சனி, 29 ஆகஸ்ட், 2009

உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்:
ஸ்டாலின் வேண்டுகோள்



உடல் உறுப்பு தான உறுதிமொழி படிவத்தில் முதலாவதாகக் கையெழுத்திடுகிறார் துர்காவதி ஸ்டாலின். உடன் (இடமிருந்து) மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ்,
சென்னை, ஆக. 28: தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதை கடமையாகக் கருத வேண்டும் என்று துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் தன்னார்வ உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கத்தை ("மோட்' - "மியாட் ஆர்கன் டிரைவ்') அவர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து மேலும் பேசியதாவது:-""உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது பண்டைய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. குறிப்பாக "கண்ணுக்கு கண்ணே மருந்து' என இரு கண்களை தானமாக அளித்த கண்ணப்ப நாயனாரின் வரலாறு அனைவருக்கும் தெரியும்.இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவரின் உறுப்பை மற்றவருக்குப் பொருத்தும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன."மியாட்'-டுக்குப் பாராட்டு: உடல் உறுப்பு தானத்தில் உலகத்துக்கு முன்னோடியாக விளங்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் "மோட்' எனும் தன்னார்வ உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம்.தமிழக அரசின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த இயக்கத்தை நிறுவியுள்ள "மியாட்' மருத்துவமனையைப் பாராட்டுகிறேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் மாற்று உறுப்பு தேவை என்று காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ இது போன்ற தான இயக்கங்கள் வளர வேண்டும்.மனைவிக்கு சபாஷ்: இந்த நிகழ்ச்சியில் உடல் உறுப்புகளை முதலாவதாக தானம் செய்ய முன் வந்த என் மனைவி துர்காவதியை, மனைவியாகப் பெற்றதில் மிகுந்த பெருமை அடைகிறேன். அவரைப் பின்பற்றி நானும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்துள்ளேன்'' என்றார் ஸ்டாலின்.
கருத்துக்கள்

துணை முதல்வருக்கும் அவருக்கு முன்னோடியான அவரது துணைவியாருக்கும் பாராட்டுகள். அரசே உடலுறுப்புக் கொடையை ஓர் இயக்கமாக நடத்தலாம். உறுப்புக் கொடை அளிக்கப் பதிவு செய்வோருக்கே கட்சியில் பொறுப்புகள் அளிக்கப்படும் எனக் கட்சித் தலைமைகள் அறிவிக்கலாம். தினமணி மாதிரி விண்ணப்பப்படிவத்தை வெளியிட்டு வாசகர்கள் பதிவு செய்து கொள்ள வழிகாட்டலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2009 3:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக