புதன், 26 ஆகஸ்ட், 2009
சென்னை, ஆக.25: ஆண்- பெண் இரு பாலரும் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ் பெற்ற பிறகே திருமண முடிவுக்கு வரும் வகையில் சட்டப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என நடிகை மனோரமா தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் நேரில் மனு கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்மைத் தன்மை இல்லாத வாலிபர்களுக்கு அப்பாவி இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வைப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. "எய்ட்ஸ்' போன்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இளம் பெண்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் இளம் தம்பதியர் திருமண முறிவு குறித்த செய்திகள் அன்றாடம் வெளிவருகின்றன. வாலிபர்களின் பெற்றோர்கள் பண ஆசை கொண்டு அலைவதே இதற்கு முக்கியக் காரணம். மகனின் பலவீனத்தை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்க முயற்சிப்பதும் ஒரு காரணம். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி இளம் பெண்கள்தான். பொன், பொருள்களை இழப்பதோடு உயிரிழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. எனவே, திருமணத்துக்கு முன்பு ஆண்- பெண் இரு பாலரும் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ் பெற்ற பிறகே திருமண முடிவுக்கு வரவேண்டும் என சட்டப்பூர்வமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

50 ஆண்டுகளுக்கு முன்பே பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், 'சாதகம்' பார்த்து வாழ்க்கையை வீணடிக்காமல் மருத்துவ ஆய்வு செய்து மணம் முடியுங்கள் என்றார். அது போல் இன்றைக்கு மனோரமா அவர்களும் குரல் கொடுத்திருப்பது வரவேற்கத் தக்கது. பல சமூகச் சீர்திருத்தச் சட்டங்களை இயற்றியுள்ள தி.மு.க. அரசு இதனையும் விரைவில் சட்டமாக்கி இருபால் இளைஞர்களுக்கும் நல்ல மணவாழ்க்கை அமைய வழி வகுக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/26/2009 4:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக