1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன. 1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர். தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது. கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர். புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர். 1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார். "தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்' என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர். இந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது. இதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது. "தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை' என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். "பயங்கரவாதத்தை ஒழிப்போம்' என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார். ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர். கொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன. நாளை: விடுதலைப் புலிகளின் பதிலடி!
கருத்துக்கள்
Tamil freedom fighters are sacrificied their life for tamils. India supported Singalise to kill tamils. Indian business people want to do business in Sri Lanka so they tried to eliminate LTTE. Indian Business people are man eating animals, they will do anything for money. Tamils are daily killed and tortured by Singalise but India is not allowing the world to take action against Singalise. India is a main reasons for tamils killings. Karunanedhi, Sonia are man eating animals, God should punish this animal families.
By David
8/28/2009 1:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
8/28/2009 1:01:00 AM