வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

கருணாநிதிக்கு உயரிய விருது:
புதுச்சேரி அரசு பரிந்துரை



புதுச்சேரி, ஆக.27: தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு மத்திய அரசின் உயரிய விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது. இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு பரிந்துரை செய்ய உள்ளது. கருணாநிதிக்கு மத்திய அரசின் உயரிய விருது வழங்க சட்டப்பேரவை வலியுறுத்த வேண்டும் என்று தனிநபர் தீர்மானமாக எஸ்.பி. சிவக்குமார் (திமுக) சட்டப் பேரவையில் முன்மொழிந்தார். இதற்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் ராஜாராமன், சிவா (திமுக), விசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஆனந்து, லட்சுமிநாராயணன் (புமுகா), தியாகராஜன், பா. அங்காளன் (காங்கிரஸ்) ஆகியோர் பேசினர். இதை எதிர்த்து அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் ஒரு சில கருத்துகளைத் தெரிவித்தார். இதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கோரி திமுக எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்தனர். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் இருந்து பேரவையை நடத்திக் கொண்டிருந்த திமுகவைச் சேர்ந்த வி.எம்.சி. சிவக்குமார், அன்பழகன் பேசிய கருத்துகளை நீக்கினார். அதிமுக-திமுகவுக்கு இடையே பிரச்னை ஏற்படுவதை புரிந்து கொண்டு உடனடியாக தன்னுடைய இருக்கைக்குத் திரும்பினார் சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன். அப்போது முதல்வர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் புதுச்சேரிக்கும் சம்பந்தம் இருக்கிறது. அவர் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபடுபவர். அதனால் அவருக்கு மத்திய அரசு உயரிய விருது வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற இந்த அவைக்கு முழு உரிமை இருக்கிறது என்றார். இந் நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, சட்டப்பேரவைத் தலைவர் இருக்கையில் யார் அமர்ந்து பேரவையை நடத்தினாலும் எனக்குக் கொடுப்பது போன்ற உரிய மரியாதையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றார். அப்போது திமுகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் குறுக்கிட்டு, அன்பழகனை வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வெளியேறும் சூழ்நிலை உருவாகும் என்றார். இச் சமயத்தில் முதல்வர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்களை தாற்காலிகமாக சட்டப்பேரவையிலிருந்து நீக்கலாம் என்றார். இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க் களை தாற்காலிகமாக நீக்கி வைப்பதாக பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் எம்.ஜி.ஆர். இறந்த நேரத்தில் நடந்த சம்பவம் ஒன்றை சுட்டிக் காட்டிப் பேசினார். அப்போது சட்டப்பேரவை வராண்டாவில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளே நுழைந்து கூச்சலிட்டனர். அவர்களை பேரவைக் காவலர்கள் வெளியேற்றினர். இந்நிலையில் இத் தீர்மானத்தை அரசின் தீர்மானமாக நிறைவேற்றலாம் என்று முதல்வர் வைத்திலிங்கம் கூறினார். இதையடுத்து இந்தத் தீர்மானம் நிறைவேறியது. பின்னர் ஆர். விசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்), அனந்தராமன் (பாமக) ஆகியோர் குறுக்கிட்டு மறுபரிசீலனை செய்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை மீண்டும் அவைக்குள் அழைக்க வேண்டும் என்றனர். இந்த நிலையில் முதல்வர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நீங்களே அறிவுரை கூறி கூப்பிடுங்கள் என்றார். இச் சமயத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார். இருப்பினும் அதிமுக எம்எல்ஏக்கள் பேரவைக்குத் திரும்பவில்லை.
கருத்துக்கள்

4/4) "அன்னியர் ஆட்சியை அகற்றிநம் அடிமைத் தளையினை அறுத்திடத் தகாவழி நாடுதல் பிழையிலை . . . . . . . . . . . . . . . . . . தன்பெண்டு தன்தாய் தன்குடும்பம் பாராமல் தாய்நாட்டின் மானம் தனைக் காத்தல்கடமை " என்று அன்று (1972) சொன்னதைக் கேட்ட ஈழத் தம்பியர் உரிமை வாழ்வு கேட்டுப் போராடிய பொழுது கழுத்தறுத்தமைக்காக! இவையெல்லாவற்றையும் நம்மைவிடநன்கறிந்த இராசபக்சே எந்தப் பரிந்துரையும் இல்லாமலேயே உயர் விருதுகள்வழங்குவார் என்பது வேறு செய்தி. கலைஞர் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன் (உலகிலேயே மிகுதியான சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றிய பெருமையையும் மிகுதியான படைப்புகள் வழங்கிய ஆட்சியாளர் என்ற சிறப்பையும் தொல்காப்பியத்தையும் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் அனைவரிடமும் பரப்பிய பெருமையையும் பின்னுக்குத் தள்ளிய தற்போதைய கொடுஞ் செயலுக்கு வேறு என்ன சொல்வது?)

By Ilakkuvanar Thiruvalluvan
8/28/2009 2:53:00 AM

3/4 "பாரய்யா தமிழ் ரத்தம் பாய்வதை மண்ணில் ஏனய்யா திரிகின்றாய் வீரனாய் வீணாய் . . . . . . . . . . . . . . மானம் பெரிதென்பவன் தமிழன் - அதனை மறுப்பவனெல்லாம் பகைவன் எதிர்நின்று போர் புரியும் ஆற்றலில்லாக் கோழை பதர் நின்று நெல் அழிந்தால் பயன் தருமோ வாழ" என்று (1964) பாடினாரே தவிரத் தமிழ்க் குருதி ஈழ மண்ணில் பாயும் பொழுது பதைபதைத்துத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பாமைக்காக! பரிந்துரைக்கும் கலைஞர் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/28/2009 2:47:00 AM

2/4) "குடித்திடுவோம் உயிர்! கொடுத்திடுங்கள் நாட்டை! உரிமைகள் வேண்டாவெனும் பெரும் உபதேசம் நரிகளின் ஊளை . . . . . . . . . . . . புலி வாழ்வின் உச்சியிலே புதுமைதனைப் பொறித்திடுவோம்! " என்ற (1945) வரிகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய ஈழத் தம்பிகளைப் புறக்கணித்தமைக்காக! அவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வாய்மூடிக் கிடந்ததற்காக! "இத்தனையும் பார்த்துப் பொறுத்திருக்க இஃதென்ன தமிழ்நாடா! அல்லது இடுகாடா? சுடுகாடா?" என்று கேட்டவர் தமிழ் ஈழமே இடுகாடாகவும் சுடுகாடாகவும் மாறிய பின்பும் காங்.கின் கொள்கையே நம் கொள்கை என்று சொல்லி நிலையாமையை விளக்கிப் பாடல் பாடியமைக்காக! பரிந்துரைக்கும் கலைஞர் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/28/2009 2:46:00 AM

¼) கடந்த ஆண்டாயிருந்தால் பன்னாட்டு அவைக்குப் பரிந்துரைக்கக் கூறியிருக்கலாம். இப்போது சிங்கள அரசிற்கு இப் பரிந்துரையை அனுப்புவது பொருத்தமாக இருக்கும். காரணங்களில் சிலவற்றை நாம் நினைவு படுத்திக் கொள்வோம்! தன்னை நேசித்து, எரிதணலில் உடலை மாய்த்த இளஞ்சிங்கங்களைப் பற்றி, "இந்த இளந் தருக்கள் எரிதழலில் வெந்து சாகும் நிலை எதற்கு? . . . . . . . . . . . . . . . . . தோற்கின்றோம் தியாகத்தில் அவர்முன்னே தொழுகின்றோம் - அழுகின்றோம் எழுகின்றோம்; அவர் வீரம் நம் கையில் போர்வாளாயச் சுழலட்டும் - துரோகக் கூர்வாள்கள் உடையட்டும் தூள்! தூளாய்! " என்றவர் (1981) தமிழ் ஈழ மக்களை நேசித்துத் தம் உயிரை மாய்த்துக் கொண்ட வீரப்போராளிகள் முத்துக்குமார் முதலானவர் மறைவில் அமைதி காத்ததற்காக! பரிந்துரைக்கும் கலைஞர் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/28/2009 2:45:00 AM

absolutely welcome this news. Dr Kalaignar deserves Bharat Rathna. He has done more than what others done i.e those who have got Bharat Rathna. He must be honored.

By Chandra - USA
8/28/2009 1:25:00 AM

ஆம், கலைஞர் மு.கருணாநிதி இந்தியாவின் ஒப்பற்ற விருதான "பாரத ரத்னா" விருதுக்கு பாத்திரமானவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதனை மத்திய அரசு உணர்ந்தால், அதனை வழங்கிட சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், கலைஞர் அதை தன் வாழ்நாளிளிலேயே பெற்று, மகிழ்ந்தவராக வரலாறு சொல்ல வேண்டும்.

By பிரசாந்த் - இலண்டன்
8/28/2009 1:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக