ஞாயிறு, 24 அக்டோபர், 2010

வெளிநாடுவாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் தேவை: கி.வீரமணி


வேலூர், அக். 23: வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காப்பதற்கு தமிழக அரசில் தனி அமைச்சகம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.  திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7-ம் தேதி தொடங்கி, மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்தும் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளுடன், பேரணியும் நடைபெறும்.  இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், எஞ்சிருப்போரும் அடிப்படை உரிமைகள், வசதிகள் இன்றி அல்லல் படும் நிலை இன்றும் தொடர்கிறது.  ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முல்வேலி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் உதவியுடன் பாரம்பரிய தமிழர்களின் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு நேரடியாக தலையிட்டு எஞ்சியுள்ள தமிழர்களின் வாழ்வுரிமை, சுயமரியாதை ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். பஞ்சாப், கேரளம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தனி அமைப்பு உள்ளது.  தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தனிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும். தமிழக சட்டப் பேரவையிலும் இதுகுறித்த தனித் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.  நாடாளுமன்றத்தில் அளித்த உறுதியின்படி, அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். பிற்பட்டோருக்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்.  மத்திய தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகளை தமிழில் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதே தேர்வாணையம் நடத்தும் மற்ற தேர்வுகளில் பட்டதாரிகளுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களும் தமிழில் தேர்வுகளை எழுதும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.  பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்: இந்தியாவின் பருத்தி, பஞ்சு நூல் உற்பத்தியில் 45 சதவீதம் தமிழகத்தில்தான் நடைபெறுகிறது.  ஜவுளித்துறைக்கு தொடர்பில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்குப் பஞ்சை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு, செயற்கை விலை உயர்வை உண்டாக்குகின்றனர். இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கோ, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கோ எந்தப் பயனும் இல்லை.  எனவே, பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். உள்நாட்டுத் தேவைக்கு மேல் இருந்தால் மட்டுமே பருவகாலத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும், அளவை பங்கிட்டு ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.  திராவிடர் கழக பொதுச் செயலர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்

தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகளை வீரமணியார் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி அவ்வாறு அயல்வாழ்தமிழர் துறை என ஒன்றை அமைக்குமாறு சொல்ல வேண்டும். தமிழக அரசும் அயல்வாழ் தமிழர் நல வாரியம் ஒன்றை அமைத்து அயலகத்தமிழர்களின் நலனிலும் அயல்நாடு செல்லும் தமிழர் நலனிலும் கருத்து செலுத்த வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/24/2010 3:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக