வியாழன், 27 ஆகஸ்ட், 2009

பாழடைந்த நிலையில் பழம்பெரும் கோயில்



பாழடைந்த நிலையில் உள்ள 50 அடி உயர ஊஞ்சல் மண்டபம்.
நெய்வேலி, ஆக. 26: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வெங்கடாம்பேட்டையில் உள்ள 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ வேணுகோபாலசாமி கோயில் சிதிலமடைந்து புனரமைக்கப்படாமல் உள்ளது. கி.பி. 1464 முதல் முதல் 1478-ம் ஆண்டு வரை வேங்கடபதி நாயக்கரின் ஆட்சியின் போது, வெங்கடாம்பேட்டை கிராமம் இருந்துள்ளது. இதை பிரெஞ்சுக்காரர்கள் கி.பி. 1478-ம் ஆண்டு வெங்கட்டம்மாள் எனும் இவ்வூரை புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களுக்கு மானியமாக விட்டதாகக் கூறப்படுகிறது. தெலுங்கு அரசர்களின் பெண்டிர் பெயரால் அமைக்கப் பெற்ற இவ்வூரில் கருங்கற்களால் கட்டப்பட்ட இத் திருக்கோயிலில் மூலஸ்தானத்தில் ஸ்ரீ வேணுகோபாலன், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் சமேதராக காட்சி அளித்த அருள் பாலிக்கின்றார். கிழக்கு மேற்கில் 236 அடி நீளமும், தெற்கு வடக்கில் 129 அடி அகலமும் கருங்கல் சுவர் அமைந்துள்ளது. அதனுள் செங்கமலத்தாயார், ஆண்டாள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. வாயிலின் முன் 7 நிலைக் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. தென்புறம் ஏழுதலை பாம்பின் மீது 18 அடி நீளத்தில் பெருமாள் சயனம் கொண்டு காட்சி அளிக்கின்றார். கோயிலின் எதிர்ப் புறத்தில் 50 அடி உயரத்தில் மிகப் பெரிய கருங்கல் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒரு யானை மண்டபமும், தேர் மண்டபமும், ஒரு ஏக்கர் பரப்பளவில் 7 கிணறுகளுடன் கூடிய தீர்த்தக் குளம் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மன் வாழ் தமிழரான வி.எ.எஸ்.பாஸ்கர சுவாமிகள் தனது சொந்த செலவில் கோயிலில் சில புனரமைப்பு வேலைகளைச் செய்து அண்மையில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இருப்பினும் கோயிலின் ராஜகோபுரம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஸ்ரீ ரங்கத்தைக் காட்டிலும் இங்குள்ள அனந்த சயன ராமர் ஏழு தலைகள் கொண்ட பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் காட்சி வேறு எங்கும் காண முடியாது. சிவனைக் காப்பாற்ற கிருஷ்ண பகவான் மோகினி அவதாரம் எடுத்ததாகக் புராணக் கூற்றுக்கு ஏற்ப மோகினி அவதாரத்துடன் கூடிய கிருஷ்ணர் சிலை உடைந்த நிலையில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இக் கோயிலில் அரிய பல புராணக் கதைகள் அடங்கியுள்ளன. தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருப்பதால், அரசு இக்கோயிலை புதுப்பித்து, இதன் புராணக் கதைகளை இக்கால இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லவேண்டியது அவசியம். இக்கோயில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நகரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், பண்ருட்டி நகரில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் உள்ளது. பஸ் வசதியை பொறுத்தவரை டவுன்பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இக்கோயில் புனரமைக்கப்பட்டால் இக்கிராமம் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக