இரண்டாவது உலகப்போரில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப்படைகள் நடத்திய ஈவுஇரக்கமே இல்லாத படுகொலைகளும், சித்திரவதைகளும் மீண்டும் ஒருமுறை மனித இனத்துக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் மனித நாகரிகம் இனி நடைபோட வேண்டும் என்பதற்காக அமைக்கப்படுவதுதான் ஐக்கிய நாடுகள் சபை!'சோவியத் யூனியன் அதிபர் ஜோசப் ஸ்டாலின், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமென் ஆகியோரின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் இப்படிக் கூறியவர் அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். தங்களது சரும நிறம் வெள்ளை என்பதால் உலகத்துக்கு நாகரிகம் கற்றுக் கொடுப்பவர்கள் தாங்கள்தான் என்கிற இறுமாப்பில் மிதக்கும் மேற்கு நாடுகளின் உயர்வு மனப்பான்மை, உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்க வல்லவர்கள் தாங்கள்தான் என்று கருத வைத்ததில் வியப்பென்ன இருக்கிறது?நாகரிகம் கற்றுக்கொடுத்து உலக சமாதானத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் இராக்கில் அரங்கேற்றியிருக்கும் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் அடால்ப் ஹிட்லரையும், பெனிட்டோ முசோலினியையும் உத்தமர்களாக்கிவிடும் போலிருக்கிறது. ஹிட்லராவது ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதில்தான் கவனம் செலுத்தினார். ஆனால், இவர்களோ தங்களது சுயலாபத்துக்காகவும் எண்ணெய் வளங்களை அபகரிக்கும் வியாபார எண்ணத்துடனும் கொன்று குவித்திருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல. 1 லட்சத்து 9 ஆயிரத்து 32 உயிர்கள்.கடந்த ஜூலை மாதம் "ஆப்கன் போர் டைரி' என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அல்-கொய்தாவுக்கு எதிராக நடத்திய தாக்குதல் தொடர்பான ரகசியக் குறிப்புகளை வெளியிட்ட அதே "விக்கிலீக்ஸ்' இணையதளம் இப்போது இராக்கில் ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்பான பல ரகசியக் குறிப்புகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. முன்பு இந்த இணையதளத்துக்கு ஆப்கானிஸ்தான் தொடர்பான கோப்புகளைத் தந்து உதவிய அதே "பென்டகன்' நபர்தான் இப்போது இராக் தொடர்பான தகவல்களையும் அம்பலப்படுத்த உதவியிருக்கிறார். அமெரிக்க ராணுவத் தலைமையகமான "பென்டகனி'ல் பாதுகாக்கப்பட்டு வரும் ஏறத்தாழ 4 லட்சம் ரகசிய ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் நம் ரத்தத்தை உறையச் செய்கின்றன. நாகரிக சமுதாயம் அரங்கேற்றியிருக்கும் காட்டுமிராண்டித்தனம் மனித இனத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது.இராக் நாட்டில் அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் நடத்திய ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 32. இதில் 66 ஆயிரத்து 81 பேர் அப்பாவிப் பொதுமக்கள். 23 ஆயிரத்து 984 பேர் "எதிரிகள்' என்று அமெரிக்கப் படைகளால் முத்திரை குத்தப்பட்டவர்கள். 15,196 பேர் சதாம் ஹுசைனின் ராணுவத்தினர். அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளின் மொத்த உயிரிழப்பு வெறும் 3,771 மட்டுமே.ஜனவரி 1, 2004 முதல் டிசம்பர் 31, 2009 வரை நடந்த ஆக்கிரமிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் ஏறத்தாழ 60 சதவிகிதம் பேர் அப்பாவிப் பொதுமக்கள். அதாவது, 6 ஆண்டுகள் தினந்தோறும் சராசரியாக 31 அப்பாவி பொதுஜனம் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.அதுமட்டுமா? பல கைதிகள் இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டனர் என்றும், கண்கள் கட்டப்பட்டு சவுக்கால் அடிக்கப்பட்டனர் என்றும், கைகள் அல்லது கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டனர் என்றும், பலர் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றும் பல செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் இராக்கைத் தங்கள் வசப்படுத்திக்கொண்ட பிறகு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பேரைத் தயவுதாட்சண்யமே இல்லாமல் அந்த ராணுவத்தினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.சரணடைய வந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்று தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்கிரமிப்பு ராணுவம். ரசாயன ஆயுதங்களை வைத்திருந்தார் என்றும் அணுகுண்டு தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் அபாண்டமாகப் பழி சுமத்தி சதாம் ஹுசைனை ஒரு கொடுமைக்கார சர்வாதிகாரியாகச் சித்திரித்து, அதையே காரணம் காட்டி ஒரு சுதந்திர நாட்டின் மீது அடாவடி ஆக்கிரமிப்பு நடத்தியவர்கள் அரங்கேற்றியிருக்கும் மனித உரிமை மீறல்கள் மன்னிக்கப்படும். காரணம், இந்த அராஜகத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியிருப்பது உலக வல்லரசான அமெரிக்கா அல்லவா! உலகுக்கு நாகரிகம் கற்றுத்தர முயலும் வெள்ளை சருமத்தின் கருப்பு முகம் "விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் மூலம் இப்போது வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த தவறான தகவல்களின் அடிப்படையில் இராக்கில் ஆக்கிரமிப்பு நடத்தியதாக சுயவாக்குமூலம் அளித்திருக்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும், அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கும் லட்சத்துக்கும் அதிகமான மனித உயிர்களுக்குப் பொறுப்பேற்பதுதானே நியாயம்? உலகம் இவர்களை போர்க்குற்றவாளிகளாக நிறுத்தி விசாரித்துத் தண்டனை கொடுப்பதுதானே தர்மம்? சதாம் ஹுசைனைத் தூக்கிலிட்டுக் கொன்ற குற்றத்துக்கும் - இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?இனிமேல் நாகரிகம் பற்றிப் பேசும் அருகதை அமெரிக்கர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் கிடையாதுதான். ஆனால், நியாயத்துக்குக் குரல் கொடுக்க யாருமே இல்லையே, என் செய்ய?
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 4:17:00 AM
10/25/2010 4:17:00 AM


By Mani
10/25/2010 3:44:00 AM
10/25/2010 3:44:00 AM


By Mani
10/25/2010 3:40:00 AM
10/25/2010 3:40:00 AM


By Atlanat Guy
10/25/2010 3:30:00 AM
10/25/2010 3:30:00 AM


By A.Kumar
10/25/2010 1:35:00 AM
10/25/2010 1:35:00 AM


By ishan
10/25/2010 12:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/25/2010 12:56:00 AM