக்டர் ராமதாஸ்: வன்முறை, பணபலம் ஆகியவற்றை மீறி இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜபட்ச அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும், தனித் தமிழ் ஈழமே தேவை என்பதையும் ஈழத் தமிழர்கள் உணர்த்தியுள்ளனர். தனித் தமிழ் ஈழத்துக்கான தீர்ப்பாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. சிங்களவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அதிபர் ராஜபட்சவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ வாய்ப்பே இல்லை என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை உணர்ந்து தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து தனித் தமிழ் ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழகத் தமிழர்கள் உள்பட உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக