ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி
ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்
பிரசுரித்த திகதி : 22 Aug 2009

ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறீலங்கா துணைத் தூதரகத்தின் முன்பாக வெள்ளி மதியம் 12 மணியிலிருந்து மாலை 7 மணிவரை ‘எங்களை வாழவிடு’ ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது.


கடந்த மே மாதம் இலங்கைத் தீவின் வடபகுதியில் சிறீலங்கா அரசபடைகள் மேற்கொண்ட பாரிய மனித அவலத்தின் போது இடம்பெயர்ந்த மக்களை அவர்கள் சொந்த இடங்களில் மீளக் குடியேற அனுமதிக்க வேண்டும் என சிறீலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வண்ணம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ‘எங்களை வாழவிடு’ நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மேமாதம் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையில் நடைபெற்று வந்த யுத்தம் முடிவடைந்ததாக அறிவித்த சிறீலங்கா அரசாங்கம், இப் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் 180 நாட்களிற்குள் அவர்களது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என அறிவித்திருந்தது. ஆயினும் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு மீள்குடியமர்த்தல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இம் மக்களின் தேவைகளை சிறீலங்கா அரசாங்கம் அலட்சியம் செய்யும் வேளையில் இதனை உலக நாடுகளிற்கு எடுத்துக் கூறும் வகையிலும், முகாம்களில் உள்ள மூன்று இலட்சம் மக்களை விடுவிக்க சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டி அவசியத்தை வலியுறுத்தியும் இப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

சிறீலங்கா அரசால் சர்வதேசத்திற்கு உறுதியளித்தபடி இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் தெரிவித்துள்ளது.

கடந்த 100 நாட்களிற்கு மேலாக நலன்புரி நிலையங்கள் என சிறீலங்கா அரசால் சொல்லப்படும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பெய்த பெருமழையில் அவர்களது குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளமையும், அடிப்படை வசதிகள் எதுவும் அற்று தற்காலிக கழிவறைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வாழ்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக