செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

பெருமையான காலம் அது: எம்.என்.ராஜம்



தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரான நடிகை எம்.என். ராஜம் நடிகர் சங்க நிர்வாகிகளால் கௌரவிக்கப்பட்டார். அப்போது அவர் பேசியது: ""தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதல் பெண் உறுப்பினராகச் சேர்ந்த என்னை இன்றைக்கு அழைத்து கௌரவப்படுத்துவதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு பழைய நடிகையை அழைத்துப் பாராட்டும் விஷயம் பாராட்டத்தக்கது. எனக்கு ஏழு வயது இருக்கும் போது மதுரையில் இயங்கி வந்த பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நடிக்க ஆரம்பித்தேன். அது அப்போது கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கு குரு குலம் மாதிரி இருக்கும். நடிப்புடன் கல்வியையும் சொல்லிக் கொடுத்தார்கள். சிவாஜி, கே.ஆர்.ராமசாமி, டி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், காக்கா ராதாகிருஷ்ணன், வி.கே.ராமசாமி உள்ளிட்ட புகழ் பெற்ற நடிகர்கள் அந்த குரு குலத்தில் இருந்தார்கள். எப்படிப் பேசுவது? எப்படிப் பாடுவது? எப்படிச் சிரிப்பது? எப்படி அழுவது? எப்படி நடப்பது? போன்ற அனைத்தையும் அங்கு சொல்லிக் கொடுப்பார்கள். நடிகைகள் சராசரி பெண்களைப் போல் சிரிக்கக் கூடாது. நடிகைகளின் சிரிப்புகளுக்கென்று தனி பாணி உள்ளது. நடக்கும் போது நளினமாக நடக்க வேண்டும். பார்க்கும் போது பணிவுடன் பார்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி கொடுத்தார்கள். அவர்களின் போதனைகளால் சின்னச் சின்ன விஷயங்கள் கூட புத்துயிர் பெறும். "பாய்ஸ்' கம்பெனி நடிகைகளில் இப்போது நான் மட்டும்தான் இருக்கிறேன். சத்தியபாமா கல்லூரியில் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். என்னுடன் விஞ்ஞானி, டாக்டர், அரசியல்வாதிகள் எல்லோரும் டாக்டர் பட்டம் பெற்றார்கள். அவர்களுடன் நடிகையான எனக்கும் டாக்டர் பட்டம் கொடுத்தது பெருமையாக இருந்தது. அதற்கு கலைதான் காரணம். அப்போதெல்லாம் தினமும் படப்பிடிப்புகள் இருக்கும். நடித்துக் கொண்டே இருப்போம். நடிகர்களுக்கு விடுமுறை இல்லை என்று நினைத்து அப்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவியாக இருந்த நடிகை அஞ்சலிதேவி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை படப்பிடிப்புகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டார். அன்றுதான் எங்களுக்கெல்லாம் விடுமுறை. பின் "கலைவாணர் தினம்' என்ற ஒரு நாளை வருடத்திற்கு ஒரு நாள் கொண்டாடுவோம். அந்த நாளை நடிகர் சங்க வளாகத்தில் கலை உலகமே -உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மறந்து கொண்டாடும். விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் நடத்தப்படும். ஒரு முறை நடிகைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் சாவித்ரி, பத்மினி, அஞ்சலிதேவி, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டு ஓடினார்கள். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகியோர் இருந்தார்கள். போட்டி முடிந்த பின்னர் நடுவர்களாக இருந்தவர்கள் "கப் சிப்' என அமர்ந்திருக்கிறார்கள். யார் முதலில் வந்தது என்பதை சிவாஜி இப்படி அறிவிக்கிறார்.... சாவித்ரி முதலில் வந்தார். அஞ்சலிதேவி இரண்டாவதாக வந்தார். பத்மினி மூன்றாவதாக வந்தார் இவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டு வந்த ராஜம், கே.ஆர்.விஜயா போன்றவர்கள் கடைசியாக வந்தார்கள் என்றார். அங்கிருந்த நடிகர் நடிகைகள் எல்லாம் மனம் விட்டு சிரித்த காலங்கள் அது. அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும் போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக