வியாழன், 28 அக்டோபர், 2010

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு


சென்னை, அக். 27: பச்சை மையை யார்,எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கண்ட இடங்களில் தொட்டதற்கு எல்லாம் பச்சை மையை உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.  தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த காலங்களில் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர். அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள், பதிவு பெறாத அதிகாரிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டனர்.  இந்தப் பிரிவு அகற்றப்பட்டு, "ஏ, பி, சி மற்றும் டி' பிரிவு ஊழியர்கள் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், உதவி இயக்குநர் நிலையில் இருந்து பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளும் பச்சை மையை பயன்படுத்துகின்றனர்.  முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூட ஊதா மற்றும் கருப்பு நிற மையை உபயோகப்படுத்தும் போது, அதிகாரிகள் பச்சை மையை பயன்படுத்துவது பல்வேறு எதிர்ப்புகளை கிளப்பியது.  இந்த நிலையில், பச்சை நிற மையின் பயன்பாடு குறித்து அரசிடம் கோரப்பட்ட தெளிவுரைகளுக்கு விளக்கம் அளித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை புதிய உத்தரவினை வெளியிட்டுள்ளது.  அரசு அலுவலகங்களில் நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ணத்திலான மைகளை மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத பயன்படுத்த வேண்டும். இவைகளைத் தவிர பிற வண்ண மைகளை பயன்படுத்தக் கூடாது.  யார் பச்சை மை பயன்படுத்தலாம்?: வரைவு உத்தரவுகள், அறிவிக்கைகள், விதிகள் போன்றவற்றில் திருத்தம் செய்யும் போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அதிகாரிகள் பச்சை நிற மையை பயன்படுத்தலாம். சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற மையை உபயோகப்படுத்தலாம்.  அரசு அலுவலகங்களில் மைப் பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம். சான்றொப்பம் (அபபஉநபஉஈ) இடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் பச்சை நிற மையினை பயன்படுத்த வேண்டும்.  பிரிவு "அ' அலுவலர்கள் மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுத பச்சை நிற மையை பயன்படுத்தலாம்.  இந்த உத்தரவு, அனைத்துத் துறைகளின் செயலாளர்கள், அனைத்துத் தலைமைச் செயலகத் துறைகள், அனைத்துத் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட நீதிபதிகள், தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக