புதன், 27 அக்டோபர், 2010

தலையங்கம்: நல்லவேளை, நாம் பிழைத்துக் கொண்டோம்!

சாதாரண பொதுஜனத்தின் நலனையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யும் மனத்துணிவு மக்களால் மக்களுக்காக மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருப்பதுதான் வேடிக்கை, விசித்திரம்.சென்னை, தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள விளையாட்டுத் திடல் மற்றும் பூங்காவின் கீழே வாகன நிறுத்தச் சுரங்கம் அமைக்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி திட்டமிட்டபோது, அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் மாநகராட்சியின் தீர்மானம் சரியல்ல, ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் இவ்வாறு இருக்கின்ற பூங்காக்களைச் சேதப்படுத்துவது தவறு என்று நீதிமன்றம் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது.ஆனாலும், சென்னை மாநகராட்சி அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து  செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அனுமதிக்காமல் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்துவிட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி இருவரும் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் சென்னை மாநகராட்சி வெட்கப்படும்படியான கேள்விகளையும் கேட்டுள்ளனர். இப்போது கார்களை நிறுத்த இடம்தேடி அலையும் சென்னை மாநகராட்சி தியாகராய நகரில் முறையான அனுமதிபெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களை அனுமதிப்பதும், அந்த அத்துமீறிய கட்டடங்களைப் பின்னர் முறைப்படுத்துவதையும்தானே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்று நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு சென்னை மாநகராட்சி என்னதான் பதில் சொல்லிவிட முடியும்?சென்னை மாநகரில் கடந்த 12 ஆண்டுகளில் பெருகிவிட்ட கார்களின் எண்ணிக்கை காரணமாகத்தான் இந்த வாகன நிறுத்தச் சுரங்கத்தை அமைக்க மாநகராட்சி தீர்மானித்தது என்று சென்னை மாநகராட்சிக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் முகுல் ரகோத்கி கூறியதுடன், இந்தப் பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அதே நிலையில் பராமரிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியபோது, மாநகராட்சியின் உறுதிமொழிகளின் புனிதம் பற்றி நாங்கள் நன்றாக அறிவோம் என்று கேலியாகவே பதில் அளித்துள்ளனர் நீதிபதிகள். முறையான அனுமதியின்றி கட்டடங்களைக் கட்ட அனுமதித்தீர்களே, அங்கே வாகனங்கள் நிறுத்தும் இடம் இல்லையா? என்றும் கேட்டுள்ளனர்.மேலும், தில்லியில் கன்னாட் பிளேஸில் உள்ள பாலிகா பஜார் போன்று சென்னை மாநகராட்சியும் இத்திட்டத்தைத் திறம்படச் செய்யும் என்று கூறியபோதும்கூட நீதிபதிகள் ஏற்க மறுத்து, அங்கே மூச்சுத் திணறுகிறது. பாலிகா பஜாரின் உள்ளே சுவாசிப்பதே கடினம் என்றும் அங்கே இருந்த பூங்கா இப்போது எங்கே என்றும் பதில் கேள்வி எழுப்பினர். நல்லவேளை நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறதால் நாம் பிழைத்தோம். ஒரு வர்த்தகத் திட்டம் தடை செய்யப்பட்டு, மக்கள் நியாயம் வென்றிருக்கிறது.சாலை என்பது முதலில் மக்களுக்காகத்தான். வாகனங்களுக்காக அல்ல. நான் வரி செலுத்துகிறேன், சாலையில் வாகனத்தை நிறுத்தக் கட்டணம் தருகிறேன் என்பதெல்லாம் மிக அதிகமாக வாகனங்கள் புழங்கும் வெளிநாடுகளில்கூட எடுபடாத வாதங்கள். மக்கள் நடக்கவும், சைக்கிளில் செல்லவும் வழிவிட்டதுபோக, மீதி இடம் இருந்தால்தான் கார்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படும்.ஆனால், நம்நாட்டில் தலைகீழாக நடக்கிறது. பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இந்த வாகன நெரிசலைக் காரணம் காட்டி வேறு பாதையில் செல்வதற்கும், பேருந்து நிறுத்தங்களை நீண்ட தூரத்துக்கு மாற்றுவதற்கும் அதிகாரிகள் வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு வருகிறார்கள். கார்கள் மட்டுமே நேரடியாக கடைவாசல் வரைபோய், வாடிக்கையாளர்களைக் கடைவாசலில் இறக்கிவிட்டு சாலைக்கு இடையூறாக நிறுத்த அனுமதிப்பார்கள். வசதியில்லாத மக்களோ, எங்கேயோ நிறுத்தப்பட்ட பேருந்திலிருந்து இறங்கி, இந்த இடையூறுகளைக் கடந்து வந்தாக வேண்டும்.வசதி இருப்பவர்களுக்கு மேலும் வசதி. வசதி இல்லாதவர்களுக்கு மேலும் வசதி குறைப்பு. இதுதான் சுதந்திர இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக நாம் நேர்கொள்ளும் விபரீதம். இதன் நேரடிப் பாதிப்பை பெருகிவரும் குடிசைப் பகுதிகளும், அதிகரித்துவரும் மாவோயிஸ்ட் தாக்குதல்களும் உணர்த்துகின்றன.இந்தத் தீர்ப்பு ஏதோ சென்னை மாநகருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படக்கூடாது. இதே சிக்கல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் ஏற்பட்டுவிட்டது. சில மாநகராட்சிகள் பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டடங்களைக் கட்ட முனைப்புக் காட்டி வருகின்றன. ரயில்வே நிர்வாகம்கூட, முக்கிய இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்த மையங்களை அமைக்கத் தனியாரை ஊக்கப்படுத்துகிறது. அதாவது ""கட்டு-பராமரி-பின்னர் கொடு'' எனும் ஒப்பந்தத்தில் தொடங்க தனியாரை அழைக்கிறார்கள். இத்தகைய வாகன நிறுத்தும் இடங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதை நமது அரசியல்வாதிகள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு கார்களுக்கு ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்க முடியும் என்பதால், இத்தகைய முயற்சிகளில் தனியாரை -அல்லது தங்கள் பினாமிகளை- இறக்கிவிட்டு, அதன் மூலம் கொள்ளைலாபம் பார்க்க நினைக்கிறார்கள். நகரில் ஓர் இடத்தை விலைக்கு வாங்கி இதுபோல வாகன நிறுத்தும் இடங்களைத் தங்களது சொந்தச் செலவில் நடத்துவதைக்காட்டிலும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் சமூகநோக்கு என்கிற போலி காரணத்தைக்கூறி, ஊர்ப்பணத்தில் கொழிக்க அரசியல்வாதிகள் முற்பட்டிருக்கிறார்கள்.எந்த மாநகராட்சி என்றாலும், அங்குள்ள பல அடுக்கு மாடிக் கட்டடங்களின் தரைதளம், அவர்கள் சமர்ப்பிக்கும் வரைபடத்தின்படி, வாகன நிறுத்தும் இடமாகக் காட்டப்படும். ஆனால் நடைமுறையில் அங்கும் கடைவிரிப்பதும், கிடங்காகப் பயன்படுத்தும் போக்கும்தான் தொடர்கிறது. இந்தக் குற்றத்துக்காக எந்தக் கட்டட உரிமையாளர்கள் மீதும் எந்த ஒரு மாநகராட்சியாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.வீட்டில் கார் நிறுத்தவே இடமில்லை என்றாலும் கார் வாங்கி, தெருவில் நிறுத்திவைத்து, இரவில் போர்வைபோட்டு மூடி வைத்து, சாலையில் செல்வோருக்கு இடையூறாக நிற்கும் கார்கள்தான் நகரங்களில் அதிகம்.கார் நிறுத்த இடம் இருப்பவர்களுக்கு மட்டுமே கார் வாங்க முடியும் என்று சட்டம் வந்தால்? வராது. வர விடமாட்டார்கள். இந்த அரசும் ஆட்சியும் கார்களில் பயணிப்பவர்களால் கார் தயாரிப்பாளர்களின் லாபத்துக்காக நடத்தப்படும் ஆட்சியாக இருக்கும்போது பாதசாரிகளின் நலன் பேணப்படாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது!
கருத்துக்கள்

மக்கள் நலன் கண்ணோட்டத்தில் எழுதப்பெற்ற அருமையான தலையங்கம். இனியேனும் திருந்துமா உரிய அமைப்புகள்? திருந்துவார்களா ஆட்சியாளர்கள்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக