வியாழன், 27 ஆகஸ்ட், 2009


இலங்கைத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியும் இப்போதைய கூட்டுப்படை தலைமைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை அதிபர் இராசபக்சே மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறார். இருவருக்குமிடையே மோதல் வலுத்து வருகிறது.

இலங்கைத் தரைப்படையின் தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா போர் வெற்றிக்குப் பிறகு - அவரைப் பாராட்டும் வகையில் - ஜெனரல் என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டார். அதைப் போல கடற்படை, விமானப்படைத் தளபதிகளுக்கும் தகுதி உயர்த்தப்பட்டது.

ஆனால் திடீரென பொன்சேகாவை தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கூட்டுத் தலைமைத் தளபதியாக இராசபக்சே நியமித்தார். வெளிப்படையாகப் பார்த்தால் இது தகுதி உயர்வு போல தோன்றுமே தவிர, உண்மையில் எவ்வித அதிகாரமும் இல்லாத பதவியில் பொன்சேகா உட்காரவைக்கப் பட்டார். இராசபக்சேவின் நம்பிக்கைக்குரிய இன்னொரு வர் தரைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். கூட்டுப்படைகளின் தளபதி என்ற முறையில் வெறும் ஆலோசனைகளை மட்டுமே பொன்சேகா வழங்க முடியும். நேரடியான உத்தரவுகள் எதையும் அவரால் பிறப்பிக்க முடியாது. இது ஒரு பொம்மைப் பதவி.

கடந்த போர் வெற்றிக்குப் பிறகு சிங்கள மக்கள் மத்தியில் பொன்சேகாவிற்கு மிகப்பெரிய வரவேற்பும் மதிப்பும் கூடியது. இதை இராசபக்சே சகோதரர்கள் விரும்பவில்லை. அவரை அப்படியே விட்டுவிட்டால் இராணுவப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற முயலலாம் அல்லது அடுத்த தேர்தலின் போது இராசபக்சேவிற்கு எதிராகப் போட்டியிடலாம் என அஞ்சினார்கள். எனவேதான் அவருக்கு தகுதி உயர்வு அளிக்கிறோம் என்ற பெயரில் அதிகாரமில்லாத பொம்மை பதவியில் உட்காரவைத்துவிட்டனர். ஏற்கனவே தெற்காசிய நாடுகளில் மியான்மார், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்றவற்றில் இராணுவத் தளபதிகள் திடீர் புரட்சிகள் நடத்தி ஆட்சியைக் கைப்பற்றியதைப் போல இலங்கையிலும் நடந்து விடக்கூடாது என்பதில் இராசபக்சே மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்.

இதைக் கண்டு மனம் வெறுத்துப்போன பொன்சேகா நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தனக்கு எதிரான அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை இராசபக்சே திட்டமிட்டு படுகொலை செய்ததற்கு பொன்சேகாவும் உடந்தையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே தற்போது தன்மீது பொறாமை கொண்டிருக்கும் இராசபக்சே தன்னையும் தீர்த்துக்கட்ட முயலலாம் என்ற அச்சமும் பொன்சேகாவிற்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவுக்குத் தப்பிச்செல்ல அவர் வகுத்துள்ள திட்டத்தை நிறைவேற்ற இராசபக்சே அனுமதிப்பாரா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும்.

பொன்சேகா மட்டுமல்ல, இலங்கை கடற்படையின் தலைமைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்தா கருணாகோடா என்பவரும் திடீரென இலங்கை நெடுஞ்சாலைத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுவிட்டார். யாழ்ப்பாணத்தின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறீ என்பவர் வடக்கு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டுவிட்டார்.

மற்றொரு முக்கியத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் என்பவர் ஜெர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இணைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் அரத்சோயா என்பவர் இலங்கை பெட்ரோலிய வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைப் பீரங்கிப் படையின் தளபதியாக இருந்த வி.ஆர். சில்வா என்பவர் இலங்கை சிறைக்கான ஆணையாளராக நியமிக்கப் பட்டுள்ளார். பிரிகேடியர் உதயபெரிரா என்பவர் மலேசியாவுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் அண்மையில் நடைபெற்ற போரில் வெற்றிக்குக் காரணமான தளபதிகள் அனைவருக்குமே பதவி உயர்வு அல்லது வெளிநாடு களில் பதவி கொடுத்து இராசபக்சே ஓரங்கட்டிவிட்டார் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இராசபக்சேவின் இந்த நடவடிக்கையின் விளைவாக பொன்சேகாவும் மற்ற முக்கிய இராணுவத் தளபதிகளும் அதிர்ச்சியும் கொதிப்பும் அடைந்திருக்கிறார்கள். இராணுவத்தின் கீழ்மட்டத்தில் உள்ள வீரர்களும் இதை விரும்பவில்லை. அவர்களும் ஆத்திரமும் கோபமும் அடைந்திருக்கிறார்கள். ஆனால் யாரையும் சட்டை செய்வதற்கு இராசபக்சே தயாராக இல்லை.

இலங்கையில் இராணுவப் புரட்சி வெடிக்கும் அபாயம் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. அப் பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த பொன்சேகாவும் மற்ற அதிகாரிகளும் வீரர்களும் இராசபக்சேவிற்கு எதி ராக இரகசியமாக அணிதிரண்டு வருவதாகக் கூறப் படுகிறது. தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களர்கள் இனி தங்களுக்குள் மோதிக்கொள்ளப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

நன்றி: தென்செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக