ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு - 84 :
ஆபரேஷன் பூமாலை!



இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், அரசியல் கட்சித் தலைவரின் நடவடிக்கைகள், தமிழக அரசின் நெருக்குதல் ஆகிய எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை ராஜீவ் காந்தி அரசு மேற்கொண்டது. ஏக காலத்தில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதையொட்டி, அந்தப் பகுதியில் இந்திய கடற்படையின் ரோந்துப் படகுகள் சுற்றிவர ஆரம்பித்தன. அதுமட்டுமின்றி, ராமேஸ்வரத்தின் பயன்பாடற்ற விமானதளம் மீண்டும் செப்பனிடப்பட்டு, அங்கு ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல ஆரம்பித்தன. இது குறித்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் கூறுகையில், ""அண்டை நாடுகள் பிறநாடுகளில் பெற்றுள்ள அதிநவீன உளவுத் தகவல்கள், அந்நாடுகள் பெற்றுள்ள நவீன ஆயுதங்கள் -தளவாடங்களுக்கேற்ப இந்தியாவும் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது'' என்று குறிப்பிட்டார். உடனே ஜெயவர்த்தனா, யாழ்ப்பாண "ஆபரேஷன் லிபரேஷன்' நடவடிக்கையினால் பெருமளவில் குண்டுகள் வீசப்படவில்லை என்றும், அங்கு மக்கள் அதிகம் பாதிக்கவில்லை என்றும், இது உண்மை என்பதை நிரூபிக்க வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தூதர்களை விமானத்தில் ஏற்றி, அந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகவும் தெரிவித்தார். இதற்கு உடன்பட்ட பத்திரிகையாளர்கள் விமானத்தில் ஏறி யாழ்ப்பாணப் பகுதியைப் பார்வையிடச் சென்றார்கள். அவர்கள் பார்வைக்கு படும்படியான தூரத்தில் விமானம் பறக்கவில்லை. விமானிகளுக்கு மூவாயிரம் அடிக்கு மேலாக பறக்க வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு இலவச விமானப் பயணம் பொழுதுபோக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி அமைந்தது. இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுத் தூதரும் இந்தப் பயண ஏற்பாட்டில் பங்குபெற விரும்பவில்லை. இந்தச் சமயத்தில் அமைதியை விரும்பும் சிங்களக்குழு ஒன்றின் தமிழ்நாட்டு வருகையையொட்டி, கூட்டம் ஒன்றுக்கு, சென்னை கிறிஸ்தவ மகளிர் அணியின் சென்னை அலுவலகத்தில் அதன் செயலாளர் சாரா சந்தா எற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு சந்திரஹாசன், ஈழவேந்தன், மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஆகிய மூவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாரா சந்தாவும் மறவன்புலவு க.சச்சிதானந்தமும் பழம்பெரும் அரசியல்வாதியும் மாநில-மத்திய அமைச்சரவையில் பல்வேறு இலாகாக்களின் அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்த சி.சுப்ரமணியத்தைச் சந்தித்தனர். அப்போது, அவருடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ரெசிடண்ட் எடிட்டராக பொறுப்பிலிருந்த ராஜ்மோகன் காந்தியும் உடனிருந்தார். இலங்கையின் பொருளாதாரத் தடையை நீக்க வகை செய்ய சாராவும் சச்சிதானந்தமும் வலியுறுத்தினர். அப்போது சி.சுப்பிரமணியம், ""நானும் ராஜ்மோகன் காந்தியும் இதுபற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்'' என்றார். அப்போது சச்சிதானந்தன், ""நாங்கள் உணவு-மருந்து பொருள்களைத் திரட்டித் தருகிறோம். நீங்கள் இந்திய கப்பற்படைப் பாதுகாப்புடன், காங்கேசன்துறை துறைமுகம் வரை கொண்டுசெல்ல கப்பல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தால், அது பல பிரச்னையைத் தீர்க்கும்'' என்றார். உடனே, சி.சுப்பிரமணியம், ராஜீவ் காந்தியைப் போனில் தொடர்புகொண்டு, ""யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை நீக்க வழிகாண வேண்டும். பல வழிகள் அதற்கு இருக்கின்றன. என்னைப் பார்க்க வந்துள்ளவர்கள், உணவுப்பொருள்களை ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறை செல்ல ஒரு கப்பலும் அதற்குப் பாதுகாப்பும் கேட்கிறார்கள்'' என்றார். தொடர்ந்து இருநாள்கள் கழித்து சாரா சந்தாவுக்கு ஏதேனும் நல்லது நடக்க, வாய்ப்பிருக்கிறதா பார்ப்போம் என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார். எனவே, இந்திய அரசின் அனுசரணையில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கை என்ற பெயரில் 38 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களுடன் 19 மீன்பிடிப் படகுகள் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டனர். இந்த மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையின் வட எல்லை கடற்பிராந்தியத்திலேயே, கடற்படையால் மடக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன. இந்த நடவடிக்கையால் கோபமடைந்த இந்திய அரசு, அடுத்த கட்ட நடவடிக்கையாக பெங்களூர் விமான தளத்திலிருந்து ஐந்து விமானங்களில் உணவுப் பொட்டலங்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு மிராஜ் -2000 என்ற நான்கு போர் விமானங்களில் பாதுகாப்புடன் இலங்கையின் வான்வெளியில் நுழைந்து, உணவுப் பொட்டலங்கள் பாராசூட் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் இறக்கியது. கூடவே இந்திய மற்றும் வெளிநாட்டு நிருபர்கள் 35 பேரும் இவ்விமானத்தில் பயணம் செய்தனர். 1987 ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற இந்த நடவடிக்கை "ஆபரேஷன் பூமாலை' என்று பெயரிடப்பட்டிருந்தது. "ஆபரேஷன் லிபரேஷன்' செய்கையால் உரம் பெற்றிருந்த ஜெயவர்த்தனா, "ஆபரேஷன் பூமாலை' நடவடிக்கையால் கலங்கிப் போனார். இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கையைப் பாராட்டி விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்தார். இதன்மூலம் தெற்காசியாவில் இந்தியாவின் மேலாட்சியையும் தான் ஒரு வல்லரசு என்பதையும் இந்தியா நிரூபித்ததாக இலங்கைப் பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்தன. ""இலங்கை வான் எல்லையில் இந்தியா அத்துமீறி நுழைந்தது. முற்று முழுதாக இது அத்துமீறல் என்றும், இன்று உணவுப் பொட்டலம், நாளை குண்டு வீச்சா'' என்று கூக்குரலிட்டன. ஜெயவர்த்தனாவும் தான் கருத்து சொல்ல விரும்பாமல், தனக்கு ஆதரவுப் பத்திரிகைகள், புத்தபிக்குகளை விட்டு பெருமளவில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மீண்டும் முடுக்கிவிட்டார். அடுத்த நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் (இந்தியா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்), "இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பக்கமே இந்தியா இருக்கிறது' என்றும் "அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடும் இந்தியாவுக்கு இருக்கிறது' என்றும் தெரிவித்தார். இலங்கை அதிகாரிகள் ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து உறுப்பினர் நாடுகளின் ஒன்றைக்கூட தனக்குச் சாதகமாக்கி, இப்பிரச்னையை உலக அளவில் எழுப்ப முடியவில்லை. ஐரோப்பிய நாடுகளை இலங்கை அணுகியபோது, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் குழுமம் (உன்ழ்ர்ல்ங்ஹய் உஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீ இர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் உஉஇ) இனப் பிரச்சினையை சுமுகமான முறையில் பேசித் தீர்க்க வழிகாணுமாறு அறிவுறுத்தியது. ஜெயவர்த்தனா இதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்.நாளை: நெல்லியடித் தாக்குதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக