பெங்களூர், ஆக. 22: மண்டியா மாவட்டம் முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது என்று அறிவித்துவிட்டு, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டிருப்பது சரியல்ல என்று சட்டப்பேரவை மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார். பெங்களூரில் சனிக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: வறட்சி குறித்து கர்நாடக அரசு சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கர்நாடகத்தில் 20 மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் 3.5 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நாசமடைந்துவிட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவில் குறிப்பிட்ட முக்கிய அம்சம் காவிரி பாசன பகுதியில் உள்ள மண்டியா மாவட்டம் முழுவதுமே வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிட அம்மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். காவிரியில் தமிழகத்துக்கு ஜூன் மாதம் 4.9 டிஎம்சி, ஜூலையில் 38.71 டிஎம்சி, ஆகஸ்டில் இதுவரை 24.20 டிஎம்சி தண்ணீர் விடப்பட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை 67 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நடுவர் மன்ற உத்தரவுப்படி கர்நாடகம் 76 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் இவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதே சரியல்ல. மாவட்டமே வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கும் நிலையில், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால் விவசாயிகள் கொதித்துப்போய் உள்ளனர். இவ்வாறு தண்ணீர் திறந்துவிடும் முன் அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அரசு பேசியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு பேசாமல், நமது விவசாயிகளுக்குப் போதிய தண்ணீர் உள்ளது. கூடுதலாக வரும் தண்ணீரைத்தான் தமிழகத்துக்குத் திறந்துவிடுகிறோம் என்று அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியிருப்பது ஏற்கத் தக்கது அல்ல. காவிரியில் தண்ணீர் கேட்டு கர்நாடகத்தை வலியுறுத்தும் தமிழகம், சிவனசமுத்திரம் மின் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ள தமிழக முதல்வரை பெரிய அண்ணன் என்றும், தன்னை சின்ன தம்பி என்றும் எடியூரப்பா அழைத்து உள்ளார். அதுபற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. இருப்பினும் தமிழகத்தின் போக்கை முதல்வர் எடியூரப்பா புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கருத்துக்கள்
சின்னத்தம்பியும் பெரிய அண்ணனும் என்ன சொல்லப் போகிறார்கள்? நாய் வாலை நிமிர்த்தினாலும் கன்னடர்களின் வெறிப்போக்கை மாற்ற முடியாதே! மாநிலங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி ஒருமைப்பாட்டிற்கு உலை வைப்போரை மத்திய அரசு காலவரையறை இன்றிச் சிறையில் தள்ளட்டும்! மாறாக மனித நேயம் கொண்டு கோரிக்கை வைப்பவர்கள்மீது வழக்கும் சிறைவைப்பும் என்னும் போக்கில்தானே அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
அன்புடன் இலககுவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/23/2009 3:29:00 AM
8/23/2009 3:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்