செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

Post subject: கருணாநிதி 'தமிழினத்துரோகி' பட்டத்தை மிக எளிதாகப்பெற்றுவிட்டா


Joined: Sun Aug 23, 2009 9:23 am
Posts: 2
செத்த பாம்பை அடிப்பானேன் என ஊரில் கேட்பார்கள். எனக்கும் செத்த பாம்பை அடிப்பதில் உடன்பாடில்லை. தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு செத்த பாம்பு. அவரை அடிப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. கருணாநிதி தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. கடந்த 70 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். அய்ந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர். இருந்தும் உலகத்தமிழர் அவரைத் தோளில் தூக்கிக் கொண்டாடாது தூற்றுகிறார்கள். துரோகி என்று பட்டம் சூட்டுகிறார்கள். கருணாநிதி நல்ல இலக்கியவாதி. ஏராளமான நூல்களை எழுதிக் குவித்திருக்கிறார். இலக்கியவாதி கருணாநிதியோடு எமக்குச் சண்டையில்லை. ஆனால் அரசியல்வாதி கருணாநிதி இன்று அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்த விபீடணன், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் வரிசையில் வைத்துப் பேசப்படும் துரோகியாகச் சித்திரிக்கப்படுகிறார். தமிழீழப் போராட்டம் பற்றி அவர் முன்பின் முரணாகப் பேசுவதும் தமிழீழ உணர்வாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து அழகு பார்ப்பதும் அவருக்குத் துரோகிப் பட்டத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

கடந்த காலத்தில் தமிழீழப் போராட்டம் பற்றி எக்கச்சக்கமான குத்துக் கரணங்களை கருணாநிதி அடித்திருக்கிறார். இப்போது கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் குட்டையை நாளும் பொழுதும் குழப்பி வருகிறார். அவர் தமிழீழம் பற்றிச் அரசியல் சிந்தாந்த அடிப்படையில் ஒருபோதும் ஆழமாகச் சிந்தித்ததே இல்லை. ஒரு கோட்பாட்டை உருவாக்கவே இல்லை. பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தார் என மேலோட்டமாகப் பேசியும் எழுதியும் வந்தார். கருணாநிதி “எனக்கு வன்முறை பிடிக்காது” என்பார். ஆனால் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை சுத்த வீரன் என்பார். 1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வி.புலிகளுக்குக் கொடுத்த ஆதரவை திமுக விலகிக் கொண்டுவிட்டது என்பார். மறுகணம் தமிழீழம் மலர்ந்தால் அதையிட்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான் என்பார். தமிழருக்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்பார். கருணாநிதி அனைத்துக் கட்சி கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், சட்ட சபையில் தீர்மானம், மனிதச் சங்கிலி, தில்லியில் பிரதமருடன் சந்திப்பு, மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம், தந்தி, கடிதம், உண்ணாவிரதம் எனத் தொடர் நாடகம் நடத்தினார். இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் இந்தியா தனது தூதரக உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி (பிரதமருக்கு) தந்தி கொடுப்பார். மறுகணம் மத்திய அரசின் நிலைப்பாடு திருப்தி அளிக்கிறது என்பார்.

“பதவி தோளில் போடும் துண்டு, கொள்கை நாம் உடுக்கும் வேட்டி” என்று அண்ணா சொல்லியதை மேற்கோள் காட்டிக் கருணாநிதி பேசுவார். ஆனால் தனது பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொடுக்க தில்லியில் நாள்கணக்கில் முகாம் இட்டு வெற்றியோடு திரும்புவார்.

பாரதிய ஜனதா கட்சியினரைப் பண்டாரங்கள், பரதேசிகள் எனத் திட்டிவிட்டு “அரசியலில் தீண்டாமை இல்லை” என்று சொல்லிக்கொண்டு பதவிக்காக அவர்களோடு கை கோர்த்து விடுவார். திருமாவளவன் உண்ணா நோன்பு இருந்தால் தன்னிச்சையாகச் செய்கிறார் என ஒப்பாரி வைப்பார். பின்னர் தானே இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லி சாகும்வரை அண்ணா நினைவாலயத்தில் உண்ணா நோன்பு இருப்பார். “போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விட்டது” என்று சிதம்பரம் தொலைபேசியில் சொல்ல உண்ணா நோன்பு 5 மணித்தியாலத்தையும் எட்டாத நிலையில் அதனைக் கைவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விடுவார்! தமிழகத்தை உலுக்கும் வண்ணம் மருத்துவர் இராமதாஸ் போராட்ட அறிவித்தல் செய்தால் 'இராமதாஸ் எனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்கிறார்” எனக் கூக்குரல் இடுவார். இதனால் கருணாநிதிக்கு அறளை பிறந்து விட்டது என்று பலர் நினைக்கிறார்கள். கருணாநிதி தமிழினத் தலைவர் என்ற பட்டத்தை போராடித்தான் பெற்றார். ஆனால் தமிழினத் துரோகி என்ற பட்டத்தை மிக எளிதாகத் தட்டிக் கொண்டுவிட்டார்!

இதை எழுதிக் கொண்டிருக்கும்போது சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடு எழுச்சியோடு நடந்து கொண்டிருக்கிறது. மாநாட்டு நிகழ்ச்சிகளை கனடிய தமிழ் வானொலி நேரடி ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்ட உலகத் தமிழர் பிரகடனத்தை வைக்கோ படித்தார். பின்னர் மக்கள் தீப்பந்தங்களைக் கையில் ஏந்தியவண்ணம் வைகோ படிக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இந்த மாநாட்டுக்கு வழக்கம் போல் கருணாநிதி பல முட்டுக்கட்டைகள் போட்டார். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்தாள்கள் மூலம் எச்சரிக்கை விடுத்தார்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலச்சினைகளைப் பொது விளம்பரங்களுக்குப் பயன்படுத்தல் மற்றும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வெளியிடுதல், காண்பித்தல், பொதுக்கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும் எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் 1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Unlawful Activities (Prevention) Act) தண்டனைக்குரிய குற்றங்களாகும். மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து மிரட்டியது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரகடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், பாண்டியன் ஆகியோர் கைதாகலாம் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது.

மிசா, தடா, பொடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை கடந்த காலங்களில் எதிர்த்து வந்த திமுக தற்போது காங்கிரசை மகிழ்விக்கவும் காங்கிரஸ் எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடக்கவும் பதவிகளைக் காப்பாற்றவும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், மதிமுக, கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை கருணாநிதி ஏவுகிறார். இதையிட்டு அவர் துளியும் வெட்கப்படுவதோ துக்கப்படுவதோ கிடையாது!

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டங்களில் வெளிப்படையாக விடுதலைப் புலிகளுக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் ஆதரவு தெரிவிக்கப்பட்டதுடன் அந்த இயக்கத்தின் கொடிகள் மற்றும் பிரபாகரனின் படத்துடன் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சென்னை, அமைந்தகரையில் திருமாவளவனின் பிறந்தநாளை “எழும் ஈழம்” என்று ஆகஸ்ட் 17-ல் கொண்டாடினார்கள். தமிழகம் முழுவதும் தலைவர் பிரபாகரன் படம், புலி இலச்சினை, புலிகள் ஆதரவு சுவரொட்டிகளையும் தட்டிகளையும் வைத்திருந்தனர். ஆனால் அவற்றை காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். குறிப்பாக ஈழம் என்ற பெயரை அழித்தார்கள். தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக தட்டிகள், சுவர் ஒட்டிகள் ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரியான காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் சி.ஞானசேகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் இயக்கங்கள், தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து கருணாநிதி மிரளுகிறார். அவர்கள் மீது சட்டம் பாயும் என எச்சரிக்கிறார். ஆனால் இதே கருணாநிதி கடந்த ஆண்டு என்ன சொன்னார்? உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டி அன்று ‘முரசொலி’யில் இப்படி எழுதினார்.

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003-ல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி.மாத்தூர் ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேதான் ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் கைது செய்யப்பட்டிருந்த பழ.நெடுமாறன், வைகோ. உள்ளிட்டோர் சுமார் ஒன்றரையாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா, தவறாக சுட்டிக் காட்டினார். திமுக ஆட்சியில் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா, தனது தவறான கருத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘முரசொலி’ ஏட்டில் (பிப்.19, 2008) விளக்கமாக விடுத்துள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகளையே எடுத்துக் காட்டிப் பதில் எழுதினார்.

“உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடாச் சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ளபோது ஒரு நபர், ‘பகிரங்கமாக அறிவிப்பதாலோ’ (பொடாவின் 20வது பிரிவு) அல்லது, “ஆதரவைக் கோரினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ” அல்லது “ஏற்பாடு செய்வதினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (பொடாவின் 21 ஆவது பிரிவு), ஒரு (பயங்கரவாத) அமைப்பின் எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கர வாதச் செயலை செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்? அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்”

(‘முரசொலி’ பெப்ரவரி19, 2008)

கொடூரமான ‘பொடா’ சட்டத்தின் கீழேயே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதோ, கூட்டம் நடத்துவதோ, குற்றமாகாது என்று வாதிட்ட அதே கருணாநிதிதான் இன்று 1968 ஆம் ஆண்டு சட்டத்தைக் காட்டி கருத்துரிமைக்கு வேட்டு வைத்துத் தனது தில்லி காங்கிரஸ் எசமானர்களை மகிழ்விக்கத் துடிக்கிறார்.

திமுக அரசு ஏடுகளில் வெளியிட்டுள்ள முழுப் பக்க விளம்பரம்.

“தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலட்சினைகளைப் பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் பிரசுரித்தல், காண்பித்தல் ஆகியவை Unlawful Activities (Prevention) Act 1967-படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது.

- தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு”


இந்திய காங்கிரஸ் இனப்படுகொலைக்குத் துணை போனாலும், தமிழர்களுக்காக கண்ணீர் விட்டு அழுதாலும் குற்றம் என்று காங்கிரஸ் கூறினால் கருணாநிதி காங்கிரசின் பக்கம் நின்று தமிழின உணர்வை நசுக்குவார்!

“இலங்கைப் பிரச்சினையிலும் கூட சுமூக நிலை ஏற்படக் கூடாது என்று வேண்டித் தவம் இருந்தவர்கள் யார் யார் என்பது எனக்குத் தெரியும். இப்போது சுமூக நிலை திரும்பிய பின்னரும் கூட கிளறி விட்டுக் கொண்டிருப்பவர்களையும் யார் யார் என்று எனக்குத் தெரியும். தமிழ்ப் பகுதியில் சகச நிலை திரும்பி விட்டது” எனக் கருணாநிதி திமிரோடு பேசியிருக்கிறார். மூன்று இலட்சம் மக்கள் போதிய உணவு, உடை, உறையுள், மருந்து இன்றி மழையில் நனைந்து அல்லல் படுவது கருணாநிதிக்கு இயல்பு நிலையாகத் தெரிகிறது!

தமிழ்நாடு சட்ட சபையில் பேசிய கருணாநிதி “தமிழீழம்” இனிச் சாத்தியமில்லை. தமிழர்கள் மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்துக்கும் சமவுரிமைக்கும் மொழிச் சமத்துவத்துக்கும் பிராந்திய மட்டத்தில் அதிகாரப் பரவலாக்கலுக்கும் பெருமுயற்சி செய்ய வேண்டும். இதுதான் சாத்தியம். தமிழீழம் சாத்தியமில்லை. ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்களவர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் பேச்சுக்களைப் பேசக்கூடாது. நேக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது சிங்களவர்களுக்கு கோபத்தை அதிகரித்துத் தமிழர்களது நலன்களை மேலும் பாதிக்கச் செய்யும். திமுக கழகத்தின் நிறுவனர் அறிஞர் அண்ணா தனித் திராவிட நாட்டை உருவாக்கும் முக்கிய கோரிக்கையை கைவிட்டார். கட்சி தடைசெய்யப்படுவதைத் தவிர்க்கவே அவர் அப்படிச் செய்தார்” என்றார்.

இது வால் அறுந்த நரி வாலில்லாமல் திரிய வெட்கப்பட்டு மற்ற நரிகளைப் பார்த்து “நீங்களும் என்னைப் போலவே வாலை அறுத்துவிடுங்கள்” என்று சொன்ன கதையாக இருக்கிறது. கருணாநிதி இன்னொரு பொய்யைச் சொல்கிறார். பிரிவினைக்கான சட்டம் திமுகவை தடை செய்யவில்லை. பிரிவினை கேட்கும் கட்சி தேர்தலில் நிற்க முடியாது என்று மட்டும் சட்டம் சொல்லியது. மேலும் திராவிட நாட்டுக் கோரிக்கையை அண்ணா கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் நீடிக்கிறது என்று சொன்னார். எது எப்படி இருப்பினும் கல்லறைக்குள் தூங்கும் அறிஞர் அண்ணா கருணாநிதியின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இப்போதுதான் தெரிகிறது சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் நாய்கள் போல் சுட்டுக் கொல்லப்படுவதையிட்டு கருணாநிதி ஏன் வாய் பொத்தி, கண் மூடி நேக்குப் போக்காக நடந்து கொள்கிறார் என்று. தட்டிக் கேட்டால் சிங்களவனுக்குக் கெட்ட கோபம் வரும் என்று கருணாநிதி அஞ்சுகிறார்.

தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, தமிழர் வீரம், தமிழர் மானம் எனக் கூறி ஆட்சியில் அமர்ந்து கொண்டு தமிழ் இனத்துக்குக் கருணாநிதி தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். இப்போது தமிழீழம் சாத்தியமில்லை எனச் சொல்லும் கருணாநிதி 1985 ஆம் ஆண்டு ரெசோ மாநாட்டில் இனச் சிக்கலுக்குத் தனித் தமிழீழமே சரியான தீர்வு என்ற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். அண்மையில் கூட "இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என்றார். “தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன்” என்றார். உண்மை என்னவென்றால் கருணாநிதி தமிழருக்காக ஒரு …..க்கூட இழக்கத் தயாரில்லை.

"தமிழர்கள் இன்னமும் ஏதிலிகளாக, சொந்த மண்ணிலேயே சோற்றுக்குப் பரிதவித்து, முள் வேலிக்குள் ஆடுமாடுகளைவிடக் கேவலமான கொடுமையின் கோரத் தாண்டவத்தில் பிடிபட்டு நித்தம் வேதனையால், வெட்கத்தால், அவமானத்தால், செத்தொழிந்து வரும் செய்தி எம்மை இரத்தக் கண்ணீர் விட்டு அழச் செய்கிறது” எனச் சுட்டிக்காட்டினால் சிங்களவனுக்குக் கோபம் வரும் என்பதற்காக கருணாநிதி வாய் மூடிக் கிடக்கிறார்.

கருணாநிதியை காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது. தனது மாலைக் காலத்தில் ஏதோ தமிழீழத் தமிழர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தோம் என்ற பெயரோடும் புகழோடும் கண்ணைமூடுவார் என்று நாம் எதிர்பார்த்தால் மனிதர் எல்லோரது வயிற்றெரிச்சலையும் திட்டுக்களையும் கட்டிக் கொண்டுதான் போவேன் எனப் பந்தயம் பிடிக்கிறார்.

- நக்கீரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக