செவ்வாய், 26 அக்டோபர், 2010

ஏழு கன்னியர் சிற்பத்தின் கல்லில் 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு எழுத்துகள்

விழுப்புரம், அக். 25: விழுப்புரம் திரு.வி.க. வீதி அய்யனார் கோயிலில் இருந்த ஏழு கன்னியர் சிற்பத்தின் கீழ்ப் பகுதியில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.  ÷திரு.வி.க. வீதியில் உள்ள பாண்டி அழகர் அய்யனார் கோயிலில் திருப்பணி நடந்து வருகிறது.  ÷இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த ஏழுகன்னியர்களின் புடைப்புச் சிற்பத்தில் கல்லெழுத்து வாசகங்கள் இருப்பதை விழுப்புரம் கல்வெட்டு ஆராய்சியாளர்கள் சி.வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.  ÷எழுத்தாளர் கோ. செங்குட்டுவன் அளித்த தகவலின் பேரில், கோயில் பரம்பரை அறங்காவலர் ஏ.சி. குமார் முன்னிலையில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ÷இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறியிருப்பது: தமிழகத்தில் பெண் தெய்வ வழிபாட்டில் ஏழு கன்னியர்கள் வழிபாடு என்பது கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் சிறந்தோங்கி வந்துள்ளது.  ÷சிவாலயங்களில் தென்திசை திருச்சுற்று மேடையில் அறுபத்து மூவர் சிற்பங்கள் அமைந்த பகுதியிலேயே கன்னியர்களான மகேஸ்வரி, பிரம்மி, இந்திராணி, வைஷ்ணவி, கெüமாரி, வராகி, சாமுண்டேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.  ÷இவர்களுடன் முழுமுதற் கடவுளான கணபதியாரும், வீரபத்திரர் யோகப்பட்டம் அணி செய்ய யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் அமைத்திருப்பர்.  ÷பாண்டி அழகர் அய்யனார் திருக்கோயிலில் ஒரே பலகைக்கல்லில் செதுக்கப்பட்ட கன்னியர்கள் சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர். வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து, இவர்கள் அருள்பாலிக்கின்றனர்.  ÷வலக்கரங்களில் தாமரை மொட்டுகளை ஏந்தியுள்ளனர். இடக்கரங்கள் அவரவர் தொடைகளில் தாங்கியுள்ளனர். இவர்களது தலைகளில் உள்ள கொண்டைகள் இடப்பக்கம் முடியப்பட்டுள்ளன.  ÷அழகே உருவான இந்த ஏழு கன்னியர்களின் புடைப்பு சிற்பத் தொகுதியில் கணபதியாரோ, வீரபத்திரரோ இடம்பெறவில்லை.  ÷சிற்பத்தின் கீழ்ப்பக்கம், அடிப்பக்கம், வலப்பக்கங்களில் ஏழு வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.  ÷மங்கலச் சொல்லான ஸ்வஸ்திஸ்ரீ என்ற சொல்லோ, மன்னர்களின் பெயரோ, அவர்களின் மெய்கீர்த்தியோ அல்லது ஆட்சியாண்டோ இதில் இல்லை.  ÷அன்றாடம், கணபதியார் வழிபாடு நடத்துவதற்கும், ரிஷபம் அமைக்கவும், அமுதுபடி செய்யவும், திருவிழா நடத்துவதற்கும், சந்தி மற்றும் அணையா நந்தா விளக்கெரிக்கவும், தனித்தனியே பொற்காசுகள் வழங்கப்பட்டதையும் கல்லெழுத்து வாசங்கள் கூறுகின்றன.  ÷எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலம் கி.பி. 16, 17-ம் நூற்றாண்டு எனலாம். தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரத்தில் கல்லெழுத்து வாசங்களுடன் கூடிய ஏழு கன்னியர்களின் சிற்பத் தொகுதி இதுவரைக் கண்டறியப்படவில்லை. இப்படி கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக