பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஓடையை சுத்தம் செய்தபோது கண்டெடுக்கப்பட்ட பழங்கால கற்சிலையை மக்கள் சுத்தம் செய்து பாதுகாத்து வருகின்றனர்.பொள்ளாச்சியை அடுத்த நாட்டுக்கல்பாளையம் வழித்தடத்தை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக சுத்தப்படுத்தி வருகின்றனர்.
ரோட்டை ஒட்டியுள்ள ஓடையை சுத்தம் செய்தனர். நேற்று முன்தினம் அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள், மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் சுவாமி சிலையை பார்த்துள்ளனர். கிராம மக்கள் திரளாக சென்று சுவாமி சிலை மீது இருந்த மண்ணை அகற்றியுள்ளனர். ஐந்து பேர் சேர்ந்து கூட தூக்க முடியாத அளவுக்கு அதிக எடையுடன் இருந்த அந்த சுவாமி சிலையை, டிராக்டரில் ஏற்றி ஊராட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று, தண்ணீர் தொட்டியில் வைத்தனர்;
நாட்டுக்கல்பாளையம் ஊராட்சித் தலைவர் முத்துலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மக்கள் கூறுகையில், ""நாட்டுக்கல்பாளையத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக ஓடை அருகில் இருந்த கோவில்கள் அழிந்து விட்டதாக கேள்விப்பட்டிருக்கிறோம். கண்டெடுக்கப்பட்டுள்ள சுவாமி சிலையில், ஒரு கரத்தில் கத்தியும், மற்றொரு கரத்தில் சக்கரமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. காவல் தெய்வத்திற்குரிய சிலையாக இருக்கலாம்,'' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக