மதுரை, ஆக. 26: இலங்கையில் தொடரும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தினார். மதுரையில் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் 13-வது மாநில மாநாட்டையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கு இன அழிப்பை ராஜபட்ச அரசு தொடர்ந்து வருகிறது. இலங்கையில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் உணவு, மருந்து, சுகாதார வசதிகள் இன்றி தவிக்கின்றனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண விரும்பாத அதிபர் ராஜபட்ச தலைமையிலான அரசு அங்கு இன அழிப்பைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்காக இந்திய அரசு ரூ.500 கோடி நிதியுதவி அளித்துள்ளது. ஆனால் அவை அவர்களுக்கு சென்று சேர்ந்ததா என்பது தெரியவில்லை. இலங்கைத் தமிழர்கள் இன்னும் 180 நாள்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ராஜபட்ச உறுதி அளித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். ஆனால், அவர் சொல்லும் 180 நாள் எப்போது தொடங்குகிறது, எப்போது முடிகிறது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்படவில்லை என்றார். பேரணி: முன்னதாக சமச்சீர் கல்வி எனது பிறப்புரிமை எனும் பொருளில் மாணவர் மன்றம் சார்பில் பேரணி நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக